» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

திருச்செந்தூரில் ஒருங்கிணைந்த காவல் கட்டுப்பாட்டு மையம் : எஸ்பி சிவபிரசாத் திறந்து வைத்தார்

வியாழன் 20, ஆகஸ்ட் 2026 8:54:12 AM (IST)

TiruchendurSpoff.jpg

திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நவீன ஒருங்கிணைந்த காவல் கட்டுப்பாட்டு மையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்,  தமிழ்நாட்டின் மிகவும் பிரசித்தி பெற்ற மற்றும் அதிகளவில் பக்தர்கள் வருகை தரும் முக்கிய திருத்தலங்களில் ஒன்றாகும். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் ஆண்டு முழுவதும் ஏராளமான பக்தர்கள் இத்திருக்கோவிலுக்கு வருகை தருகின்றனர். குறிப்பாக வாரந்தோறும் "செவ்வாய், வியாழன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்”, மாதாந்திர திருவிழாக்கள், சிறப்பு பூஜைகள், விசேஷ நாட்கள், பொது விடுமுறை நாட்கள் மற்றும் பள்ளி விடுமுறை காலங்களில் அதிகளவில் பக்தர்கள் கூடுகின்றனர்.

மேலும், "தைப்பூசம், மாசி திருவிழா, தமிழ் வருடப்பிறப்பு மற்றும் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், வருஷாபிஷேகம், ஆடிக்கொடை தீர்த்தம், ஆவணி திருவிழா, கந்த சஷ்டி மற்றும் திருக்கார்த்திகை” போன்ற முக்கிய திருவிழாக்களின் போது திருச்செந்தூரில் அதிகளவிலான பக்தர்கள் வருகை தருகின்றனர். சமீப காலங்களில் "பௌர்ணமி” நாட்களிலும் பக்தர்களின் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது.

அதிகப்படியான பக்தர்கள் வருகை தரும் காலங்களில் திருச்செந்தூர் நகரில் முக்கியமாக "அதிகப்படியான வாகன வருகை, போதுமான வாகன நிறுத்துமிடங்கள் இல்லாமை மற்றும் போக்குவரத்து நெரிசல்” ஆகிய மூன்று முக்கிய சவால்களை காவல்துறை எதிர்கொண்டு வருகிறது. முக்கிய திருவிழா காலங்களில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் "10,000 பக்தர்கள்” வரை வருகை தரும் நிலை உள்ளது. அதேபோல், ஒவ்வொரு மணி நேரத்திலும் நூற்றுக்கணக்கான தனியார் வாகனங்கள் நகருக்குள் வந்து செல்கின்றன. சமீபத்திய பொங்கல் விடுமுறை காலத்தில் ரயில், பேருந்து, தனியார் வாகனங்கள் மற்றும் நடைபயணம் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் ஒரே நாளில் சுமார் "1.5 லட்சம் பக்தர்கள்” திருச்செந்தூர் நகருக்கு வந்து சென்றுள்ளனர்.

ரயில்வே நிலையம், பேருந்து நிலையம், மெயின் ஆர்ச், நான்கு ரத வீதிகள், சன்னதி தெரு, கடற்கரை பகுதி, முக்கிய சந்திப்புகள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் கோவிலை அணுகும் முக்கிய சாலைகள் ஆகிய பகுதிகளில் பக்தர்கள் மற்றும் வாகனங்களின் இயக்கத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் உள்ளது. ரயில்வே நிலையம் மற்றும் பேருந்து நிலையத்திலிருந்து கோவிலை நோக்கி செல்லும் பக்தர்களின் நடைபயண இயக்கம், முக்கிய சாலைகளை கடந்து செல்லும் பக்தர்கள், திருவிழா ஊர்வலங்கள் மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி, சாத்தான்குளம் மற்றும் கன்னியாகுமரி சாலைகளில் ஏற்படும் வாகனப் போக்குவரத்து ஆகியவை போக்குவரத்து மேலாண்மை மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க சவால்களை ஏற்படுத்துகின்றன.

மேலும், திருச்செந்தூர் நகரம், சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு முக்கிய ஆன்மிகத் தலங்களுக்கு செல்லும் பக்தர்களின் முக்கிய போக்குவரத்து வழித்தடமாகவும் அமைந்துள்ளது. குலசேகரப்பட்டினம், மணப்பாடு, புன்னக்காயல், ஆலந்தலை, தேரிக்குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆன்மிகத் தலங்களுக்கு செல்லும் பக்தர்கள் திருச்செந்தூர் நகரம் வழியாகச் செல்கின்றனர். மேலும், இப்பகுதியில் நடைபெற்று வரும் தொழில் மற்றும் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கான கனரக வாகனங்களின் இயக்கமும் திருச்செந்தூர் நகரின் போக்குவரத்து மேலாண்மை தேவையை அதிகரித்துள்ளது.

இவ்வாறான அதிக மற்றும் தொடர்ச்சியான பக்தர்கள், வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் இயக்கத்தை கருத்தில் கொண்டு, "பொதுமக்கள் பாதுகாப்பு, கூட்ட நெரிசல் மேலாண்மை, போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல், குற்றத் தடுப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகளை” மேலும் சிறப்பாக மேற்கொள்ளும் நோக்கில், திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்தில் பிரத்யேகமாக "ஒருங்கிணைந்த காவல் கட்டுப்பாட்டு அறை” அமைக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில், திருச்செந்தூர் சார் ஆட்சியர் கௌதம், டிஎஸ்பி மகேஷ்குமார், கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார், திருச்செந்தூர் பல்வேறு வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory