» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லை திருமண்டல தேர்தல் நவம்பர் 30ம் தேதி தொடக்கம் : வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு

வெள்ளி 26, செப்டம்பர் 2025 8:55:25 PM (IST)



சி.எஸ்.ஐ. திருநெல்வேலி திருமண்டலத்தில் முதல் கட்டமாக நவம்பர் 30ம் தேதி திருமண்டல பெருமன்றத் தேர்தல் நடைபெறுகிறது.

தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ.) திருநெல்வேலி திருமண்டல நிர்வாகிகளின் பதவி காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து திருமண்டல தேர்தலை நடத்தவும், அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், சினாடு பேரவை சார்பில் உயர்மட்ட நிர்வாகக் குழுவினர் நியமிக்கப்பட்டனர்.இதில் நெல்லைத் திருமண்டல பேராயர் பர்னபாஸ், நிர்வாகச் செயலர் கிறிஸ்டோபர் செல்வராஜ், பொருளாளர் அனிஷ் உட்பட 13 பேர் அடங்கிய குழுவினர் நியமனம் செய்யப்பட்டனர்.

இன்று செப்டம்பர் 26ந் தேதி தேர்தலுக்கான சிறப்பு நிர்வாகக் குழு கூட்டம் திருமண்டல அலுவலக கூட்ட அரங்கில் வைத்து நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருமண்டல புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டது.

பல்வேறு கட்டங்களாக நடைபெறும் தேர்தலின் தொடக்கமாக அக்டோபர் 5ந் தேதி ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலி திருமண்டலத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் வாக்காளர் பட்டியல் அறிவிப்பு பலகையில் ஒட்டப்படுகிறது. மேலும் சபை மக்களால் மேல்முறையீடு செய்யப்பட்டு அக்டோபர் 15ந் தேதி திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் அந்தந்த ஆலயங்களில் ஒட்டப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து முதல் கட்ட தேர்தலில் திருமண்டல பெருமன்ற உறுப்பினர்களுக்கான வேட்பு மனுத் தாக்கலில் அக்டோபர் 26 ந் தேதி தொடங்கி நவம்பர் 5ந் தேதி வரை நடைபெறுகிறது. நவம்பர் 10 ந் தேதி வேட்பு மனுவைத் திரும்ப பெற கடைசி நாளாகும். தொடர்ந்து நவம்பர் 16ந் தேதி சேகர மன்ற பிரதிநிதிகள் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் தொடங்கி நவம்பர் 23ந் தேதி வரை நடைபெறுகிறது. நவம்பர் 25ந் தேதி சேகர மன்ற பிரதிநிதிகள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவை திரும்ப பெற கடைசி நாளாகும்.

இதைத் தொடர்ந்து வருகிற நவம்பர் ம்பர் 30ந் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆராதனையைத் தொடர்ந்து முதற்கட்டமாக திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் மற்றும் சேகர மன்ற பிரதிநிதிகள் தேர்தல் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து சேகரமன்ற அளவிலும் மற்றும் சபை மன்ற அளவிலும் பல்வேறு பதவிகளுக்கான தேர்தல்கள் பல்வேறு கட்டங்களாக நடைபெறுகிறது.

நிறைவாக 2026 ம் ஆண்டு பிப்ரவரி 10,11 ஆகிய தேதிகளில் பாளை. தூய திரித்துவ பேராலயத்தில் வைத்து திருமண்டல பெருமன்ற கூட்டம் நடைபெறுகிறது. இதில் நெல்லை திருமண்டல நிர்வாகிகளான உபதலைவர், லே செயலர், குருத்துவ காரியதரிசி, திருமண்டல பொருளாளர் ஆகியோருக்கான தேர்தல் நடைபெறுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory