» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விலைமதிக்க முடியாத உயிர்களை இழந்துள்ளோம் : கரூரில் எடப்பாடி பழனிச்சாமி வேதனை!

ஞாயிறு 28, செப்டம்பர் 2025 2:26:54 PM (IST)

கரூரில் தவெக விஜய் பரப்புரை நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடலுக்கு  கரூர் மருத்துவமனையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை அஞ்சலி செலுத்தினார்.

இறந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் கரூர் அரசு மருத்துவமனைக்குள் சிகிச்சை பெற்று வருபவர்களை எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆறுதல் கூறினார். 

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, ‘’நேற்றைய தினம் கரூரில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசிக்கொண்டு இருந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகவும், அதில் பலர் மயங்கி விழுந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில் இதுவரை 39 பேர் இறந்துள்ளதாகவும், சுமார் அரசு மருத்துவமனையில் 51 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில் 2 பேர் அபாய கட்டத்தில் இருப்பதாகவும், தனியார் மருத்துவமனையில் 30 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

இந்த பொதுக்கூட்டம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, ஊடகத்தின் வாயிலாக கிடைக்கப்பட்ட தகவலில் அடிப்படையில் அங்கு மின்சார வீளக்குகள் அணைந்ததாகவும், அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதற்கு முன் தவெக 4 மாவட்டங்களில் கூட்டங்களை நடத்தி இருக்கிறார்கள். அங்கெல்லாம் நிறைய கூட்டம் வந்திருக்கிறது. அதேபோல் இங்கேயும் கூட்டம் வந்தது, அவற்றை எல்லாம் ஆய்வு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும்.

கூட்டத்தின்போது பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தது தொலைக்காட்சியில் தெளிவாக தெரிந்தது. ஏற்கெனவே தவெக கூட்டங்கள் நடந்தபோதும் முழுமையான பாதுகாப்பு  வழங்கப்பட்டதாக தெரியவில்லை. தொலைக்காட்சிகளில் பார்த்ததை வைத்துத்தான் நான் இதை குறிப்பிடுகிறேன். 

இந்த கட்சி மட்டுமல்ல அதிமுக சார்பில் நான் எழுச்சி பயணம் மேற்கொண்டு வருகிறேன். அதில்கூட காவல்துறை எங்களுக்கு முழுமையான பாதுகாப்பு கொடுக்கவில்லை. மூன்று நான்கு மாவட்டங்களில் மட்டுமே பாதுகாப்பை முழுமையாக கொடுத்தார்கள், மற்ற இடங்களில் போதுமான பாதுகாப்பு இல்லை. காவலர்கள் பொதுமக்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடவில்லை. அதே நேரத்தில் முதல்வர், துணை முதல்வர் பங்கேற்கும் கூட்டங்களிலும், திமுக நிகழ்ச்சிகளிலும் ஆயிரக்கணக்கான காவலர்களை பாதுகாப்புக்கு நியமிக்கிறார்கள். இந்த அரசு ஒருதலைப்பட்சமாக நடக்கிறது. 

எந்த கட்சி என்று பார்க்காமல் அரசும், காவல்துறையும் நடுநிலையோடு செயல்பட வேண்டும். அதிமுக அரசு இருந்தபோது பல்லாயிரக்கணக்கான போராட்டங்கள் நடந்தன. அந்த போராட்டங்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் முழுமையான பாதுகாப்பை கொடுத்தோம். இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, மற்ற கட்சியினர் கூட்டம் நடத்துவதே சிரமமாக உள்ளது.  நீதிமன்றத்துக்கு சென்று அவர்கள் மூலம் அனுமதி பெற்றுத்தான் கூட்டம் நடத்தும் சூழல் உள்ளது. அப்படி சூழல் இருந்தும், முறையான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டும் இந்த அரசும் காவல் துறையும் முழுமையான பாதுகாப்பை கொடுப்பதில்லை. முறையான பாதுகாப்பு கொடுத்திருந்தால் தள்ளுமுள்ளு ஏற்படாமல் பார்த்திருக்கலாம், உயிரிழப்பை தடுத்திருக்கலாம்.

ஒரு அரசியல் கட்சித் தலைவரும் அதை கவனித்திருக்கலாம். அவர் 4 மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்திருக்கிறார். 4 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்தபோது  ஒவ்வொரு மாவட்டத்திலும் கூட்டம் எப்படி இருக்கிறது, என்னென்ன குறைபாடு இருக்கிறது, எதையெல்லாம் சரிசெய்ய வேண்டும் என்று அவர்களும்  ஆலோசனை பெற்று அதற்கு ஏற்றவாறு முன்னேற்பாட்டோடு நடத்த வேண்டும். எல்லாமே விலை மதிக்க முடியாத உயிர்கள். ஒரு கட்சியின் பாதுகாப்பை நம்பி, அரசை நம்பித்தான் மக்கள் இதுபோன்ற கூட்டங்களில் கலந்துகொள்கிறார்கள்.

அரசாங்கமும், காவல் துறையும் பொதுக்கூடத்தில் பங்கேற்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். அதேபோல் அரசியல் கட்சித் தலைவர்களும் அங்கே குழுமியுள்ள கூட்டத்துக்கு ஏற்றவாறு நடந்துகொள்ள வேண்டும். காலையில் குறிப்பிட்ட நேரத்தில் கூட்டத்தை அறிவிக்கிறார்கள் என்றால் அந்த நேரத்தில் கூட்டத்தை நடத்த வேண்டும். பல மணி நேரம் கழித்து வந்து கூட்டத்தில் பேசும்போது, அதனால் சில பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

முதலமைச்சர் நேரில் வந்து சந்திப்பது அவரது கடமை, அந்த அந்தஸ்தில் இருக்கிறார் அவர் வந்து செல்கிறார். எந்த அரசாங்கமாக இருந்தாலும் இப்படி வேகமாக செயல்பட்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் அதைத்தான் இந்த அரசாங்கமும் செய்திருக்கிறது. 

இந்த நேரத்தில் நான் யாரையும் இந்த நேரத்தில் குற்றம் சொல்ல விரும்பவில்லை. விலை மதிக்க முடியாத உயிர்களை இழந்திருக்கிறோம். இந்தியாவிலேயே ஒரு அரசியல் கட்சி நடத்தும் பொதுக்கூட்டத்தில் இத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது இதுதான் முதல் முறை. தமிழகத்தில் நம் சகோதர சகோதரிகளின் விலைமதிக்க முடியாத உயிர்களை இழந்துள்ளோம். இது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.

மிகுந்த வேதனையோடு இந்த கருத்தை சொல்கிறேன். அனைத்துக் கட்சி தலைவர்களும் இதை சிந்தித்து பார்க்க வேண்டும். அதிமுக உள்ளிட்ட பல கட்சிகள் பல நிகழ்ச்சிகள், போராட்டங்களை நடத்தி இருக்கிறார்கள். அவர்களுக்கு அனுபவம் இருக்கிறது.  ஒரு தொகுதியில், ஒரு மாவட்டத்தில் எவ்வளவு கூட்டம் வரும் அதை எப்படி சமாளிப்பது என்பதில் அவர்களுக்கு அனுபவம் இருக்கிறது. அந்த அடிப்படையில் கூட்டம் நடக்கும்போது இப்படிப்பட்ட  நடக்காமல் ஒழுங்குபடுத்திக் கொள்கிறார்கள். இதை மற்றவர்களும் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory