» சினிமா » செய்திகள்

நகைச்சுவை நடிகர் போண்டா மணி மரணம் : திரையுலகினர் அஞ்சலி

திங்கள் 25, டிசம்பர் 2023 10:43:41 AM (IST)

பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி நேற்று மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்.

பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி. இவர் கடந்த ஒரு வருடமாக சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இரண்டு சீறுநீரகங்களும் செயல் இழந்த நிலையில் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். தனக்கு உதவும்படி திரையுலகினருக்கு கோரிக்கை விடுத்தார். இதையடுத்து நடிகர்கள் பலர் அவருக்கு பண உதவி செய்தனர்.

சிகிச்சைக்கு பிறகு சென்னை பல்லாவரம் பொழிச்சலூரில் உள்ள வீட்டில் ஓய்வு எடுத்து வந்த நிலையில் நள்ளிரவு திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். போண்டா மணியை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவருக்கு வயது 60.

போண்டா மணி மறைவுக்கு நடிகர் நடிகைகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். திரையுலகினர் பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இலங்கை தமிழரான போண்டா மணி 1991-ல் பாக்யராஜ் நடிப்பில் வெளியான பவுனு பவுனுதான் என்ற படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர். சுந்தரா டிராவல்ஸ், கோயம்புத்தூர் மாப்ளே, மருதமலை, வசீகரா, ஏய், வின்னர், வேலாயுதம், ஜில்லா உள்பட 250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கண்ணும் கண்ணும் என்ற படத்தில் வடிவேலுவிடம், ‘அண்ணே போலீஸ்காரங்க வருவாங்க எதுவும் சொல்லிடாதீங்க. அடிச்சுகூட கேட்பாங்க அப்பவும் எதுவும் சொல்லிடாதீங்க’ என்று பேசி விட்டு குளத்தில் மூழ்கி செல்லும் நகைச்சுவை காட்சி ரசிகர்கள் மத்தியில் பிரபலம்,மரணம் அடைந்த போண்டா மணிக்கு மனைவியும் ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி இரங்கல்

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘அ.தி.மு.க. நட்சத்திரப் பேச்சாளரும், நகைச்சுவை நடிகருமான போண்டா மணி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.போண்டா மணியை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory