» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருநெல்வேலியில் கூட்டுறவு வார விழா: ரூ.107.71 கோடி மதிப்பில் கடனுதவிகள் வழங்கல்

வியாழன் 20, நவம்பர் 2025 5:54:26 PM (IST)



திருநெல்வேலியில் நடைபெற்ற 72-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில்ரூ.107.71 கோடி மதிப்பில் பல்வேறு கடனுதவிகளை சபாநாயகர் மு.அப்பாவு, கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் வழங்கினர். 

திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கில் 72-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா- மாநில அளவிலான விழா இன்று (20.11.2025) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு, கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் தலைமையில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் க.நந்தகுமார், கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் மு.வீரப்பன், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இவ்விழாவில், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராபர்ட் புரூஸ், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல்வஹாப், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட ஊராட்சித்தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், கூடுதல் பதிவாளர் /மேலாண்மை இயக்குநர் முனைவர்.க.சொ.இரவிச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் மு.துரை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

இவ்விழாவில், கூட்டுறவுத்துறையின் பங்கினை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட கூட்டுறவுப் பொருட்களை விளம்பரப்படுத்தும் கூட்டுறவு ரதத்தினையும், கூட்டுறவுத்துறை விளம்பரம் ஒட்டுவில்லைகள் ஒட்டப்பட்ட அரசுப் பேருந்துகளையும், "கூட்டுறவு ஜோதி” தொடர் ஓட்டத்தையும் துவக்கி வைத்து, கூட்டுறவு கொடியினை ஏற்றி வைத்து, கூட்டுறவு உறுதிமொழி மற்றும் கூட்டுறவு தன்னார்வலர் படை உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டார்கள்.

தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு திட்டமான தாயுமானவர் திட்டம், முதல்வர் மருந்தகம் உள்ளிட்ட பல்வேறு அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டார்கள். இவ்விழாவில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு பேசுகையில் :-
முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் கூட்டுறவுத் துறையை கொண்டு வந்தார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி கூட்டுறவுத் துறை அமைச்சர் கூட்டுறவுத் துறையை மிக சிறப்பாக வழி நடத்தி வருகிறார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசுகளை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விடுபடாமல் வழங்கி கூட்டுறவுத் துறை பணியாளர்கள் தங்களது பணிகளை மிகச் சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்கள். இந்தியாவிலே தமிழ்நாட்டில் தான் பொது விநியோகத் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கூட்டுறவுத்துறையில் பணியாற்றும் பணியாளர்கள் மிக சிறப்பாக பணியாற்றியதன் மூலம் ஒன்றிய அரசே பாராட்டும் வகையில் கூட்டுறவுத்துறை சிறப்பாக இயங்கி வருகிறது.

கூட்டுறவுத்துறை மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் தள்ளுபடி செய்துள்ளது. தமிழ்நாட்டில் கூட்டுறவுத்துறையில் பணியாளர்களின் உழைப்பின் காரணமாக தமிழ்நாட்டில் 70 ஆயிரம் கோடி டெபாசிட் வைத்துள்ளது. இந்தியாவிலே தமிழ்நாட்டில்தான் ரூ.20 ஆயிரம் கோடி பயிர்கடன் விவசாயிகளுக்கு வட்டி இல்லாமல் கொடுத்துள்ளது. கூட்டுறவு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் கூட்டுறவுத்துறை பணியாளர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் தெரிவித்தார்கள்.

இவ்விழாவில், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்ததாவது: 72-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா- மாநில அளவிலான விழா இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.பல நூற்றாண்டு காலத்திற்கு முன்பே தோன்றிய தமிழர்களுடைய கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம், பண்மையும், தொண்மையும் கொண்டது போல கூட்டுறவு நீண்ட நெடிய வரலாறு கொண்டது. இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் முதலாவதாக கூட்டுறவு தொடங்கப்பட்டது. குறிப்பாக, திருவள்ளூர் மாவட்டத்தில் திரூர் என்ற கிராமத்தில் 1904 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அமைப்பு தான் கூட்டுறவு சங்கங்கள். 125 ஆண்டுகளை எட்டிப்பிடித்த வரலாறு படைத்ததோடு, கூட்டுறவே நாட்டுயர்வு, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை மெய்ப்பிக்கும் வகையில் கூட்டுறவுத் துறை 30-க்கும் மேற்பட்ட செயல்பாடுகளுடன் சிறப்பாக இயங்கி கொண்டிருக்கிறது.

கிராமங்கள் முதல் நகரங்கள் வரை மக்களின் பொருளாதார தேவையை பூர்த்தி செய்கின்ற துறையாக கூட்டுறவுத்துறை விளங்கி வருகிறது. குறிப்பாக, எல்லா வகையான தொழில்களில் ஈடுபடுபவர்களுக்கும், அவர்களுக்கான முதலீடுகளுக்கான நிதியுதவி தேவை, அதற்காக மிக குறைந்த வட்டியிலும், சில காலக்கட்டத்தில் வட்டியில்லாத கடனுதவி வழங்கியுள்ளது.

கூட்டுறவில் பணிபுரிவதற்கு பட்டப்படிப்புடன், பட்டயப்படிப்பு அவசியம். அதனை கற்பிப்பதற்காக 24 கூட்டுறவு பட்டய படிப்புகள் சார்ந்த நிறுவனங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறது. படித்து வரும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருகின்ற துறையாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்பு 17 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி உள்ளது.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சிக்காலத்தின் தான் விவசாயிகளின் நலனின் கருத்தில் கொண்டு விவசாயிகள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு கட்டணமில்லா திட்டத்தினை கொண்டு வந்தார்கள். 1996-ஆம் ஆண்டு கூட்டுறவு சங்கங்களில் ரூ.7000 கோடி விவசாய கடனுதவிகளை தள்ளுபடி செய்தார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு கொரோனா போன்ற பேரிடர் காலக்கட்டத்தில் பொதுமக்களுக்கு வீடுத்தேடி சென்று காய்கறிகள், மளிகைப்பொருட்கள் கூட்டுறவுத்துறையின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. 5 பவுன் அதற்கு கீழ் அடகு வைத்த விவசாயிகளுக்கு ரூ.5225 கோடி கடனுதவி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ரூ.2500 கோடி மகளிர் சுய உதவிக்குழு கடனுதவி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறையின் மூலம் குறுகிய காலத்தில் விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், தொழில் முனைவோர்களுக்கு தேவையான கடனுதவிகள் வழங்கியுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி தேசிய அளவில் ஒன்றிய சார்பில் எடுக்கப்பட்ட தரவில் கூட்டுறவுத்துறை 5 பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக பாரத பிரதமர் மூலம் பாராட்டி விருது மற்றும் கேடயம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு குடும்பத்திலும், தனிநபரின் வளர்ச்சியிலும் கூட்டுறவுத்துறை என்பது இன்றியமையாத துறையாக செயல்பட்டு வருகிறது. மாவட்ட மற்றும் மாநில அளவிலான சிறந்த கூட்டுறவுச் சங்கங்களுக்கும் எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

தொடர்ந்து, 6 மகளிர் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோக்களை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு, கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் வழங்கினார்கள். மேலும், ரூ.65.73 கோடி மதிப்பில் 7548 உறுப்பினர்களுக்கு பயிர் கடனுதவிகளும், ரூ.25.56 கோடி மதிப்பில் 2676 உறுப்பினர்களுக்கு சுய உதவிகுழுக்கடனுதவிகளும், ரூ.2.42 கோடி மதிப்பில் 326 உறுப்பினர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் தனிநபர் மற்றும் குழுக்கடனுதவிகளும், ரூ.1.05 கோடி மதிப்பில் 112 உறுப்பினர்களுக்கு சிறுபான்மையினர் தனிநபர் மற்றும் குழுக்கடனுதவிகளும், ஒரு கோடி மதிப்பில் 105 உறுப்பினர்களுக்கு தாட்கோ கடனுதவிகளும், ரூ.60 இலட்சம் மதிப்பில் 60 உறுப்பினர்களுக்கு மாற்று பாலினத்தவர் கடனுதவிகளும், ரூ.30 இலட்சம் மதிப்பில் 10 உறுப்பினர்களுக்கு மினி மூன்று சக்கர வாகனத்திற்கான கடனுதவிகளும், ரூ.2 கோடி மதிப்பில் 350 உறுப்பினர்களுக்கு சிறுவணிகக்கடனுதவிகளும், ரூ.50 இலட்சம் மதிப்பில் 112 உறுப்பினர்களுக்கு பெண்கள் தொழில் முனைவோர் கடனுதவிகளும், ரூ.50 இலட்சம் மதிப்பில் 155 உறுப்பினர்களுக்கு நாட்டுப்புற கலைஞர்கள் கடனுதவிகளும், ரூ.2.50 கோடி மதிப்பில் 286 உறுப்பினர்களுக்கு மத்திய காலக்கடனுதவிகளும், ரூ.20 இலட்சம் மதிப்பில் 45 பயனாளிகளுக்கு விதவை மற்றும் கைம்பெண்கள் கடனுதவிகளும், ரூ.10 இலட்சம் மதிப்பில் 10 உறுப்பினர்களுக்கு முத்ரா கடனுதவிகளும், ரூ.1.50 கோடி மதிப்பில் 165 உறுப்பினர்களுக்கு சிறு குறு தொழில் கடனுதவிகளும், ரூ.50 இலட்சம் மதிப்பில் 55 பயனாளிகளுக்கு கலைஞர் கைவினைத்திட்டம் கடனுதவிகளும், ரூ.25 இலட்சம் மதிப்பில் 52 உறுப்பினர்களுக்கு கலைஞர் கனவு இல்லம் கடனுதவிகளும். ரூ.50 இலட்சம் மதிப்பில் 56 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி கடனுதவிகளும், ரூ.1 கோடி மதிப்பில் 22 பயனாளிகளுக்கு வீடு கட்டும் கடனுதவிகளும், ரூ.1.50 கோடி மதிப்பில் 25 உறுப்பினர்களுக்கு வீடு அடமானக்கடனுதவிகள் என மொத்தம் ரூ.107.71 கோடி மதிப்பில் 12,170 உறுப்பினர்களுக்கு பல்வேறு கடனுதவிகளை வழங்கினார்கள்.

தொடர்ந்து, சிறந்த கூட்டுறவு கீதத்தை எழுதிய ஆனந்த் செல்வன் அவர்களுக்கு ரூ.50 ஆயிரத்திற்கான பரிசுத்தொகை மற்றும் சிறப்பு கேடயத்தினையும், மாநில அளவிலான சிறப்பாக செயல்பட்ட 74 கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்களையும் வழங்கி, பாராட்டினார்கள். மேலும், கூட்டுறவுத் துறையில் பணியிலிருக்கும்போது இறந்த பணியாளரின், குடும்ப வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை ஒரு நபருக்கும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு, கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் வழங்கினார்கள்.

இவ்விழாவில், திருநெல்வேலி இணைப் பதிவாளர் ப.மு.முருகேசன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி செயலாட்சியர் திலிப்குமார், கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர்கள், இணைப்பதிவாளர்கள், மாநில அளவிலான கூட்டுறவு அலுவலர்கள், சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory