» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஜெயராஜ் - பென்னிக்ஸ் படுகொலை வழக்கை விரைந்து முடிக்க வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!
புதன் 25, ஜூன் 2025 10:19:19 AM (IST)
சாத்தான்குளம் தந்தை-மகன் படுகொலை வழக்கு விசாரணையை விரைந்து முடித்து, குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் காவல்துறையினரின் கொடூர தாக்குதலில் உயிரிழந்த கொடுநிகழ்வு நடந்து ஐந்து ஆண்டுகளைக் கடந்த பின்பும் வழக்கு விசாரணை இன்னும் நிறைவடையாதது ஏமாற்றமும், மனவேதனையும் அளிக்கிறது. விசாரணையை விரைந்து முடிக்காமல் மத்திய அரசின் குற்றப் புலனாய்வுத்துறை தொடர்ந்து காலங்கடத்தி வருவது வன்மையான கண்டனத்துக்குரியது.கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது, கொரோனா பெருந்தொற்று காலத்தில் 22.06.2020-ம் நாள் அப்படுகொலைகள் தமிழ்நாடு காவல்துறையால் நிகழ்த்தப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசின் சி.பி.சி.ஐ.டி முதலில் விசாரிக்கத் தொடங்கிய நிலையில், பின்பு மத்திய அரசின் சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இப்படுகொலைகள் தொடர்பாக அன்றைய சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர், துணை ஆய்வாளர் உட்பட 9 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, 105 சாட்சிகளிடம் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.
இவ்வழக்கை 6 மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் ஐகோர்ட்டு மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்த நிலையில் ஒவ்வொரு முறையும் சி.பி.ஐ. கால அவகாசம் கோரியதன் விளைவாக, படுகொலை நிகழ்ந்து ஐந்தாண்டுகளாகியும் இதுவரை வழக்கு விசாரணை முடிவடையவில்லை.
அதிகாரத்தில் உள்ளவர்களால் நிகழ்த்தப்பட்டு நாட்டையே உலுக்கிய மிகக்கொடூர படுகொலை நிகழ்வான சாத்தான்குளம் படுகொலைகளின் வழக்கு விசாரணையே இத்தனை ஆண்டுகள் காலதாமதம் எனில், வெளியே தெரியாத சாமானியர்களின் கொலை வழக்குகளில் நீதி கிடைக்க எத்தனை நூற்றாண்டுகள் ஆகுமோ என்று எண்ணத் தோன்றுகின்றது.
கொலை செய்யப்பட்டவர்கள் யார், எங்கே கொலை செய்யப்பட்டார்கள், எப்படி கொலை செய்யப்பட்டார்கள், ஏன் கொலை செய்யப்பட்டார்கள், கொலை செய்தவர்கள் யார் என்ற அனைத்தும் தெள்ளத்தெளிவாக தெரிந்திருந்தும், அதற்கான சாட்சிகள் அனைத்துமிருந்தும் ஐந்தாண்டுகள் ஆகியும் விசாரணை நிறைவடையாதது ஏன்? ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தில் சி.பி.ஐ. கால அவகாசம் கேட்பதும், அதை நீதிமன்றம் அனுமதிப்பதும் ஏன்? யாரைக் காப்பாற்ற, யாருடைய உத்தரவின் பேரில் சி.பி.ஐ. இப்படி காலதாமதம் செய்கிறது?
பொள்ளாச்சி பாலியல் வழக்கு முடிய 5 ஆண்டுகள், ஜெயராஜ் - பென்னிக்ஸ் படுகொலை வழக்கில் 5 ஆண்டுகள் என நாடறிந்த வழக்குகளில் கீழமை நீதிமன்றங்களில் இத்தனை ஆண்டுகள் தாமதம் ஆகின்றது எனில், சுப்ரீம் கோர்ட்டு வரை மேல்முறையீடு செய்யப்பட்டு இறுதி தீர்ப்பு கிடைக்க இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ?
தாமதித்து வழங்கப்படும் நீதி அநீதிக்கு சமம் என்பதை இந்த நாட்டின் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும், நீதிமான்களும் எப்போது உணரப்போகிறார்கள்? குற்றவாளிகளே மரணித்துபோகும் வரை, குற்ற வழக்குகளில் விசாரணையை இழுத்தடிப்பது என்பது இந்த நாட்டில் மட்டுமே நிகழும் மிகப்பெரிய சாபக்கேடாகும்.
ஆகவே, தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளால் படுகொலை செய்யப்பட்ட சாத்தான்குளம் தந்தை-மகன் வழக்கு விசாரணையை விரைந்து முடித்து, குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனையைப் பெற்றுத்தந்து ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்திற்கு உரிய நீதியை விரைந்து வழங்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
சனி 13, டிசம்பர் 2025 5:50:12 PM (IST)

திருப்பரங்குன்றம் பிரச்சினைக்கு பாஜக, திமுக அரசுதான் காரணம் : சீமான் குற்றச்சாட்டு!
சனி 13, டிசம்பர் 2025 4:04:43 PM (IST)

தூத்துக்குடியில் ஸ்டால் இன் மால் விற்பனை கண்காட்சி : மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்
சனி 13, டிசம்பர் 2025 3:13:37 PM (IST)

பெருமாநிலங்களை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு சாதனை : முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சனி 13, டிசம்பர் 2025 12:53:04 PM (IST)

பள்ளி வகுப்பறையில் மது அருந்திய விவகாரம்: நெல்லையில் 6 மாணவிகள் சஸ்பெண்ட்...!
சனி 13, டிசம்பர் 2025 12:09:48 PM (IST)

ஓபிஎஸ் தலைமையில் டிச.15ல் நடைபெறவிருந்த ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு
சனி 13, டிசம்பர் 2025 11:52:30 AM (IST)


.gif)
தமிழ்நாட்டில் இதெல்லாம் சகஜம்Jun 25, 2025 - 11:51:50 AM | Posted IP 172.7*****