» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ராட்சத அலையில் சிக்கி பயிற்சி டாக்டர்கள் 5பேர் பலி : நாகர்கோவில் அருகே சோகம்!

திங்கள் 6, மே 2024 4:28:43 PM (IST)



நாகர்கோவில் அருகே லெமூர் கடற்பகுதியில்  ராட்சத அலையில் சிக்கி  பயிற்சி டாக்டர்கள் 5பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியில் படித்து முடித்து விட்டு பயிற்சி டாக்டராக உள்ள நாகர்கோவில் பறக்கையை சேர்ந்த சர்வதர்ஷித், திண்டுக்கல்லை சேர்ந்த பிரவீன் ஷாம் மற்றும் வெங்கடேஷ், காயத்ரி, சாருகவி, நேசி ஆகிய 6 பேரும் நேற்று அங்கிருந்து கார் மூலமாக நாகர்கோவில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்தனர். நேற்று இரவு நாகர்கோவிலுக்கு வந்து சேர்ந்த இவர்கள் இங்கு தங்கினார்கள். இன்று காலை திற்பரப்பு அருவிக்கு செல்வதற்காக 6 பேரும் காரில் புறப்பட்டு சென்றனர். 

திற்பரப்பு அருவியில் தண்ணீர் குறைவான அளவில் கொட்டியது. இதையடுத்து 6 பேரும் அங்கிருந்து புறப்பட்டு ராஜாக்கமங்கலம் அருகே உள்ள லெமூர் கடற்கரை பகுதிக்கு வந்தனர். கடற்கரை பகுதியில் கால் நனைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது வந்த ராட்சத அலை 6 பேரையும் இழுத்துச்சென்றது. இதை பார்த்த மீனவர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர். இதில் பறக்கையை சேர்ந்த சர்வ தர்ஷித், நேசி இருவரையும் மீட்டனர். மற்ற 4 பேரையும் மீட்க முடியவில்லை. அவர்கள் உடல் பிணமாக கரை ஒதுங்கியது. 

இதற்கிடையில் மீட்கப்பட்ட 2 பேரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டதில் சர்வதர்ஷித் பரிதாபமாக இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 5 ஆனது. பலியான வெங்கடேஷ், பிரவீன் சாம், காயத்ரி, சாருகவி, சர்வ தர்ஷித் ஆகியோரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சுற்றுலா வந்த இடத்தில் 5 பயிற்சி டாக்டர்கள் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

குமரி மாவட்டத்தில் 2 நாட்களாக கடல் சீற்றமாக இருக்கும் என்று கலெக்டர் ஸ்ரீதர் எச்சரிக்கை விடுத்து இருந்த நிலையில் குளச்சல் கோடிமுனை பகுதியில் நேற்று கடல் அலையில் சிக்கி சென்னையை சேர்ந்த 2 பேர் பலியானார்கள். தேங்காய்பட்டினம் பகுதியில் தந்தையுடன் வந்திருந்த சிறுமி ஆதிரா (7) என்பவரை கடல் அலை இழுத்துச்சென்றது. அவரது உடலை இன்று காலை மீட்டனர். நேற்றும், இன்றும் கடல் அலையில் சிக்கி குமரி மாவட்டத்தில் 8 பேர் பலியாகி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory