» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் கனமழை: தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு!

ஞாயிறு 19, அக்டோபர் 2025 9:56:47 AM (IST)



மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் தொடர் மழையால் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவிலை வெள்ளம் சூழ்ந்து சென்றது.

நெல்லை மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வந்தது. இதனால் முக்கிய சாலைகள் மற்றும் தெருக்கள், தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் பிரதான அணையான பாபநாசம் அணை (143 அடி உயரம்) நீர்மட்டம் மேலும் 2 அடி உயர்ந்து 88.10 அடியாக உள்ளது.

அணைக்கு வினாடிக்கு நீர்வரத்து 1,614 கன அடியாகவும், வெளியேற்றம் 200 கன அடியாகவும் உள்ளது. சேர்வலாறு அணை (156 அடி உயரம்) நீர்மட்டம் 2½ அடி உயர்ந்து 102.33 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணை (118 அடி உயரம்) நீர்மட்டம் 94 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 712 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.

கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 59 அடியாக உள்ளது. நீர்வரத்து 138 கன அடியாகவும், வெளியேற்றம் 5 கன அடியாகவும் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் காட்டாற்று வெள்ளம், மழை வெள்ளம் ஆகியவை கலந்துவிட்டதால் நெல்லை தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக செம்மண் நிறத்தில் வெள்ளம் குறுக்குத்துறை முருகன் கோவிலை சூழ்ந்தபடி பெருக்கெடுத்து ஓடுகிறது.

கோவில் கருவறை உள்ளேயும் தண்ணீர் புகுந்துள்ளது. ‘இளம் கன்று பயமறியாது’ என்பதால் நேற்று இளைஞர்கள் சிலர் குறுக்குத்துறை கோவில் மண்டபம் மீது ஏறிநின்று ஆற்றில் குதித்து உற்சாகமாக குளித்தனர். நேற்று காலை முதல் நெல்லை மாநகரில் மழை பெய்யவில்லை. தென்காசி மாவட்டத்திலும் நேற்று மழை குறைந்து, வெயில் முகம் காட்டியது.

அங்குள்ள கடனாநதி அணை (85 அடி உயரம்) நீர்மட்டம் 11 அடி உயர்ந்து 44.20 அடியாக உள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 376 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

ராமநதி அணை (84 அடி உயரம்) நீர்மட்டம் 8½ அடி உயர்ந்து 55 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 206 கன அடி ஆகும். கருப்பநாதி அணை (72 அடி உயரம்) நீர்மட்டம் 6 அடி உயர்ந்து 53 அடியாக உள்ளது. நீர்வரத்து 219 கன அடியாகும். அடவிநயினார் அணை (132 அடி உயரம்) நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 117 அடியாக உள்ளது. 79 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டி அமைந்துள்ள பணகுடி குத்திரபாஞ்சான் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இந்த தண்ணீர் கன்னிமாறான் ஓடை வழியாக அனுமன் நதியில் பாய்ந்து செல்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் கன்னிமாறான் ஓடையில் குளித்து மகிழ்ந்தனர்.

செங்கோட்டை அருகே உள்ள கண்ணுப்புள்ளிமெட்டு என்ற இடத்தில் குண்டாறு அணை அமைந்துள்ளது. 36.10 அடி கொள்ளவு கொண்ட இந்த அணை நிரம்பி வழிகிறது. அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேறப்பட்டு வருகிறது. இதனால் அணையின் அருகே செல்வதற்கு பொதுமக்கள் யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory