» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கரூர் சம்பவம் போன்று மீண்டும் நடைபெறாமல் இருக்க வேண்டும்: ப.சிதம்பரம்

திங்கள் 29, செப்டம்பர் 2025 11:59:39 AM (IST)

கரூர் சம்பவம் போன்று துயர சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க எல்லோரும் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அங்குள்ள தனியார் மருத்துவமனையிலும் பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் மத்திய முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, "கரூரில் நடந்த துயர நிகழ்வில் 40 பேர் இறந்திருக்கிறார்கள். அதில் 17 ஆண்கள், 14 பெண்கள், 9 குழந்தைகள் என்பது நெஞ்சை உலுக்குகிறது.

பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இறந்தவர்களுக்கு என் அஞ்சலி. அவர்கள் குடும்பத்தினர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபங்கள்.காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைவார்கள் என்று நம்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில்,"கரூரில் நடந்த துயர நிகழ்வு பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையே காங்கிரஸ் கட்சியின் கருத்து. அதுவே என்னுடைய கருத்து. ஊடகச் செய்திகளைப் படித்த பிறகு, காட்சிகளைப் பார்த்த பிறகு நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன என்று எனக்குத் தோன்றுகிறது.

எனக்கு ஒரு யோசனை தோன்றியது. அந்த யோசனையைத் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரிடம் தெரிவித்திருக்கிறேன். அது யோசனைதான். இது போன்று பலர் ஆக்கபூர்வமான யோசனைகளைத் தெரிவித்திருப்பார்கள். எல்லா யோசனைகளையும் பரிசீலித்து முடிவுகளை எடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு. 

அந்த முடிவுகளுக்கு எல்லா அரசியல் கட்சிகளும் பொது வெளி நிகழ்ச்சிகள் நடத்துபவர்களும் கீழ்ப்படிந்து நடந்துகொள்ள வேண்டும். கரூர் நிகழ்வைப் போன்று துயர சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க எல்லோரும் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory