» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பாஜகவுடன் ஸ்டாலினுக்கு ரகசிய உடன்பாடா? -மம்தா பானர்ஜிக்கு ஜோதிமணி எம்.பி. கண்டனம்!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 5:42:17 PM (IST)
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவிற்கும் இடையே ரகசிய உடன்பாடு இருப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கு, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசுகையில்: "தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பாஜகவுடன் ரகசிய உடன்பாடு வைத்துள்ளனர். அதன் ஒரு பகுதியாகவே, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட திறமையான ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளைத் தமிழகத்திற்குத் தேர்தல் பார்வையாளர்களாகத் தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது. இதன் மூலம் மேற்கு வங்கத்தில் பாஜக தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது," எனக் குறிப்பிட்டிருந்தார்.மம்தாவின் இந்தப் பேச்சுக்குத் தனது 'எக்ஸ்' (X) தளத்தில் பதிலடி கொடுத்துள்ள ஜோதிமணி எம்.பி., இதனை "அபத்தமானது" எனச் சாடியுள்ளார். அவரது பதிவின் முக்கிய அம்சங்கள்: மூன்று முறை முதல்வராக இருக்கும் ஒரு மூத்த அரசியல்வாதி, கூட்டணிக் கட்சிகள் மீது கொஞ்சமும் பொறுப்பில்லாமல் இத்தகைய அவதூறுகளைப் பரப்புவது கண்டனத்திற்குரியது.
தமிழகத்தில் மொழி, இனம், பண்பாடு என அனைத்திற்கும் எதிராக உள்ள பாஜகவை வீழ்த்த நாங்கள் தினமும் யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறோம். அதிமுக முகமூடி அணிந்து கூட பாஜக தமிழகத்தில் கால் பதிக்க முடியாது என்பதில் தமிழினம் உறுதியாக உள்ளது. ராகுல் காந்தியும், முதல்வர் மு.க.ஸ்டாலினும் பாஜகவின் அடக்குமுறைக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். தேசிய அளவில் பல போராட்டங்களில் திமுக எங்களுடன் நிற்கிறது; ஆனால் திரிணமூல் காங்கிரஸ் பல நேரங்களில் அப்படிச் செய்வதில்லை.
பாஜகவைத் தோற்கடிக்க ராகுல் காந்தி முன்னெடுக்கும் போராட்டத்தை உங்களால் பலப்படுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை, தயவுசெய்து பலவீனப்படுத்தாதீர்கள். இந்த தேசம் உங்களை மன்னிக்காது," எனத் தெரிவித்துள்ளார். தேசிய அளவில் 'இந்தியா' (I.N.D.I.A) கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையே, குறிப்பாக மேற்கு வங்கத் தேர்தல் சூழலில் எழுந்துள்ள இந்த மோதல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புழல் சிறையிலிருந்து தாக்கல் செய்த ஹரி நாடார் மனு தள்ளுபடி: தேர்தல் அலுவலர் அதிரடி!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 9:07:53 PM (IST)

சாத்தான்குளம் வழக்கில் எடப்பாடியார் எடுத்த முடிவுக்குக் கிடைத்த நீதி : அதிமுக வரவேற்பு
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 4:23:16 PM (IST)

நெல்லையில் விஜய் பிரசாரத்திற்கு 51 நிபந்தனைகள்: செங்கோட்டையன் பேட்டி
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 4:07:26 PM (IST)

தூத்துக்குடி - கச்சகுடா இடையே புதிய வாராந்திர ரயில் சேவை நாளை தொடக்கம்: பயணிகள் மகிழ்ச்சி !
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 12:36:54 PM (IST)

கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின், பெரம்பூரில் விஜய், சாத்தூரில் நயினார் நாகேந்திரன் வேட்புமனுக்கள் ஏற்பு!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 11:48:16 AM (IST)

திருநெல்வேலி காவல் நிலையங்களை தேர்தல் காவல் பார்வையாளர் ஆய்வு!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 11:40:09 AM (IST)

