» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
சிவம் துபே அதிரடி அரைசதம்: குஜராத் அணியை வீழ்த்தியது சென்னை!!
புதன் 27, மார்ச் 2024 11:54:02 AM (IST)
சிவம் துபே, ரச்சின் ரவிந்திரா அதிரடியாக ஆடி அசத்த குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 63 ரன்களில் வெற்றி பெற்றது.
இந்தியாவில் ஐ.பி.எல்., 17வது சீசன் நடக்கிறது. சென்னையில் நேற்று இரவு நடந்த லீக் போட்டியில் சென்னை அணியும் குஜராத் அணியும் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பீல்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய சென்னை அணியின் துவக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் 46 ரன்களும் ரச்சின் ரவிந்திரா 46 ரன்களம் எடுத்தனர். சிவம் துபே (51)அரைசதம் அடித்தார்.மிட்சல் ஆட்டமிழக்காமல் 24 ரன்கள் எடுத்தார். குஜராத் அணியின் ரஷித்கான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இறுதியில் சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்தது. 207 ரன்கள் வெற்றி இலக்காகக்கொண்டு அடுத்து களமிறங்கிய குஜராத் அணி, 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களுக்கு அவுட் ஆனது. இந்நிலையில் சென்னை அணி 63 ரன்களில் குஜராத் அணியை வீழ்த்தியது.
குஜராத் அணியின் சாய் சுதர்சன் அதிகபட்சமாக 37 ரன்களும் சஹா மற்றும் மில்லர் தலா 21 ரன்களும் சேர்த்தனர். மற்றவர்கள் சோபிக்கவில்லை. சென்னை அணியின் தீபக் சஹார்,முஷ்டாபிஷூர் ரஹ்மான் மற்றும் தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.