» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அம்பையில் ஏப்.,15ல் பிரதமர் மோடி பிரசாரம்: பாஜக கூட்டணிக்கு ஆதரவு திரட்டுகிறார்!

வெள்ளி 12, ஏப்ரல் 2024 11:29:33 AM (IST)

வருகிற 15ஆம் தேதி நெல்லை வரும் பிரதமர் மோடி பிரதமர் மோடி பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சியினரை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். 

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள தேசிய கட்சிகளான பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் தமிழகத்தின் பிரதான கட்சிகளான அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வின் முக்கிய தலைவர்கள் மாவட்டந்தோறும் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் தனியாக கூட்டணி அமைத்து போட்டியிடும் பா.ஜனதா வெற்றி முனைப்பில் தீவிர வாக்கு வேட்டை நடத்தி வருகிறது. வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடியும் தமிழகத்திற்கு வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வை ஆதரித்து பேசி வாக்கு சேகரிப்பதற்காக நெல்லை வருகிறார். 

அவர் வருகிற 15-ந்தேதி ஹெலிகாப்டரில் நெல்லைக்கு வர உள்ளார். இதனையொட்டி நிர்வாகிகளும், தொண்டர்களும் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். அவர் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அகஸ்தியர்பட்டியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மக்களிடையே பேச உள்ளார். அவர் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே நெல்லையில் கடந்த மாதம் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

இந்நிலையில் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வை ஆதரித்து பேசி வாக்கு சேகரிப்பதற்காக அவர் நெல்லைக்கு மீண்டும் வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த பொதுக்கூட்டத்தில் குமரி தொகுதி பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மற்றும் தென்காசி தொகுதி கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்தும் பிரதமர் மோடி பேச உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனையொட்டி இன்று வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதியில் மேடை அமைப்பதற்காக பூமி பூஜை நடத்தப்பட்டது.

பிரதமர் மோடி வருகையையொட்டி நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் உத்தரவின்பேரில் அம்பை டிஎஸ்பி சதீஷ்குமார் மேற்பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அகஸ்தியர்பட்டி தனியார் பள்ளியில் ஹெலிபேடு தளத்திலும் சி.சி.டி.வி. கேமராக்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory