» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கூரியர் நிறுவன காரில் 5¼ கிலோ தங்க நகைகள் : தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கியது!

சனி 30, மார்ச் 2024 9:01:14 AM (IST)



கூரியர் நிறுவன காரில் அட்டை பெட்டி பார்சல்களில் கொண்டு வந்த 5¼ கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் தேர்தல் நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கப்பணமாகவோ, பொருட்களையோ எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் தேர்தல் பறக்கும் படையினர் விருதுநகர்-மதுரை நான்கு வழிச்சாலையில் சத்திர ரெட்டியபட்டி சோதனை சாவடி அருகே மதுரையில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் 8 அட்டை பெட்டி பார்சல்கள் இருந்தன.

பார்சல்கள் குறித்து கார் டிரைவரான மதுரை அய்யர்பங்களாவைச் சேர்ந்த நரேஷ் பாலாஜி (வயது 28) என்பவரிடம் அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது அவர், நான் தனியார் கூரியர் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். எங்கள் நிறுவனத்திற்கு கோவையில் இருந்து சில பார்சல்கள் வந்துள்ளன. அந்த பார்சல்களை நாகர்கோவிலில் உரிய நபரிடம் ஒப்படைப்பதற்காக தற்போது சென்று கொண்டு இருக்கிறேன் என்றார்.

உடனே பார்சல்களை பிரித்து காண்பிக்கும்படி கூறியபோது, சில பார்சல்களில் கிலோ கணக்கில் தங்க நகைகள் இருப்பதாக கூறியதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். மொத்தம் அந்த பார்சல்களில் 5 கிலோ 300 கிராம் நகைகள் உள்ளன எனவும், பார்சல்கள் கொண்டு செல்வதற்கான ரசீது மட்டுமே தன்னிடம் உள்ளன எனவும் கூறி இருக்கிறார்.

உள்ளே இருக்கும் பொருட்களின் விவரம் சம்பந்தமாக வேறு எந்த ஆவணமும் என்னிடம் இல்லை எனக்கூறியதால், தங்கநகைகளுடன் கூடிய அந்த பார்சல்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஆனால் அவற்றை பிரித்து பார்க்கவில்லை. இந்த பார்சல்களை யார் அனுப்பினார்களோ, அவர்களுக்கு தகவல் தெரிவித்து வரழைக்கும்படி கார் டிரைவரிடம் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

அவர்கள் வந்த உடன், பார்சல்கள் பிரித்து பார்க்கப்படும். பொதுவாக பார்சல்களில் பொருட்கள், ஆடைகள் உள்ளிட்டவை அனுப்பி வைப்பார்கள். ஆனால், தங்கநகைகள் போன்ற விலை உயர்ந்த பொருட்களை அனுப்புவதற்கு என விதிமுறைகள் உள்ளன. தேர்தல் அறிவிக்கப்பட்டு, நடத்தை விதிகளும், கடும் கட்டுப்பாடுகளும் உள்ள நிலையில் இவ்வளவு தங்கநகைகள் பார்சல்களாக நாகர்கோவிலுக்கு அனுப்பியதில் உள்ள மர்மம் என்ன? என்பதை அறிய தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், அந்த பார்சல்களில் இருக்கும் நகைகளின் மதிப்பு சுமார் ரூ.3 கோடி இருக்கலாம் என எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் கூறினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory