» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லை அருகே வாலிபர் கழுத்தை இறுக்கி படுகொலை : அக்காள் கணவர் வெறிச்செயல்!

வெள்ளி 31, அக்டோபர் 2025 8:22:08 AM (IST)

நெல்லை அருகே லுங்கியால் கழுத்தை இறுக்கி வாலிபரை  படுகொலை செய்து, அவரது உடலை கல்வெட்டான் குழியில் வீசிய அக்காள் கணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பெரியபாளையம் பகுதியை சேர்ந்தவர் வெள்ளபாண்டி (27), கட்டிட தொழிலாளி. இவருக்கும் மேலப்பாட்டம் கொம்மந்தனூர் பகுதியை சேர்ந்த சுதா என்பவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சுதாவின் தம்பி பெருமாள் (21), வெல்டிங் தொழிலாளி. வெள்ளபாண்டிக்கும், சுதாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் இருவரும் பிரிந்து வாழ்வதும், பின்னர் பெற்றோரின் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் மீண்டும் சேர்ந்து வாழ்வதுமாக இருந்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் வெள்ளபாண்டியை பாளையங்கோட்டை போலீசார் கைது செய்தனர். இதனால் சுதா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

தீபாவளி பண்டிகைக்கு 2 நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்த வெள்ளபாண்டி, சுதாவின் பெற்றோர் வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டார். அவர் நேற்று முன்தினம் காலையில் மீண்டும் சுதாவின் பெற்றோர் வீட்டுக்கு வந்து, அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கிவிட்டு சென்றுவிட்டார்.

இதனால் சுதாவின் குடும்பத்தினர் மனமுடைந்தனர். ஆனால் மாலையில் சுதாவின் தம்பி பெருமாளை, வெள்ளபாண்டி செல்போனில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது, குடும்ப பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், கல்வெட்டான் குழி பகுதிக்கு வருமாறும் அழைத்துள்ளார்.

இதை நம்பிய பெருமாள் அந்த பகுதிக்கு தனியாக சென்றார். அப்போது அங்கு ஏற்கனவே காத்திருந்த வெள்ளபாண்டி மற்றும் அவரது நண்பர் மதுபாலன் ஆகியோர் சேர்ந்து பெருமாளை திடீரென சரமாரி தாக்கினர். அவரை கீழே தள்ளி லுங்கியால் கழுத்தை இறுக்கி கொலை செய்தனர். மேலும் அவரது உடலை சுமார் 400 அடி ஆழமுள்ள கல்வெட்டான் குழியில் வீசினர். அங்கு தேங்கியிருந்த தண்ணீருக்குள் அவரது உடல் மூழ்கியது.

இதுபற்றி தகவலறிந்ததும் பாளையங்கோட்டை தாலுகா போலீசார் உடனடியாக வெள்ளபாண்டி, மதுபாலனை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் இருவரும் சேர்ந்து பெருமாளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்தனர்.

நேற்று காலை 2 பேரையும், போலீசார் சம்பவம் நடந்த கல்வெட்டான் குழி பகுதிக்கு அழைத்துச்சென்றனர். அங்கு பெருமாளின் உடலை வீசியதாக வெள்ளபாண்டி சுட்டிக்காட்டிய பகுதியில் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் தேடும் பணியில் ஈடுபட்டனர். 

400 அடி வரை ஆழமுள்ள கல்வெட்டான் குழியில் பெருமாளின் உடலை மீட்பது சவாலான பணியாகும். இதையறிந்த பெருமாளின் குடும்பத்தினரும் அந்த பகுதிக்கு வந்து கதறி அழுதனர். குடும்பத்தகராறில் தொழிலாளியை அக்காள் கணவரே கொலை செய்த பயங்கர சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory