» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெண் வருவாய் ஆய்வாளர் வீட்டில் 58 பவுன் நகை கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை!!

வியாழன் 4, ஏப்ரல் 2024 8:24:08 AM (IST)

பனவடலிசத்திரம் அருகே பெண் வருவாய் ஆய்வாளர் வீட்டில் 58 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா பனவடலிசத்திரம் அருகே தெற்கு பனவடலி கிராமத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவர் கேரள மாநிலத்தில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி முத்துகுட்டி. இவர்களுக்கு இசக்கிதாய், கஸ்தூரி, திவ்யா ஆகிய 3 மகள்களும், மணிகண்டன் என்ற மகனும் உள்ளனர். கஸ்தூரி, நெல்லை மாவட்டம் மானூர் பிர்காவில் வருவாய் ஆய்வாளராக வேலை செய்து வருகிறார். 

இவருக்கும், பனவடலிசத்திரம் அருகே உள்ள ஆராய்ச்சிபட்டியைச் சேர்ந்த தங்கத்துரைக்கும் திருமணம் நடந்தது. தங்கத்துரை, மேல இலந்தைகுளத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இசக்கிமுத்து குடும்பத்தினருடன் கேரளாவில் வசித்து வருகிறார். எனவே தெற்கு பனவடலியில் உள்ள அவரது வீட்டை மகள் கஸ்தூரி பராமரித்து வந்தார். அவர் தனது நகைகள் மற்றும் குடும்பத்தினரின் நகைகளையும் பெற்றோர் வீட்டின் பீரோவில் வைத்து இருந்தார். கஸ்தூரி தனது குடும்பத்தினருடன் வாரத்தில் சில நாட்கள் பெற்றோரின் வீட்டில் தங்கியிருப்பது வழக்கம்.

நேற்று முன்தினம் கஸ்தூரி ஆராய்ச்சிபட்டியில் உள்ள கணவரின் வீட்டுக்கு சென்றார். எனவே, தெற்கு பனவடலியில் உள்ள அவரது வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் அங்கு கொள்ளையடிக்க திட்டமிட்டனர். அதன்படி, நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், பீரோவை உடைத்து திறந்து அதில் இருந்த 58 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

நேற்று காலையில் கஸ்தூரி தனது பெற்றோரின் வீட்டுக்கு சென்றபோது, கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததையும், நகைகள் கொள்ளை போனதையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பனவடலிசத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

கொள்ளை நடந்த வீட்டில் பதிவான தடயங்களை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர். போலீசாரின் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் மோப்பம் பிடித்து விட்டு, சங்கரன்கோவில்-நெல்லை மெயின் ரோட்டில் சிறிது தூரம் ஓடிச் சென்று படுத்து கொண்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீடுபுகுந்து கொள்ளையடித்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory