» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஐபிஎல் 2025: வெற்றியுடன் நிறைவு செய்த சிஎஸ்கே!
ஞாயிறு 25, மே 2025 7:51:54 PM (IST)
ஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 83 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஆயுஷ் மாத்ரே மற்றும் டெவான் கான்வே அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். அர்ஷத் கான் வீசிய ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் ஆயுஷ் மாத்ரே 28 ரன்கள் விளாசி அசத்தினார்.
இருப்பினும், அவர் 17 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். இதனையடுத்து, டெவான் கான்வேவுடன் உர்வில் படேல் ஜோடி சேர்ந்தார்.
இந்த இணை அதிரடியைத் தொடர்ந்தது. அதிரடியாக விளையாடிய உர்வில் படேல் 19 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து சாய் கிஷோர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். ஷிவம் துபே 8 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 சிக்ஸர்கள் அடங்கும். அதன் பின், கான்வே மற்றும் டிவால்ட் பிரேவிஸ் ஜோடி சேர்ந்தனர். பிரேவிஸ் களமிறங்கியது முதலே அதிரடியில் மிரட்டினார். அவ்வப்போது பவுண்டரிகளை விரட்டி விளையாடிய டெவான் கான்வே 35 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
மறுமுனையில் அதிரடியில் மிரட்டிய டிவால்ட் பிரேவிஸும் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 23 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். ஜடேஜா 18 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.
குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சாய் கிஷோர், ரஷித் கான் மற்றும் ஷாருக்கான் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர். 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 18.3 ஓவர்களில் 147 ரன்களில் ஆட்டமிழந்தது.
குஜராத் டைட்டன்ஸ் அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரரர் சாய் சுதர்சன் 28 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, அர்ஷத் கான் 20 ரன்களும், ஷாருக்கான் 19 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன்கள் குவிக்கத் தவறினர்.
கேப்டன் ஷுப்மன் கில் (13 ரன்கள்), ஜோஸ் பட்லர் (5 ரன்கள்), ராகுல் திவாட்டியா (14 ரன்கள்), ரஷித் கான் (12 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். சிஎஸ்கே தரப்பில் நூர் அகமது மற்றும் அன்ஷுல் கம்போஜ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளையும், கலீல் அகமது மற்றும் மதீஷா பதிரானா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதன் மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் 83 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி நடப்பு ஐபிஎல் தொடரை வெற்றியுடன் நிறைவு செய்தது. நடப்பு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் 4 வெற்றிகளுடன் தொடரை நிறைவு செய்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர் கேசவ் மகராஜ் பிடித்தார்!
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 12:38:17 PM (IST)

ஆசிய கோப்பை டி-20 கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 9:00:01 PM (IST)

தூத்துக்குடியில் டி-20 கிரிக்கெட்: டிசிடபிள்யூ அணி கோப்பையை வென்றது.
ஞாயிறு 17, ஆகஸ்ட் 2025 7:26:18 PM (IST)

ஆசிய கோப்பை: இந்திய அணியில் கில், ஜெய்ஸ்வாலுக்கு இடமில்லை?
சனி 16, ஆகஸ்ட் 2025 5:51:00 PM (IST)

பாகிஸ்தானை வீழ்த்தி 34 வருடங்களுக்கு பிறகு தொடரை வென்று மே.இ.தீவுகள் அணி சாதனை!
வியாழன் 14, ஆகஸ்ட் 2025 11:03:05 AM (IST)

ஜூனியர் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : இந்தியாவுக்கு 14 பதக்கம்
திங்கள் 11, ஆகஸ்ட் 2025 12:33:46 PM (IST)
