» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தரம்சாலா டெஸ்ட் போட்டி : இந்தியா இன்னிங்ஸ் வெற்றி!

சனி 9, மார்ச் 2024 3:59:37 PM (IST)



தரம்சாலாவில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றியைப் பதிவு செய்தது.

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ளது. அவற்றில் 3 போட்டிகளில் இந்திய அணியும், ஒரு டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றன. இந்நிலையில், ஹிமாசல் பிரதேசத்தின் தரம்சாலாவில் கடந்த 7-ஆம் தேதி தொடங்கிய 5வது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 218க்கு ஆல் அவுட்டானது. இதனைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 477 ரன்கள் குவித்தது.

மூன்றாம் நாள் ஆட்டம் இன்று(மார்ச். 9) தொடங்கிய நிலையில், இந்தியாவுக்கு எதிராக ஃபாலோ-ஆனைத் தவிர்க்க இங்கிலாந்து போராடியது. குல்தீப் யாதவ் மற்றும் அஸ்வினின் சுழற்பந்து மாயாஜாலத்தில் இங்கிலாந்து வீரர்கள் வரிசையாக நடையைக் கட்ட, அந்த அணி இரண்டாவது இன்னிங்சில் 195 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதன் மூலம், இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது. 4-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி. இந்திய அணியில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அவரது 100-வது டெஸ்ட் போட்டியாகவும் இப்போட்டி அமைந்தது. அதில் இரண்டு இன்னிங்சையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக அஸ்வின் 9 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளையும், 2-வது இன்னிங்சில் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய குல்தீப் யாதவ் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த டெஸ்ட் போட்டியில், சர்வதேச கிரிக்கெட்டில் முதன்முறையாக ஒரு வேகப் பந்து வீச்சாளர் 700 விக்கெட்டுகளை எடுத்த சாதனையை இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory