» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சாத்தான்குளம் வழக்கில் எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் : அமைச்சர் ரகுபதி அறிக்கை

செவ்வாய் 24, மார்ச் 2026 8:24:38 AM (IST)

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் அதிமுக ஆட்சியில் மூடி மறைக்க முயன்ற உண்மைகள் தற்போது நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் வெளிவந்துள்ளதாகச் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கில் தொடர்புடைய 9 போலீசாரும் குற்றவாளிகள் என 6 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு இச்சம்பவம் நடந்தபோது, இதனை 'இரட்டைப் படுகொலை' என்று விமர்சித்த அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென்று தொடர் அழுத்தம் கொடுத்தார். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்குத் தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் திமுக வழங்கும் என்று உறுதியளித்ததோடு, சி.பி.ஐ விசாரணை கோரி ஆரம்பத்திலிருந்தே குரல் கொடுத்தார். மேலும், திமுக சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவியும் வழங்கப்பட்டது."

"கொரோனா காலத்தில் சிறப்பான ஆட்சியைக் கொடுத்தோம் என்று மார்தட்டிக் கொள்ளும் எடப்பாடி பழனிசாமிக்குச் சாத்தான்குளம் சம்பவமே சாட்சி. 2020 ஜூன் 22-ல் ஜெயராஜும் பென்னிக்சும் இறந்தபோது, ஜூன் 24 அன்று எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், போலீசாரால் கொல்லப்பட்டவர்களை 'மூச்சுத்திணறல் மற்றும் உடல்நலக்குறைவால்' இறந்ததாகப் பொய் சொல்லி காவல்துறையினரைக் காப்பாற்ற முயன்றார்.

பாதிக்கப்பட்ட அப்பாவிகளை நோயாளிகளாக்க முயன்ற மனசாட்சியற்ற மனிதர்தான் எடப்பாடி பழனிசாமி. காவல்துறையினர் நடத்திய அந்த கொடூரச் செயலுக்கு ஆதரவாக நின்று, உண்மையைப் பச்சைப்பொய் சொல்லி மறைக்கப் பார்த்தது அன்றைய அதிமுக அரசு."

"அதிமுக ஆட்சியில் மூடி மறைக்க நினைத்த இந்த வழக்கில், நீதிமன்றம் தற்போது வழங்கியுள்ள தீர்ப்பின் மூலம் எடப்பாடி பழனிசாமி சொன்ன பொய்கள் வெட்டவெளிச்சமாகியுள்ளன. குற்றவாளிகளைக் காப்பாற்ற அன்று பொய் சொன்ன பழனிசாமியும் ஒரு வகையில் குற்றவாளிதான். எனவே, உண்மையை மறைக்க முயன்றதற்காக எடப்பாடி பழனிசாமி பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்." இவ்வாறு அமைச்சர் ரகுபதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்..


மக்கள் கருத்து

NEW GENERATIONMar 24, 2026 - 08:40:53 AM | Posted IP 104.2*****

ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது கடைகளை மூட சொல்லி கலவரம் செய்து அப்பாவி மக்களை மாட்டி விட்டு ஓடியது = திமுக , சுட்டு கொன்றது = அதிமுக, அதானே திமுகவும் அதிமுகவும் இரண்டும் நாட்டுக்கு தேவையில்லாதவை, இரண்டுபேர் செய்யும் மோதலால் அப்பாவி மக்கள் பழி. இரண்டு கட்சிகளும் ஓரமாக போய் விளையாடுங்க.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory