» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
தூத்துக்குடி வர்த்தகச் சங்கத்தில் வேட்பாளர்கள் சங்கமம்: திமுக, அதிமுக, தவெக வாக்குறுதிகள்
சனி 11, ஏப்ரல் 2026 12:43:30 PM (IST)

தூத்துக்குடி அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத்தின் சார்பில், "2026 சட்டமன்றத் தேர்தல்" என்ற தலைப்பில் வேட்பாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் பங்கேற்ற சிறப்பு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
சங்கத் தலைவர் சங்கர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் கலந்துகொண்டு தூத்துக்குடி மாநகரின் வளர்ச்சிக்கான தங்களது தேர்தல் வாக்குறுதிகளை முன்வைத்தனர்.
அமைச்சர் பி. கீதா ஜீவன் (திமுக):
தனது கடந்த காலச் சாதனைகளைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், வர்த்தகம் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்தப் பல திட்டங்களைப் பட்டியலிட்டார்:
- மீன்பிடித் தொழிலை மேம்படுத்த திரேஸ்புரம் கடற்கரையில் 3 'பிங்கர் ஜெட்டி' பாலங்கள் மற்றும் தூண்டில் பாலங்கள் விரிவாக்கம்.
- ரூ.144 கோடியில் தூத்துக்குடி மீன்பிடி துறைமுக விரிவாக்கம்.
- சுற்றுலாவை மேம்படுத்த முத்துநகர் கடற்கரையிலிருந்து முயல் தீவுக்குப் படகு போக்குவரத்து.
- தொழிற்துறைக்கு உதவும் வகையில் புதிய சிப்காட் மற்றும் தமிழ்நாடு ஹோட்டல் கட்டுதல்.
- கலெக்டர் அலுவலகத்தில் தடையின்மை சான்றிதழ் பெறுவதில் உள்ள காலதாமதங்கள் சரிசெய்யப்படும் என உறுதி அளித்தார்.
அதிமுக வேட்பாளர் செல்ல பாண்டியன்:
மத்திய அரசுடன் இணக்கமான உறவைப் பேணித் திட்டங்களைச் செயல்படுத்துவதாகக் குறிப்பிட்ட அவர் தெரிவித்தவை:
- முடங்கிக் கிடக்கும் வெளித் துறைமுகத் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும்.
- மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 1 மற்றும் 2-வது ரயில்வே கேட்டுகளில் சுரங்கப்பாதைகள் மற்றும் 'விவிடி' மேம்பாலம் கட்டி முடிக்கப்படும்.
- மாநகராட்சியின் 300% வரி உயர்வை எடப்பாடியார் மூலம் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் மாற்றுத் திட்டங்கள் பரிசீலிக்கப்படும்.
தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளர் ஸ்ரீநாத்:
இளைஞர்களின் ஆதரவுடன் களம் காண்பதாகக் குறிப்பிட்ட அவர் முன்வைத்த திட்டங்கள்:
- தூத்துக்குடி - இலங்கை இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்தைத் தொடங்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும்.
- பல ஆண்டுகளாகக் கிடப்பில் உள்ள 'ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்' திட்டத்தை முன்னெடுப்பேன்.
- தான் வெளியூர்க்காரன் என்ற விமர்சனத்திற்குப் பதிலளித்த அவர், தானும் தனது மனைவியும் தூத்துக்குடி மண்ணைச் சேர்ந்தவர்களே என்று தெளிவுபடுத்தினார்.
இந்தக் கலந்துரையாடலில் சங்கத்தின் முன்னாள் தலைவர் டி.ஆர். தமிழரசு, செயலாளர் சுரேஷ்குமார், துணைத் தலைவர்கள் சேசையா வில்லவராயர், பிரேம் பால் நாயகம், மற்றும் செந்தில் ஆறுமுகம், விவேகம் ரமேஷ் உள்ளிட்ட ஏராளமான ஏற்றுமதி - இறக்குமதியாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் கலந்து கொண்டு வேட்பாளர்களிடம் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கை: வாக்குப்பதிவு அதிகரிப்பு குறித்து பாஜக வரவேற்பு!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 11:44:05 AM (IST)

தமிழக தலைமைச் செயலாளர் அதிரடி மாற்றம்: புதிய தலைமைச் செயலாளர் நியமனம்
புதன் 8, ஏப்ரல் 2026 4:21:36 PM (IST)

கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின், பெரம்பூரில் விஜய் வேட்புமனுக்கள் ஏற்பு!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 11:48:16 AM (IST)

சிறுபான்மையின தொண்டு நிறுவனங்களைக் குறிவைப்பதா? - மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்!
வியாழன் 2, ஏப்ரல் 2026 12:01:05 PM (IST)

வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 2 நாட்களே.. காங்கிரஸ், பாஜக வேட்பாளர் தேர்வில் இழுபறி!
வியாழன் 2, ஏப்ரல் 2026 11:40:02 AM (IST)

கொளத்தூரில் ஸ்டாலின், காரைக்குடியில் சீமான்: முதல் நாளிலேயே 560 மனுக்கள் தாக்கல்!
செவ்வாய் 31, மார்ச் 2026 8:21:58 AM (IST)

