» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கவுகாத்தியில் அபார வெற்றி: இந்திய மண்ணில் வரலாறு படைத்த தென் ஆப்பிரிக்கா!

புதன் 26, நவம்பர் 2025 12:48:38 PM (IST)



25 ஆண்டுகளுக்கு பிறகு தென்ஆப்பிரிக்கா இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் நடைபெற்றது.  தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 489 ரன் குவித்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 201 ரன்னில் சுருண்டு பாலோ ஆன் நிலைக்கு தள்ளப்பட்டது. ஆனால் தென் ஆப்பிரிக்கா பாலோ ஆன் கொடுக்கவில்லை.

288 ரன்கள் முன்னிலையில் தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 260 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் இந்தியாவுக்கு 549 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஸ்டப்ஸ் 94 ரன்னும், சோர்சி 49 ரன்னும் எடுத்தனர். ஜடேஜா 4 விக்கெட் கைப்பற்றினார்.

549 ரன் என்ற கடினமான இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 27 ரன் எடுத்து இருந்தது. ஜெய்ஸ்வால் 13 ரன்னிலும், கே.எல். ராகுல் 6 ரன்னிலும் பெவிலியன் திரும்பினார்கள். சாய் சுதர்சன் 2 ரன்னுடனும், குல்தீப் யாதவ் 4 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் காலை 9 மணிக்கு தொடங்கியது. வெற்றிக்கு மேலும் 522 ரன் தேவை, கைவசம் 8 விக்கெட் என்ற நிலையில் இந்தியா தொடர்ந்து பேட்டிங் செய்தது. 8 விக்கெட்டை வீழ்த்தினால் வெற்றி என்ற நிலையில் தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தொடர்ந்தது.

குல்தீப் யாதவ் 5 ரன்னில் ஹார்மர் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த துருவ் ஜூரல் 2 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அவரது விக்கெட்டையும் ஹார்மர் கைப்பற்றினார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் 13 ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து 6-வது விக்கெட்டுக்கு சாய் சுதர்சனுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார்.

இருவரும் நிதானமாக விளையாடினர். 139 பந்துகள் சந்தித்து 14 ரன்கள் எடுத்த நிலையில் சுதர்சன் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் 16, நிதிஷ் குமார் 0 என வெளியேறினார். ஒருபக்கம் சிறப்பாக விளையாடிய ஜடேஜா அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 54 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்த வந்த சிராஜ் அதே ஓவரில் ஆவுட் ஆக இந்திய அணி 140 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் டெஸ்ட் தொடரை தென்ஆப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஒரு வேளை இந்த டெஸ்ட் டிரா ஆனால் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. 

25 ஆண்டுகளுக்கு பிறகு தென்ஆப்பிரிக்கா இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது. கடைசியாக 2000-ம் ஆண்டு 2 போட்டிக் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory