» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இளையராஜா பாடல் காப்புரிமை விவகாரம்: சோனி நிறுவனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

வெள்ளி 26, செப்டம்பர் 2025 5:43:04 PM (IST)



பாடல் காப்புரிமை விவகாரம் தொடர்பாக இளையராஜா தொடர்ந்த வழக்கில், சோனி நிறுவனம் அவரது பாடல்களை வணிக ரீதியில் பயன்படுத்தி ஈட்டிய வருமான விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சோனி மியூசிக் என்டர்டைன்மென்ட் இந்திய பிரைவேட் லிமிடட் நிறுவனம், எக்கோ ரெகார்டிங் நிறுவனம் அமெரிக்காவில் உள்ள ஓரியண்டல் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். 

அந்த வழக்கில் தான் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சுமார் 7,500 திரைப்பட பாடல்களுக்கு இசையமைத்து உள்ளதாகவும் என்னுடைய இசைப் பணியை பாராட்டி தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசுகள் பல்வேறு விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். தனது இசை படைப்புகள் காப்புரிமை சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று என்றும் எனது இசை படைப்புகளுக்கு தான் மட்டுமே உரிமையாளர், இதற்கு மற்றவர்கள் உரிமை கோரவோ அல்லது அதனை பயன்படுத்துவதற்கோ அதிகாரம் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு ஊடகங்கள், இணையதளங்கள், பல்வேறு இசை நிறுவனங்கள் ஆகியவை தனது பாடலை அனுமதியில்லாமல் பயன்படுத்தி வருவதாகவும் இது காப்புரிமை சட்டத்திற்கு எதிரானது என்றும், குறிப்பாக சோனி நிறுவனம் மற்றும் அதன் சமூக வலைதள பக்கங்களில் என்னுடைய பாடல்களை மாற்றியும் பயன்படுத்தி தன்னுடைய அனுமதி இல்லாமல் பல்வேறு வடிவங்களில் அதனை மாற்றி பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ள இளையராஜா, சோனி நிறுவனம் எக்கோ நிறுவனத்திடம் இருந்து பாடல்களை வாங்கியதாக கூறினாலும், அதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை உத்தரவுள்ளதாகவும் அந்த உத்தரவை மதிக்காமல் அதனை சார்ந்த நிறுவனங்கள் தன்னுடைய பாடல் படைப்புகளை அனுமதி இல்லாமல் பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

காப்புரிமைச் சட்டத்தின்படி எனது இசையின் முதல் உரிமை படைப்பாளியான எனக்கே முதல் உரிமை உள்ளதாகவும், தான் பாடல்களின் உரிமையை யாருக்கும் வழங்கவில்லை, எந்த உரிமைகளையும் மாற்றித் தரவும் இல்லை எனவே சோனி நிறுவனம் மற்றும் அதை சார்ந்த நிறுவனங்கள் என்னுடைய பாடல்கள் மற்றும் அது தொடர்பான விபரங்களை மாற்றி அமைக்கவோ அதனைக் கொண்டு இசை கோர்வைகளை செய்ய தடை விதிக்க தடை வேண்டும் என கோரியிருந்தார். மேலும் தனது பாடல்களை பயன்படுத்தி சோனி நிறுவனம் ஈட்டிய வருவாய் விவரங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இளையராஜா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், இளையராஜா பாடல்களை சோனி நிறுவனம் தவறாக பயன்படுத்தி வருமானம் ஈட்டி வருவதாகவும் எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கூறினார். இதனையடுத்து வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இளையராஜா பாடல்களை வணிகரீதியாக பயன்படுத்தி ஈட்டிய வருமானம் குறித்த விவரங்கள், வரவு செலவுகளை தாக்கல் செய்ய சோனி நிறுவனத்திற்கு உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 22ம் தேதிக்கு தள்ளி வைத்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory