» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தென்காசி வக்கீல் கொலையில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை!!

வெள்ளி 12, டிசம்பர் 2025 8:20:02 AM (IST)

தென்காசியில் அரசு வக்கீலை வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி நாமக்கல் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். 

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே ஊர்மேல் அழகியான் கிராமம் பொன்விழா வீதியை சேர்ந்த குழந்தைவேல் மகன் முத்துக்குமாரசாமி (46). இவர் செங்கோட்டை கோர்ட்டில் அரசு வக்கீலாக பணிபுரிந்து வந்தார். மேலும் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. வழக்கறிஞர் அணியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இவரது மனைவி ராசாத்தி. இந்த தம்பதிக்கு குணசேகரன் (14) என்ற மகனும், குண சரண்யா (12) என்ற மகளும் உள்ளனர்.

முத்துக்குமாரசாமி தென்காசி அருகே கூலக்கடை பஜார் செல்லும் பகுதியில் ஒரு கட்டிடத்தில் தனியாக அலுவலகம் நடத்தி வந்தார். கடந்த 3-ந் தேதி காலை அவரது அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர் திடீரென முத்துக் குமாரசாமியை அரிவாளால் சரமாரி வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பி சென்றார்.

இதுகுறித்து தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக முத்து குமாரசாமியின் எதிர் வீட்டில் குடியிருக்கும் சிவசுப்பிரமணியன் என்பவர்தான் கொலை செய்தது தெரியவந்தது அவரை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் உத்தரவின் பேரில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வலைவீசி தேடி வந்தனர்

இதற்கிடையே, அவரது மனைவி மற்றும் உறவினர் என 2 பேரை போலீசார் மதுரையில் வைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால், முக்கிய குற்றவாளியான சிவசுப்பிரமணியனிடம் செல்போன் எதுவும் இல்லாததால் செல்போன் சிக்னல் மூலம் அவரை பிடிக்க முடியவில்லை.

தப்பி ஓடிய சிவசுப்பிரமணியனுக்கு எப்படியும் பணம் தேவைப்படும். இதற்காக ஏ.டி.எம். மையத்துக்கு செல்வார். அப்போது பிடித்துவிடலாம் என போலீசார் நினைத்தனர். ஆனால் அவ்வாறு அவரது வங்கி கணக்கில் இருந்து யாருமே பணம் எடுக்கவில்லை. இதனால் அவரை தேடி கண்டுபிடிப்பதில் பின்னடைவு ஏற்பட்டது.

இந்த நிலையில் நாமக்கல் ரயில் நிலைய பகுதியில் கடந்த 4-ந் தேதி ரயிலில் அடிபட்ட நிலையில் அடையாளம் தெரியாத ஆண் உடல் மீட்கப்பட்டது. அந்த உடலை சேலம் ரயில்வே போலீசார் கைப்பற்றி நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு விசாரணை நடத்தி வந்தனர்.

அதில் அந்த நபர் விஷம் குடித்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் தென்காசி தனிப்படை போலீசார் நாமக்கல் பகுதிக்கு விரைந்து சென்று அந்த நபரின் உடலை பார்த்தனர். சிதைந்த நிலையில் இருந்த உடல் சிவசுப்பிரமணியனாக இருக்கலாம் என சந்தேகமடைந்தனர். எனவே, அவரது சொந்த ஊரில் உள்ள உறவினர்கள், சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரின் மனைவி ஆகியோரை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர். 

அந்த உடலை அவர்கள் பார்த்தபோது சிவசுப்பிரமணியன் தான் என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து அவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். போலீசார் தேடுவதை அறிந்த சிவசுப்பிரமணியன் விஷம் குடித்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து

unmaiDec 16, 2025 - 03:26:54 PM | Posted IP 104.2*****

advcoate & DMK person muthu kumarswamy done something wrong to sivasubramanian.Law cannot do anything against politician , Police, advocates & judge.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory