» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அனைவரும் ஜனநாயகத்தின் தூதுவர்களாக சென்று பணியாற்ற வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்!

செவ்வாய் 24, மார்ச் 2026 5:44:11 PM (IST)



2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அனைவரும் வாக்களித்து, மற்றவர்களையும் வாக்களிக்க செய்வதற்கு நீங்கள் அனைவரும் ஜனநாயகத்தின் தூதுவர்களாக சென்று பணியாற்ற வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் கேட்டுக் கொண்டுள்ளார். 

தூத்துக்குடி வ.உ.சி கல்வியியல் கல்லூரியில் இன்று தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது : இன்றையதினம் நடைபெறுகின்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வருகைதந்து கலந்து கொண்டிருக்கின்ற உங்கள் அனைவருக்கும் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். கல்வியியல் கல்லூரியில் படிக்கின்ற அனைவரும் ஒரு பட்டதாரிகளாக இருப்பீர்கள் மற்றும் அநேகமாக, நீங்கள் ஏற்கனவே ஒரு முறை வாக்களித்திருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. 

இங்கிருக்கின்ற உங்கள் அனைவருக்கும் ஏற்கனவே 2024ல் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்ற பொழுது உங்களுக்கு வாக்களிப்பதற்கான 18 வயது நிறைவு அடைந்து, கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருந்திருப்பீர்கள். ஆகவே, உங்களுக்கு வாக்களிப்பதற்கான முதல் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இது உங்களுக்கான இரண்டாவது வாய்ப்பு. ஏற்கனவே நீங்கள் தேர்தலில் வாக்களித்த அனுபவம் உடையவர்கள் என்பதால், நீங்கள் முதல் தலைமுறை இளம் வாக்காளர்கள் என்று சொல்லாமல், அனுபமிக்க வாக்காளர்கள் என்று குறிப்பிடலாம்.

நீங்கள் வாக்களித்த பிறகு பல விஷயங்கள் பார்த்திருக்கலாம். நீங்கள் வாக்களித்த கட்சி வெற்றி பெற்றிருக்கலாம் அல்லது தோல்வி அடைந்திருக்கலாம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றிருக்கலாம். குறிப்பாக, ஒரு தொலைபேசி வாங்க வேண்டும் என்றால் அதற்கான மீள்பார்வை (Review) ஒரு வாரத்திலிருந்தே படித்து பார்ப்போம் என்று உதவி ஆட்சியர் (பயிற்சி) குறிப்பிட்டார். ஒரு தொலைபேசியை 3 வருட காலம் வரை பயன்படுத்துவோம். 

அதுவரையில் அதனை பயன்படுத்துவதற்கான மற்றும் அதில் உள்ள அனைத்து கூறுகளையும் நாம் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படும். அதில் உள்ள சாதகமான மற்றும் பாதகமான கூறுகளை எல்லாம் அறிந்துக்கொண்டு, அடுத்த முறை அதனை தவிர்ப்பதற்கான வாய்ப்புகளை தேர்ந்தெடுப்பீர்கள். அதுபோல், உங்களுக்கு ஏற்கனவே ஒருமுறை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கான எல்லா விதமான எதிர்பார்ப்புகளும் பூர்த்தி அடைந்திருக்கிறதா என்பது பற்றிய புரிதல் இருக்கும். 

நீங்கள் வாக்களித்த பிறகு, வாக்களித்த நபர்கள் / வாக்களிப்பதற்காக தேர்ந்தெடுத்த நபருக்கு சரியாக வாக்களித்து உள்ளீர்களா என்ற முழுமையான பரிசீலனையுடன், இந்த முறைக்கான வாக்களிப்பை நாம் எப்படி தேர்வு செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும். நாம் எப்பொழுதும் ஒரு முடிவு எடுக்கின்ற பொழுது தன்னிச்சையாக செயல்படுவது என்பது இயல்பு. ஆனால் அதுபோன்று இல்லாமல், வாக்களித்தல் என்பது 5 வருடங்களுக்கு ஒரு முறை கிடைக்கின்ற வாய்ப்பாகும். 

எனவே, வாய்ப்புகளை எளிதாக தேர்ந்தெடுக்காமல் சிந்தித்து, சரியான முறையில் செயல்பட வேண்டும். சிந்தித்துக் கொண்டே கடைசியில் எதுவும் செய்யாமல் இருக்க கூடாது. ஏதாவது ஒரு வாய்ப்பினை அதாவது ஆளக்கூடிய ஒரு பிரதிநிதியை தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்தலில் சரியான நபரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும்.

வரலாறு படித்த மாணவர்கள் இருப்பீர்கள். நீங்கள் ஆசிரியரான பிறகு, மாணவருக்கு குறிப்பாக தேர்தல் மற்றும் அதன் நடைமுறைகள், இந்திய அரசியலமைப்பு, அதன் பிரிவுகள், குடியரசுதலைவர், பிரதமர், ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பதவிகள் மற்றும் அதற்கான பொறுப்புகள் குறித்து சொல்லி கொடுப்பீர்கள். நீங்கள் இயல்பாக இருக்கின்ற நபர்களின் நிலையை விட, மேலும் நுட்பமாகவும் மற்றும் அவர்களுடைய தன்மைகளையெல்லாம் முழுமையாக புரிந்து கொண்டு சொல்லிக் கொடுக்க கூடிய ஆசிரியர்களாக இருப்பீர்கள். 

அனைத்து ஆசிரியர்களும் வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணிகளில் ஈடுபடுவார்கள். அதேப்போல் எதிர்காலத்தில் நீங்கள் தேர்தல் அலுவலர்களாக கூட பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் அமையலாம். அதுபோல் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கின்ற பொழுது நிச்சயமாக நீங்கள் பணியாற்றுவீர்கள். தேர்தல் நடைமுறைகள் மற்றும் என்னென்ன முக்கியத்துவங்கள் இருக்கின்றன என்பதை நீங்கள் முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும். 

வாக்களிப்பது என்பது முக்கியமானவை மற்றும் வாக்குரிமை என்பது முக்கியமானது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். அதன் முக்கியத்துவம் தெரிந்தாலும், நாம் தேர்ந்தெடுக்கின்ற வாய்ப்பு என்பது, குறிப்பாக இந்த தேர்தலில் எதிரொலிக்க போகிறது என்பதற்கான முக்கியத்துவத்தை நாம் முழுமையாக புரிந்து கொள்ள முடியாது. அந்த அளவிற்கு ஒவ்வொரு தனிப்பட்ட நபர்களின் வாக்கும் மிக முக்கியமானது. நீங்கள் அனைவரும் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு, வாய்ப்புகளை தேர்ந்தெடுக்க வேண்டும். உங்களுடைய ஒவ்வொரு முடிவும் மிக மிக முக்கியமானதாகும்.

நமது ஊரில் மட்டுமல்லாது, எல்லா நாடுகளிலும் வாய்ப்புகளை உருவாக்குவதிலும், தேர்தலில் ஒருவரை தேர்ந்தெடுப்பதிலும் பல்வேறு விதமான சிரமங்கள், சிக்கல் மற்றும் பிழைகள் இருக்கின்றன. ஆனால் சிறந்த ஆட்சிமுறையாக நமது ஜனநாயக மக்களாட்சி இருக்கிறது. அதுதான் நம்முடைய சிறப்பு. நாம் எடுத்துக் கொண்ட உறுதிமொழியில் சுதந்திரமான, அமைதியான தேர்தல் முறையை எந்நாளும் போற்றி பாதுகாப்போம் என்று எடுத்துக் கொண்டோம். 

எத்தனை நாடுகளில் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் அல்லது அந்த நாட்டின் தன்மையை பொறுத்து, தேர்தல் சுதந்திரமான முறையில் நடைபெறுகிறது என்று பார்த்திருக்கிறீர்களா? நமது அண்டை நாடுகளான எல்லா நாடுகளிலும் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். அதன்மூலம் ஆட்சி மாற்றம் இருக்கும் என உறுதியாக சொல்ல முடியுமா? உதாரணத்திற்கு இலங்கை, வங்காளதேசம், நேபாளம், பாகிஸ்தான் முதலிய நாடுகளில் மக்கள் எழுச்சி காரணமாக ஆட்சி மாற்றம் நடைபெற்றது. அதுபோன்று தேர்தல் மூலம் தலைவர்களை தேர்ந்தெடுத்து ஆட்சி மாற்றம் நடைபெறுவது என்பது குறைவான நாடுகளில் தான் நடைபெறுகிறது.

நமது அரசியலமைப்பும், அரசியலமைப்பின் கீழ் ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற இந்த தேர்தல் முறையும் நமக்கு அதை உறுதி செய்திருக்கிறது. இந்த உரிமை நமக்கு எளிமையாக கிடைத்து விட்டது என்பதால் அதனை சாதாரணமாக நினைக்கிறோம். பழமையான தேர்தல் முறைகள் என்று கருதப்படுகின்ற இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட தேர்தல் நடத்தப்படுவதில் சிரமங்கள் இருக்கின்ற பொழுது, நமக்கு அருகில் உள்ள அண்டை நாடுகளில் கூட நம் அளவிற்கு வலுவான தேர்தல் நடத்தியதில்லை. 

நமது நாட்டின் தேர்தல் என்பது 100 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்ற மிகப்பெரிய தேர்தல் ஆகும். நமது தேர்தலை பார்ப்பதற்காக உலக முழுவதிலுமிருந்து 80க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வந்து கற்றுக் கொண்டு செல்கிறார்கள். எப்படி தேர்தல் நடத்துகிறீர்கள்? எப்படி இவ்வளவு நாட்கள் இதனை நடத்திக் கொண்டு வருகிறீர்கள்? எவ்வாறு ஆட்சி மாற்றம் என்பது தேர்தல் வழியாக மட்டும் நடக்கிற அளவிற்கு இதனை செயல்படுத்துகிறீர்கள் என்பதை நம்மிடமிருந்து கற்றுக் கொண்டு செல்கிறார்கள். அந்த அளவிற்கு நமது தேர்தல் நடைமுறை என்பது வலுவாகவும், பலமாகவும், பாதுகாப்பாகவும் அமைக்கப்பட்டிருக்கின்றது.

நமது நாட்டின் தேர்தல் நடைமுறையை நாம் தொடர்ந்து பெற்றுக் கொண்டிருப்பதினால் அதன் அருமையையும், முக்கியத்துவமும் உணராமல் சிலர் வாக்களிக்காமல் இருந்து விடுகிறோம். அதுபோன்று இல்லாமல், அனைவரும் வாக்களித்து, தேர்தலை நம் பெருமையாகவும், நமக்கு கிடைத்திருக்கின்ற மாபெரும் வாய்ப்பாக உணர்ந்து கொண்டு, மற்றவர்களையும் வாக்களிக்க செய்வதற்கு நீங்கள் அனைவரும் ஜனநாயகத்தின் தூதுவர்களாக சென்று பணியாற்ற வேண்டும். எதிர்காலத்தில் நடைபெறுகின்ற தேர்தலில் தேர்தல் அலுவலராக பணியாற்றும் வகையில் ஆசிரியராக பணியேற்று தேர்தல் அலுவலராக வருவீர்கள் என்று உங்களுக்கு வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மூ.குருச்சந்திரன், உதவி ஆட்சியர் (பயிற்சி) புவனேஷ் ராம், மாவட்ட சமூக நல அலுவலர் பிரேமலதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் அனுசியா, கல்லூரி முதல்வர் மற்றும் மாணவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory