» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காதல் விவகாரத்தில் 4 வயது குழந்தை காரில் கடத்தல்: 2 மணி நேரத்தில் மீட்ட போலீஸ்!

வியாழன் 25, செப்டம்பர் 2025 3:52:54 PM (IST)



குடியாத்தத்தில் தந்தை மீது மிளகாய் பொடியை தூவி கடத்தப்பட்ட 4 வயது குழந்தையை  தனிப்படை போலீசார் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டை பவளக்கார தெருவைச் சேர்ந்தவர் வேணு (33). இவரது மனைவி ஜனனி. இவர்களின் மகன் யோகேஷ் (4). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் யோகேஷ் எல்.கே.ஜி படித்து வருகிறார். வேணு, வீட்டில் இருந்தபடி ஐ.டி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

வழக்கம் போல் மகன் யோகேஷை பள்ளியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் நேற்று பகல் 12.30 மணியளவில் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார் யோகேஷ். அப்போது, வேணுவின் வீட்டின் அருகே நின்றிருந்த கர்நாடக மாநில பதிவெண் கொண்ட வெள்ளை நிற காரில் இருந்து ஹெல்மெட் அணிந்த மர்ம நபர் ஒருவர் கீழே இறங்கியுள்ளார்.

அவர், திடீரென வேணுவின் மீது மிளகாய் பொடியை தூவிவிட்டு வாசலில் நின்றிருந்த குழந்தையை கடத்திக் கொண்டு தயாராக இருந்த காரில் தப்பினார். இதனால் அதிர்ச்சியடைந்த வேணு, குழந்தையை மீட்க சிறிது தொலைவு காரில் தொங்கியபடி வேணு சென்ற நிலையில் அவரால் மீட்க முடியாமல் கீழே விழுந்தார். அதற்குள், அந்த தெருவில் இருந்து கார் மின்னல் வேகத்தில் பறந்தது. இந்த தகவலால் கமாட்சியம்மன்பேட்டை பகுதியில் பொதுமக்கள் திரண்டதால் பதற்றமான நிலை ஏற்பட்டது.

இதுகுறித்த தகவலறிந்த குடியாத்தம் நகர போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரித்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த கார் உள்ளி சாலை வழியாக செல்வது தெரியவந்தது. போலீசார் அந்த சாலையில் பின்தொடர்ந்து சென்றனர். அதேநேரம், வேலூர் மற்றும் அண்டை மாவட்ட போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் வெள்ளை நிற கர்நாடக மாநில பதிவெண் கொண்ட காரை மடக்கி பிடிக்க வாகனத் தணிக்கை மேற்கொண்டனர்.

இதற்கிடையில், மாதனூர் அருகே குழந்தை ஒன்று தனியாக அழுது கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரியவந்தது. பள்ளிகொண்டா போலீசார் விரைந்து சென்று பார்த்ததில் அந்த குழந்தை குடியாத்தத்தில் காரில் கடத்தப்பட்ட யோகேஷ் என தெரியவந்தது. பாதுகாப்பாக மீட்கப்பட்ட குழந்தையை பள்ளிகொண்டா காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு, எஸ்.பி. மயில்வாகனன் விசாரணைக்கு பிறகு குழந்தையை பத்திரமாக பெற்றோரிடம் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரின் பதிவெண் போலியானது என தெரிய வந்துள்ளது. குழந்தை கடத்தப்பட்ட 2 மணி நேரத்தில் மீட்கப்பட்டது.

குடியாத்தத்தில் காரில் குழந்தை கடத்தப்பட்ட வழக்கில் தப்பி ஓடியவர்களை கைது செய்ய தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இதில், கிருஷ்ணகிரி அருகே பாலாஜி என்பவரை தனிப்படையினர் நேற்று இரவு பிடித்துள்ளனர். விக்னேஷ் என்பவர் தப்பிவிட்டார். பாலாஜியிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் காதல் விவகாரத்தில் வேணு குடும்பத்தினரை பழிவாங்க குழந்தையை கடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory