» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாஜக நிர்வாகியின் வீடு புகுந்து ரூ.26 லட்சம் நகை-பணம் கொள்ளை: நெல்லை அருகே துணிகரம்!

வெள்ளி 9, ஜனவரி 2026 8:23:56 AM (IST)



நெல்லை அருகே பாஜக நிர்வாகியின் வீடு புகுந்து மூதாட்டியை கட்டிப்போட்டு ரூ.26 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி பொன்விழா நகரைச் சேர்ந்தவர் சன்னியாசி. பா.ஜனதா மாவட்ட வர்த்தக பிரிவு அணி செயலாளராக உள்ளார். இவர் தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் சென்னையில் வசித்து, அங்கு பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இதனால் சுத்தமல்லியில் உள்ள வீட்டில் அவரது மாமனார் மாரி, மாமியார் ஆண்டிச்சி (70) ஆகியோர் மட்டும் வசித்து வருகிறார்கள்.

நேற்று காலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குவதற்காக நெல்லை அருகே உள்ள சீவலப்பேரிக்கு மாரி சென்றுவிட்டார். இதனால் ஆண்டிச்சி மட்டும் தனியாக இருந்தார். மதியம் 2 மர்மநபர்கள் அவரது வீட்டிற்கு வந்தனர். அங்கிருந்த ஆண்டிச்சியிடம் நாங்கள் சீவலப்பேரியில் இருந்து வருவதாக கூறி குடிப்பதற்கு தண்ணீர் கேட்டனர். அவர் உள்ளே சென்று தண்ணீர் எடுத்து வர முயன்றார்.

அப்போது, மர்மநபர்கள் 2 பேரும் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, ஆண்டிச்சி வாயை அமுக்கினார்கள். பின்னர் கை, கால்களை கயிறு மூலம் கட்டி, அவர் அணிந்திருந்த தங்க சங்கிலி, மூக்குத்தி, கம்மல் என சுமார் 15 பவுன் நகைகளை பறித்தனர். தொடர்ந்து பீரோவை திறந்து அதில் இருந்த 10 பவுன் நகைகள், ரூ.6 லட்சம் பணத்தை கொள்ளையடித்தனர்.

பின்னர் மர்மநபர்கள் வீட்டில் முன்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்து சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதற்கிடையே ஆண்டிச்சியின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டிற்கு சென்று, மீட்டனர். பின்னர் நடந்த சம்பவம் குறித்து ஆண்டிச்சி கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து உடனடியாக சுத்தமல்லி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடியது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர். வீட்டில் கொள்ளை போன நகை, பணத்தின் மதிப்பு சுமார் ரூ.26 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் வேறு எங்காவது கண்காணிப்பு கேமரா உள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர். நெல்லை அருகே பட்டப்பகலில் பா.ஜனதா பிரமுகரின் வீடு புகுந்து மூதாட்டியை கட்டிப்போட்டு ரூ.26 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory