» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் ரூ.38,000 கோடியில் கப்பல் கட்டும் தளம்: முதல்வர் விஜய்யுடன் ஹூண்டாய் அதிகாரிகள் ஆலோசனை!
வியாழன் 18, ஜூன் 2026 8:41:21 AM (IST)

தூத்துக்குடியில் சுமார் ரூ.38,000 கோடி முதலீட்டில் அதிநவீன கப்பல் கட்டும் தளம் அமைப்பது மற்றும் தூத்துக்குடி அல்லிக்குளம் பகுதியில் விண்வெளி வாகன தொழில்நுட்ப மையம் அமைப்பது தொடர்பான முக்கிய ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: தென் கொரியாவைத் தலைமையகமாகக் கொண்ட எச்.டி.ஹூண்டாய் (HD Hyundai) நிறுவனம், உலக அளவிலான மிகப்பெரிய கப்பல் கட்டுமான நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் தூத்துக்குடியில் அதிநவீன கப்பல் கட்டுமானத் தளம் ஒன்றை அமைப்பதற்காகத் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இத்திட்டத்தின் தற்போதைய செயல்பாட்டு நிலைகள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து, ஹூண்டாய் நிறுவனத்தின் உலகளாவிய வணிகப் பிரிவு குழுத் தலைவர் சன்ஜூன் ஹோங் தலைமையிலான உயர்மட்ட அதிகாரிகள் குழு, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியது.
இச்சந்திப்பின் போது முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டின் மற்றும் தென் மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த இத்திட்டம் தூத்துக்குடியில் விரைவாகச் செயல்படுத்தப்படுவதற்குத் தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் தமிழ்நாடு அரசு முன்னின்று மேற்கொள்ளும் என உறுதியளித்தார்.
திட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் முழுமையான நிர்வாக ஆதரவும், ஒருங்கிணைந்த ஒத்துழைப்பும் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து, நிறுவன அதிகாரிகள் கப்பல் கட்டும் தளப் பணிகளை விரைவில் தொடங்குவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.
15,000 பேருக்கு வேலைவாய்ப்பு:
இந்தியாவிலேயே முதன்முறையாகப் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இக்கப்பல் கட்டுமானத் திட்டத்தில் சுமார் ரூ.38,000 கோடி முதலீடு செய்யப்படவுள்ளது. இதன் மூலம் நேரடியாக 15,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும். இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காகச் சிப்காட் (SIPCOT) மற்றும் வ.உ.சி. துறைமுக ஆணையம் (VOC Port Authority) இணைந்து ‘தேசிய கப்பல் கட்டுதல் மற்றும் கனரக தொழில்கள் பூங்கா தமிழ்நாடு லிமிடெட்’ என்ற தனி நிறுவனத்தை உருவாக்கியுள்ளன.
இத்தளம் அமைப்பதற்கான முதற்கட்ட கொள்கை அளவிலான ஒப்புதலை மத்திய அரசின் கப்பல் போக்குவரத்து இயக்குனரகத்திடம் இருந்து இந்நிறுவனம் ஏற்கனவே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இக்கூட்டத்தில் அமைச்சர் ச.கீர்த்தனா, தலைமைச் செயலாளர் மு.சாய்குமார், தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச.விஜயகுமார் மற்றும் ஹூண்டாய் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
அல்லிக்குளத்தில் விண்வெளி தொழில்நுட்ப மையம்:
தமிழக அரசு வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக் குறிப்பில், தூத்துக்குடி மாவட்டம் அல்லிக்குளம் பகுதியில் 'விண்வெளி வாகனங்கள் பொது தொழில்நுட்ப வசதி மையம்' (Space Vehicles Common Technology Facility Centre) அமைப்பதற்காகத் தமிழ்நாடு அரசு மற்றும் இன்-ஸ்பேஸ் (IN-SPACe) நிறுவனத்திற்கு இடையே அகமதாபாத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு ஒப்பந்தத்தின் நகலை முதலமைச்சர் விஜய்யிடம் அதிகாரிகள் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
இவ்ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் டிட்கோ (TIDCO) தலைவர் கார்த்திகேயனும், இன்-ஸ்பேஸ் நிறுவனத்தின் சார்பில் அதன் இணைச் செயலாளர் அனுபவம் ஆனந்தும் கையெழுத்திட்டுள்ளனர். இத்திட்டத்தின்படி இன்-ஸ்பேஸ் நிறுவனம் ரூ.100 கோடி மதிப்பிலான அதிநவீன உபகரணங்களை வழங்கும். தமிழ்நாடு அரசு இதற்குத் தேவையான நிலத்தை வழங்கி, கட்டிடங்கள் மற்றும் இதர உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தரும். இது மாநிலத்தில் விண்வெளித் தொழில் உற்பத்திக்கான உலகத்தரம் வாய்ந்த சூழலை உருவாக்கும் முக்கிய மைல்கல்லாக அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாயை திறங்க சிஎம்!- கருப்பு பேட்ஜ் அணிந்து உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் முழக்கம்!
வியாழன் 18, ஜூன் 2026 10:37:59 AM (IST)

சப் இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டிய 2 ரவுடிகள் கைது: தூத்துக்குடியில் பரபரப்பு!
வியாழன் 18, ஜூன் 2026 10:32:12 AM (IST)

மருத்துவமனை லிஃப்ட்டில் இளம்பெண்ணிடம் அத்துமீறிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கைது!
வியாழன் 18, ஜூன் 2026 8:27:23 AM (IST)

கிரீன் காப்பர் பெயரில் ஸ்டெர்லைட்டை திறக்க முயற்சி: முதலமைச்சர் விஜய்யுடன் வைகோ திடீர் சந்திப்பு!
வியாழன் 18, ஜூன் 2026 8:05:01 AM (IST)

ஹெலிகாப்டரில் வந்த நீட் மறுதேர்வு வினாத்தாள்கள்: 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!
வியாழன் 18, ஜூன் 2026 7:53:47 AM (IST)

திருச்செந்தூர் கோவிலில் செல்போனுக்குத் தடை : ஜூலை 1 முதல் அமல் - பக்தர்களுக்கு அறிவுறுத்தல்!
வியாழன் 18, ஜூன் 2026 7:47:25 AM (IST)


