» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் பல பகுதிகளில் வெப்ப அலை: 4 நாட்களுக்கு அனல் காற்று எச்சரிக்கை!!

வியாழன் 25, ஏப்ரல் 2024 12:42:38 PM (IST)

தமிழக கடலோர மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் வெப்ப நிலை அதிகரிக்கும் என்றும், 4 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் தான் வழக்கமாக வெப்ப நிலை அதிகரிக்கும். ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே சுட்டெரிக்கும் வெயில் தாக்கி வருகிறது. கால நிலை மாற்றத்தால் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த மாதத்தில் படிப்படியாக அதிகரித்த வெப்ப நிலை ஒரு சில மாவட்டங்களில் 109 டிகிரி செல்சியஸ் வரை எகிறியது. 

வட தமிழக உள் மாவட்டங்களில்தான் வெயில் வறுத்தெடுத்து வருகிறது. மக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கி உள்ளனர். வீடுகளிலும் புழுக்கம் இருந்து வருவதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தமிழகத்தில் 14 மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் தாக்கி வருவதால் வெளியே மக்கள் செல்லவே பயப்படுகிறார்கள்.

குறிப்பாக வயதானவர்கள், நோய் பாதிப்பு உள்ளவர்கள் வெயிலால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதால் பகலில் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல மாவட்டங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் பகல் வேளையில் மக்களின் நடமாட்டம் குறைந்து உள்ளது.

ஈரோடு, சேலம், கரூர், வேலூர், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வெயிலின் உக்கிரம் கடுமையாக இருந்து வருகிறது. தமிழக கடலோர மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் வெப்ப நிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் தாக்கக் கூடும் என்று எச்சரித்துள்ளது. இதற்காக மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் வெப்ப அலை கடந்த சில நாட்களாக தாக்கி வருகிறது. இன்றும் 110 டிகிரி வரை வெப்பம் தாக்கியது.

சுட்டெரிக்கும் கோடை வெயில் பெரும்பாலான மாவட்டங்களில் நீடித்து வருவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். வெப்ப அலை தாக்கம் மேலும் 4 நாட்களுக்கு நீடிக்கும் என்றும் அனல் காற்று வீசும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்து வரும் ஒவ்வொரு நாட்களும் வெப்பம் அதிகமாக இருக்கும். கடலோர மாவட்டங்கள் தவிர ஏனைய பிற மாவட்டங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இன்று முதல் 27-ந்தேதி வரை தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் அடுத்த 2 வாரங்களுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும். வானிலையை பொறுத்தவரை 5 நாட்களுக்கு மட்டும் முன் எச்சரிக்கை அறிவிப்பாக வெளியிடப்படும். அந்த வகையில் வருகிற நாட்கள் வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும். இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும், அதாவது 110 டிகிரி வரை வெயிலின் உக்கிரம் இருக்கும்.

காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30 முதல் 50 சதவீதம் ஆகவும், மற்ற நேரங்களில் 40 முதல் 75 சதவீதம் ஆகவும் மற்றும் கடலோரப் பகுதிகளில் 50 முதல் 85 சதவீதம் ஆகவும் இருக்கக் கூடும்.அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் இருக்கும் போது ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம்.

இயல்பை விட 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் தாக்கினால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படும். அந்த வகையில் வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை காணப்படும். கன்னியாகுமரி, வால்பாறை பகுதியில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory