» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஈரான் - இஸ்ரேல் போரை நிறுத்த இந்தியா முன்முயற்சி எடுக்க வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!

சனி 14, மார்ச் 2026 5:09:22 PM (IST)

ஈரான் - இஸ்ரேல் போரை நிறுத்த இந்தியா உடனடியாக முன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இறையாண்மை மிக்க ஈரான் நாட்டின் மீது, நோன்பு காலம் என்றும் பாராமல் அநியாயப் போரைத் தொடுத்த அமெரிக்க - இஸ்ரேல் நாடுகள், தற்போது போரை முடிவுக்குக் கொண்டுவர முடியாமல் தவித்து வருவது வெட்கக்கேடானது. வல்லாதிக்க நாடுகளின் அதிகாரப் பசிக்காகத் தொடங்கப்பட்ட இந்தப் போர், வளைகுடா நாடுகளை நேரடியாகவும், ஏனைய நாடுகளை மறைமுகமாகவும் பாதித்துள்ளது.

ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அயத்துல்லாஹ் கமேனியைப் படுகொலை செய்து, அந்நாட்டின் மீது திணிக்கப்பட்ட இந்தப் போரை, தனது வலுவான எதிர்ப்புப் போராட்டத்தால் உலக நாடுகளின் மீதான போராக ஈரான் மாற்றியுள்ளது. ஈரான் முதுகில் விழும் ஒவ்வொரு அடியும் உலக நாடுகள் ஒவ்வொன்றின் மீதும் விழும் அடியாக மாறியுள்ளது.

வளைகுடா நாடுகளின் வர்த்தகம் பாதிக்கப்பட்டுப் பொருளாதாரம் அதலபாதாளத்திற்குச் சென்றுள்ளது. போரைக் கண்டிக்காமல் அமைதி காத்த இந்தியா போன்ற நாடுகளில் வாழும் கோடிக்கணக்கான மக்கள், தற்போது எரிபொருள் பற்றாக்குறையால் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். அநீதி நடக்கும்போது நடுநிலைமை என்ற பெயரில் அமைதி காப்பது ஆபத்தானது என்பதை உலக நாடுகள் இப்போது உணர்ந்திருக்கும்.

எரிபொருள் பற்றாக்குறையால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்தியப் பெருநாடு, ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளிடம் தமக்குள்ள நல்லுறவைப் பயன்படுத்திப் போர் நிறுத்தம் ஏற்படவும், மீண்டும் அமைதி திரும்பவும் வழிவகுக்க வேண்டும். இந்தியாவில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு மற்றும் உணவகங்கள் முடக்கம் உள்ளிட்ட சவால்களுக்கு, நியாயத்தின் பக்கம் நின்று அமைதிக்கான முன்முயற்சியை எடுப்பது மட்டுமே ஒரே தீர்வாகும் என சீமான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory