» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கில், இஷான் கிஷன் சதம்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது இந்தியா!

வியாழன் 18, ஜூன் 2026 8:32:03 AM (IST)



ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது பகல்-இரவு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷனின் அதிரடி சதங்களின் உதவியோடு இந்திய அணி 170 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், இந்திய அணியில் நிதிஷ்குமார் ரெட்டி, பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷ் துபே ஆகியோர் நீக்கப்பட்டு ஜெய்ஸ்வால், குல்தீப் யாதவ் மற்றும் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் பிரின்ஸ் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷகிடி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ஜெய்ஸ்வால் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா அதிரடியாக ஆடி 48 ரன்கள் (39 பந்துகள், 6 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தார். இதன் பின்னர் 3-வது விக்கெட்டுக்கு கேப்டன் சுப்மன் கில்லும், இஷான் கிஷனும் இணைந்து ஆப்கான் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். மைதானத்தின் எல்லைக்கோட்டுக்கு பந்துகளைப் பறக்கவிட்ட இந்த ஜோடி பலத்த அடித்தளம் அமைத்தது. 

கில் பவுண்டரியுடன் தனது 9-வது ஒருநாள் சதத்தை நிறைவு செய்தார். அதே ஓவரில் இஷான் கிஷன் 'ஹாட்ரிக்' பவுண்டரி அடித்து தனது 2-வது சதத்தைக் கடந்தார். இடக்கை சுழற்பந்து வீச்சாளர் நங்கேயலியா கரோட்டியின் ஓவரில் தொடர்ந்து 2 சிக்சர்களைப் பறக்கவிட்ட இஷான் கிஷன், 125 ரன்களில் (79 பந்துகள், 14 பவுண்டரி, 7 சிக்சர்) கேட்ச் ஆகி வெளியேறினார். இ ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 141 பந்துகளில் 224 ரன்கள் திரட்டியது இப்போட்டியின் முக்கிய அம்சமாகும்.

மறுபுறம் நங்கூரமாய் நிலைத்து நின்று ஆடிய சுப்மன் கில், இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 43-வது ஓவரில் கரோட்டியின் பந்துவீச்சில் 'ரிவர்ஸ் ஸ்வீப்' ஷாட் ஆட முயன்று கேட்ச் ஆனார். அவர் 154 ரன்கள் (110 பந்துகள், 22 பவுண்டரி, 2 சிக்சர்) குவித்து ஆட்டமிழந்தார்.

இந்திய அணியின் உலக சாதனை:

இவர்கள் இருவரின் விக்கெட்டுகளுக்குப் பின் இந்திய அணியின் ரன் வேகம் கணிசமாகக் குறைந்தது. ஒரு கட்டத்தில் 450 ரன்களைத் தாண்டும் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி, கடைசி 10 ஓவர்களில் 62 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளையிழந்தது. ஸ்ரேயாஸ் அய்யர் 26 ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் 19 ரன்களிலும் வீழ்ந்தனர். லோகேஷ் ராகுல் ரன் ஏதுமின்றி (டக்-அவுட்) வெளியேறினார்.

முடிவில் இந்திய அணி 49.5 ஓவர்களில் 402 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி 400 ரன்களைக் கடப்பது இது 8-வது முறையாகும். எனினும், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஆல்-அவுட் ஆன ஒரு அணி 400 ரன்களுக்கு மேல் குவிப்பது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் இந்தியா புதிய உலக சாதனை படைத்துள்ளது. ஆப்கானிஸ்தான் தரப்பில் கரோட்டி 4 விக்கெட்டுகளையும், ரஷித் கான் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

ஆப்கானிஸ்தான் சுருண்டது:

அடுத்து 403 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய ஆப்கானிஸ்தான் அணியின் முன்வரிசை வீரர்களான ரமனுல்லா குர்பாஸ் (41 ரன்), இப்ராகிம் ஜட்ரன் (21 ரன்), செடிகுல்லா அடல் (42 ரன்) ஆகியோர் ஓரளவுக்குத் தாக்குப்பிடித்தனர். நடுகள வீரர் ரக்மத் ஷா அதிகபட்சமாக 79 ரன்கள் (89 பந்துகள், 8 பவுண்டரி) எடுத்தார். ஆனால், பின்வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர்.

இதனால் ஆப்கானிஸ்தான் அணி 44.3 ஓவர்களில் 232 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. இதன் மூலம் இந்திய அணி 170 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. இந்தியத் தரப்பில் அர்ஷ்தீப் சிங், குர்னூர் பிரார் தலா 3 விக்கெட்டுகளையும், அறிமுக வீரர் பிரின்ஸ் யாதவ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

ஏற்கனவே முதல் ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்றிருந்த இந்திய அணி, தற்போது தொடரை 2-0 எனக் கைப்பற்றி அசைக்க முடியாத முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் ஜூன் 20-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory