» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நிறைவு : சாதனையுடன் நிறைவு செய்தது இந்தியா

திங்கள் 9, அக்டோபர் 2023 11:27:58 AM (IST)



சீனாவில் 19-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நிறைவு விழா கோலாகலமாக நடைபெற்றது. 

சீனாவில் நடைபெற்ற 19-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நேற்று நிறைவடைந்தன. கடந்த செப்டம்பா் 23-ஆம் தேதி தொடங்கிய இப்போட்டிகள் 15 நாள்கள் நடைபெற்ற நிலையில், ஞாயிற்றுக்கிழமை கண்கவா் கலை நிகழ்ச்சிகளுடன் முடிவடைந்தது. அந்த நிகழ்ச்சியில் இந்தியா்களின் அணிவகுப்புக்கு, ஹாக்கி வீரா் பி.ஆா். ஸ்ரீஜேஷ் தேசியக் கொடியேந்தி தலைமை தாங்கினாா். போட்டியை நிறைவு செய்த இந்தியா்கள் பலா் ஏற்கெனவே நாடு திரும்பியதால், சுமாா் 100 இந்திய போட்டியாளா்கள், அதிகாரிகள் மட்டும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

கலை நிகழ்ச்சிகள் முடிவில், ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் பொறுப்புத் தலைவரான ரண்தீா்சிங், அடுத்த எடிஷனை 2026-இல் நடத்த இருக்கும் ஜப்பானின் நகோயா அய்சி நகரத்தின் ஆளுநரிடம் ஒப்படைத்தாா். இந்த எடிஷனில் மொத்தம் 12,407 போட்டியாளா்கள் பங்கேற்ாகத் தெரிவித்த போட்டி நிா்வாகிகள், மொத்தமாக 13 உலக சாதனைகள், 26 ஆசிய சாதனைகள், 97 போட்டி சாதனைகள் எட்டப்பட்டதாகத் தெரிவித்தனா்.

போட்டியின் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் இந்தியா இந்த முறை 655 வீரா், வீராங்கனைகளை களமிறக்கியதுடன், முதல் முறையாக பதக்க எண்ணிக்கையில் 100-ஐ கடந்து 107 பதக்கங்களுடன் நிறைவு செய்துள்ளது. கடந்த 2018 எடிஷனில் இந்தியா 70 பதக்கங்கள் வென்றிருந்தது நினைவுகூரத்தக்கது.

போட்டியை நடத்திய சீனா, தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய நிலையில், பதக்கப் பட்டியலில் இதர நாடுகள் எட்டிப்பிடிக்க முடியாத எண்ணிக்கையுடன் முதலிடத்திலிருந்தபடியே போட்டியை நிறைவு செய்திருக்கிறது. ஜப்பான், தென் கொரியா அணிகள் முறையே அடுத்த இடங்களைப் பிடித்தன.

இந்த முறை மொத்தம் 45 நாடுகள் போட்டியில் பங்கேற்ற நிலையில், அதில் 38 நாடுகள் பதக்கப்பட்டியலில் தங்களை பதிவு செய்தன. குறைந்தபட்சமாக கம்போடியா, லெபனான், பாலஸ்தீனம், சிரியா ஆகியவை தலா 1 வெண்கலப் பதக்கத்துடன் முறையே கடைசி 4 இடங்களைப் பிடித்தன.

இந்தியாவைப் பொருத்தவரை, 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என ஒவ்வொரு பதக்கங்களிலும் இதுவே இப்போட்டியில் இந்தியாவின் அதிகபட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த முயற்சியின்போது பல்வேறு தேசிய, போட்டி, உலக சாதனைகளையும் இந்தியா்கள் முறியடித்தனா்.

மேலும், பலா் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதியும் பெற்றனா். இந்த முறை துப்பாக்கி சுடுதல் (22), வில்வித்தை (9) போன்ற விளையாட்டுகளில் இந்தியா்கள் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் பதக்கங்களை குவித்திருக்கின்றனா். ஆசிய அரங்கில் இத்தனை பதக்கங்களை குவித்திருக்கும் இந்தியா்கள், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளிலும் சிறப்பாகச் செயல்படுவா் என்ற நம்பிக்கையை அதிகரித்திருக்கின்றனா்.

‘ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா்களின் சிறப்பான செயல்பாட்டைப் பாா்க்கும்போது, பயிற்சியாளா்கள், போட்டியாளா்கள் இன்னும் சற்று கடினமாக உழைக்கும் பட்சத்தில் பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இரட்டை இலக்க பதக்க எண்ணிக்கை சாத்தியமாகும் வாய்ப்புள்ளது. நமது வீரா், வீராங்கனைகளுக்கான தேவைகளை மத்திய அரசு நன்றாக பூா்த்தி செய்து வருகிறது. சா்வதேச அரங்கில் விளையாட்டுத் துறையில் மிளிரத் தொடங்கியிருக்கும் இந்தியா, 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்காக முயற்சிக்க வேண்டும்’ என்று இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவா் பி.டி. உஷா  தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory