» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ்நாட்டை நாம் ஆள வேண்டுமா? டெல்லி ஆள வேண்டுமா? முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

புதன் 7, ஜனவரி 2026 3:28:18 PM (IST)

2026 தேர்தல், தமிழ்நாட்டை நாங்கள் ஆள வேண்டுமா இல்லாவிட்டால் டெல்லியில் இருந்து நமக்கு சம்பந்தமில்லாதவர்கள் ஆள வேண்டுமா என்பதை முடிவு செய்யும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.1595 கோடியில் 111 முடிவுற்ற திட்டபணிகளை திறந்துவைத்து, 212 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திண்டுக்கல் புரட்சியின் பெயர், எழுச்சியின் பெயர், வீரத்தின் பெயர். வரலாற்றை புரட்டிப்பார்த்தால் பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராக போராடிய வேலுநாச்சியார், ஊமைத்துரையும் தங்கள் அடுத்த கட்ட போராட்டத்திற்கு திட்டமிட்ட ஊர் தான் வீரத்தின் விளைநிலமாக உள்ள திண்டுக்கல்.

கம்பீரம் காட்டிய திப்புசுல்தான், ஹைதர்அலி நடமாடிய இடம் திண்டுக்கல். மருதுபாண்டியர், கோபாலநாயக்கர், ஊமைத்துரை மூவரும் சேர்ந்து நான்காயிரம் வீரர்களை திரட்டி போரிட்டு வாழ்ந்த திண்டுக்கல் மாவட்டத்தில் உங்களை சந்திப்பதில் பெருமையடைகிறேன்.

எங்களை பொறுத்தவரையில் இது ‘ஐபி’ மாவட்டம். (அமைச்சர் ஐ.பெரியசாமி). திண்டுக்கல் பூட்டு எவ்வளவு உறுதியானதோ அதே அளவிற்கு உறுதியுடன் இந்த மாவட்டத்தை கட்டிக்காத்து வளர்ச்சியை நோக்கி அழைத்துச் சென்றுகொண்டிருக்கிறார் அமைச்சர் ஐ.பெரியசாமி. அதேபோல் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணியும் சிறப்பாக செயல்பட்டுவரும் அமைச்சர்களில் ஒருவராக இருக்கிறார். அதனால் தான் தொடர் வெற்றிக்கு சொந்தக்காரராக இருக்கிறார்.

அதிமுக ஆட்சியின் 10 ஆண்டுகாலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் அளவு ஒரு கோடி 79 லட்சத்து 81 ஆயிரத்து 152 மெட்ரிக் டன். ஆனால் நமது திராவிட மாடல் ஆட்சியில் நான்கரை ஆண்டுகளில் ஒரு கோடியே 99 லட்சத்து 75 ஆயிரத்து 710 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்துள்ளோம்.

அதிமுகவின் பத்து ஆண்டுகளை விட, ஐந்து ஆண்டுகளில் 19 லட்சம் 94 ஆயிரத்து 588 மெட்ரிக் டன் அதிகமாக கொள்முதல் செய்துள்ளோம். இது மிகப்பெரிய சாதனை. இந்த சாதனைக்கு சொந்தக்காரர் தான் அமைச்சர் அர.சக்கரபாணி.

நகரங்களுக்கு இணையாக கிராமங்களின் உட்கட்டமைப்பு வளரவேண்டும். இந்த சமச்சீரான வளர்ச்சிதான் நம்முடைய திராவிட மாடல் இலக்கணம். திண்டுக்கல் மாவட்டத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டம் மூலம் 10 ஆயிரம் வீடுகள் கட்டப்படுகிறது. இதில் 6915 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே திண்டுக்கல் மாவட்டத்தில் தான் அதிகப்படியான பட்டாக்களை வழங்கி வருகிறோம்.

திண்டுக்கல் மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புக்களை வெளியிடுகிறேன்.

* திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் சாலை, தெருவிளக்கு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் ரூ.14.20 கோடி செலவில் மேம்படுத்தப்படும். * திண்டுக்கல் மாநகராட்சியில் பாதாளசாக்கடை ரூ.8 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்.

*பழநி இடும்பன்குளம், சண்முகாநதி ரூ.6 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். *நத்தம் கலை அறிவியல் கல்லூரிக்கு ரூ.18.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்படும்.

*அதிகளவில் முருங்கை பயிரிடப்படும் ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள மார்க்கம்பட்டியில் உலக தரத்திலான முருங்கை ஏற்றுமதிக்கான பதப்படுத்தும் தொழிற்சாலை ரூ.7 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். *கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு 100 ஏக்கர் பரப்பில் அனைத்து உட்கட்டமைப்புகளையும் உள்ளடக்கிய உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா முதலீட்டு பூங்கா வில்பட்டி ஊராட்சி பகுதியில் அமைக்கப்படும்.

*கண்ணுவலி கிழங்கு பயிர் உற்பத்தியில் தமிழகம் தான் முதலிடம் வகிக்கிறது. இதற்கு நிலையான நியாயமான விலை கிடைக்க மத்திய அரசுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும். *ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ரூ.18 கோடி செல்வில் புதிய கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படும்.

திண்டுக்கல் மாவட்டம் மட்டும் அல்ல ஒவ்வொரு மாவட்டத்திற்கு என்னென்ன தேவைகள் வேண்டும் என தேடி செய்கிறோம். 2026 புத்தாண்டு பிறந்தது முதல் புதிய திட்டங்களை அறிவித்துள்ளோம். அரசு ஊழியர்களின் உறுதியளிப்பு ஓய்வூதியத்திட்டத்தை செயல்படுத்த ஆணையிட்டுள்ளேன். பொங்கலுக்கு ரூ.3000, அரிசி, சர்க்கரை, கரும்பு, வேட்டி, சேலைகள் வழங்கவும் ஆணையிட்டுள்ளேன்.

‘உலகம் உங்கள் கையில்’ என்ற திட்டத்தை துவங்கிவைத்து பத்து லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் 2019 ம் ஆண்டு பழனிசாமி முதல்வராக இருந்தபோது, மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை நிறுத்திவிட்டார்.

சிஏஜி அறிக்கையில், வாங்கப்பட்ட 55 ஆயிரம் லேப்டாப்களை வீணடித்துவிட்டார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இதுகுறித்து பழனிசாமிக்கு சந்தேகம் இருந்தால் 2023 ம் ஆண்டு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் ஆதாரம் உள்ளது.

மக்கள் நலனுக்காக நாம் செய்யக்கூடிய திட்டங்களை குறைசொல்லக் கூடியவர்கள், இல்லாத பிரச்சினைகளை உருவாக்கி குளிர்காயலாம் என நினைக்கின்றனர். அண்மையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டுக்கு வந்தார். அவர் அமித் ஷாவா அல்லது அவதூறு ஷாவா என சந்தேகம் உள்ளது. உண்மைக்கு புறம்பாக பேசிவிட்டுச் சென்றுள்ளார்.

தமிழகத்தில் இந்து சமய நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகளுக்கு முடிவுகட்டும் வகையில் தமிழ்நாடு செயல்படுகிறது எனப் பேசியுள்ளார். இதற்கான கடுமையான கண்டனங்களை இந்த விழாவின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு சுமார் 4 ஆயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு செய்துள்ளோம். இப்படிப்பட்ட சாதனையை பாஜக ஆளும் மாநிலங்களில் செய்துள்ளனரா, கண்டிப்பாக இல்லை.

அதுமட்டுமல்ல 997 கோயில்களுக்கு சொந்தமான 7 ஆயிரத்து 701 கோடி மதிப்பிலான 7655 ஏக்கர் நிலங்களை மீட்டுள்ளோம். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் என்னென்ன செய்துள்ளோம் என ஒரு நாள் முழுக்க பேசலாம். அதனால் தான் பக்தர்கள் விரும்பக்கூடிய ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி உள்ளது. அனைத்து மதத்தினரின் நம்பிக்கையை பாதுகாக்கும் ஆட்சியாக உள்ளது.

இப்படிப்பட்ட தமிழ்நாட்டில் இந்துக்கள் உரிமைகள் பறிக்கப்படுவதாக உண்மையில்லாத குற்றச்சாட்டை உள்துறை அமைச்சர் சொல்வது அவரது பதவிக்கு கண்ணியமல்ல. உண்மையை சொல்லவேண்டும் என்றால் கலவரம் செய்யும் எண்ணம் தமிழ்நாட்டில் ஈடேறாது. ஸ்டாலின் இருக்கும் வரையில் அது நடக்காது. உள்துறை அமைச்சர் வெறுப்பு பிரச்சாரம் மட்டும் பண்ணிவிட்டுபோகவில்லை. ஒரு நல்ல காரியமும் பண்ணிவிட்டு போயிருக்கிறார்.

நாம் கேட்கவேண்டிய கேள்வியை அவரே கேட்டுவிட்டார். நம்முடைய வேலையை எளிதாக்கிவிட்டார். அதற்காக அவருக்கு நன்றி சொல்லவேண்டும். தமிழ்நாட்டில் மோடி ஆட்சி அமையவேண்டுமா என்று மக்களைப் பார்த்து கேட்டுள்ளார். இதையே தான் நாங்களும் சொல்கிறோம்.

2026 தேர்தல், தமிழ்நாட்டை நாங்கள் ஆள வேண்டுமா இல்லாவிட்டால் டெல்லியில் இருந்து நமக்கு சம்பந்தமில்லாதவர்கள் ஆள வேண்டுமா என்று முடிவு செய்ய உள்ள தேர்தல். இது தமிழக சுயமரியாதைக்கு விடப்பட்ட சவால். அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தால் பாஜக தான் தமிழகத்தை ஆளும் என நாங்கள் சொல்லி புரியவைக்க வேண்டியதில்லை. அமித் ஷா நேரடியாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

‘நீட்’ தேர்வை விடாப்படியாக திணிக்கும், தேசிய கல்விக் கொள்கையை திணிக்கும், தொகுதி மறுவரை என தமிழ்நாட்டின் ஜனநாயக வலிமையை குறைக்கின்ற, வடமாநிலங்களில் தமிழர்களை கொச்சைப்படுத்துகிற பாஜக ஆட்சி அமைய எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பாடுபடுகிறார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழ்நாட்டில் பாஜகவின் ‘மறைமுக‘ ஆட்சி நடந்தது! கடந்த 5 ஆண்டுகளாகத் தான் அதில் இருந்து மீண்டு தலைநிமிர ஆரம்பித்திருக்கிறோம். இப்போது நேரடியாகவே பாஜக ஆட்சி என்று சொல்லிகொண்டு வருகிறார்கள்! 11 ஆண்டுகளாக என்டிஏ ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு ஒரு துரும்பை கூட கிள்ளிபோடாத மத்திய அரசை தமிழ்நாட்டு மக்கள் நம்பத் தயாராக இல்லை.

2019, 2021, 2026 என கடந்த மூன்று தேர்தல்களிலும் மக்கள் உங்களை ஏற்றுக்கொள்ளாதது புரியவில்லையா. தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சனை செய்வதை மாற்றிக் கொள்ளாதவரை, தமிழக மக்கள் தங்கள் முடிவை எப்படி மாற்றிக் கொள்வார்கள். மக்கள் எப்போதும் நமது அரசின் பக்கம் தான் உள்ளனர். திரும்பவும் நாங்கள் தான் வருவோம். நல்லாட்சி தருவோம். திராவிட மாடல் 2.0 ல் மீண்டும் பல சாதனைகளை படைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பெரியகருப்பன், எம்எல்ஏக்கள் இ.பெ.செந்தில்குமார், எஸ்.காந்திராஜன், எம்.பிக்கள் ஆர்.சச்சிதானந்தம், ஜோதிமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory