» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உயர்கல்வித்துறை அதளபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது: டிடிவி தினகரன்

வெள்ளி 11, ஜூலை 2025 12:27:27 PM (IST)

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளில் உயர்கல்வித்துறை அதளபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பேராசிரியர்களை மாற்றுக் கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்யும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும் – அரசுக் கல்லூரிகளில் காலியாக இருக்கும் பல்லாயிரக்கணக்கான பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிமுறைகளுக்கு மாறாக, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பேராசிரியர்களை மாற்றுக் கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்வதை கண்டித்து அப்பல்கலைக்கழக பேராசிரியர்கள் கடந்த இரு தினங்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே 60 சதவிகிதம் பேராசிரியர்கள் பற்றாக்குறையுடன் இயங்கி வரும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், தற்போது பணியில் இருக்கும் பேராசிரியர்களையும் மாற்றுக் கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்யும் வகையில் தமிழக அரசின் கல்லூரி கல்வி இயக்குனர் அனுப்பியிருக்கும் சுற்றறிக்கை கடும் கண்டனத்திற்குரியது.

பாடப்புத்தகங்களை தயாரித்து விநியோகிப்பது, விடைத்தாள் திருத்துவது, ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டுவது என பல்வேறு பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள பேராசியர்களை இடமாற்றம் செய்வது, அங்கு பயிலும் மாணவர்களின் கல்வித் திறனை பாதிப்பதோடு, வரும் காலங்களில் மாணவர் சேர்க்கை குறைந்து பல்கலைக்கழகத்தின் அங்கீகாரமும் ரத்தாக வாய்ப்பிருப்பதாக பேராசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதல்வர் தொடங்கி பேராசிரியர்கள் வரை நிலவும் பல்லாயிரக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசால் உயர்கல்வித்துறை அதளபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பேராசிரியர்களை மாற்றுக் கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்யும் முடிவை உடனடியாக கைவிடுவதோடு, காலியாக இருக்கும் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உயர்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். என தெரிவித்துள்ளார் .


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory