» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரியிலிருந்து ஜபால்பூர் சிறப்பு ரயிலை இயக்க கோரிக்கை

ஞாயிறு 21, ஏப்ரல் 2024 8:30:30 PM (IST)

ஜபால்பூர் - கன்னியாகுமரி சிறப்பு ரயிலை மதுரையுடன் நிறுத்தாமல் கன்னியாகுமரியிலிருந்து இயக்க வேண்டும் என்று பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

ஜெபல்பூர் தலைமையிடமாக கொண்ட வடக்கு மத்திய ரயில்வே மண்டலம் தங்கள் பகுதியான ஜெபால்பூரிலிருந்து சென்னை மதுரை வழியாக கன்னியாகுமரிக்கு வாராந்திர சிறப்பு ரயிலை அறிவித்தது. இந்த  ரயில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஜெய்ப்பூரிலிருந்து 16:25 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூருக்கு வெள்ளிக்கிழமை 16:15 மணிக்கு வந்து கன்னியாகுமரிக்கு சனிக்கிழமை அதிகாலை 4:45 மணிக்கு வந்து சேருமாறு கால அட்டவணை அமைக்கப்பட்டது. 

இதைப்போல் மறுமார்க்கமாக இந்த ரயில் சனிக்கிழமை மாலை 19:05 மணிக்கு கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 8:50 மணிக்கு சென்னை  சென்றுவிட்டு திங்கள் காலை 8.40 மணிக்கு ஜெபல்பூர் சென்றடையும். சென்னை – விழுப்புரம் - திருச்சி- மதுரை – திருநெல்வேலி  - கன்னியாகுமரி மார்க்கம் முழுவதும் இருவழிபாதை பணிகள் முடிந்த நிலையில் முதல் முறையாக வேறு ஒரு மண்டலத்திலிருந்து இந்த மார்க்கத்தில் முதல் ரயில் அறிவிக்கப்பட்டு இயக்கப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்த சிறப்பு ரயில் நல்ல வருவாய் பெற்றால் நிரந்தர ரயிலாகவும் மாற்றம் செய்து இயக்க வடக்கு மத்திய ரயில்வே மண்டலம் தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுவாக  தெற்கு ரயில்வே புதிய ரயில்களும் இயங்காது வேறு மண்டலங்கள் கோட்டங்கள்   யாராவது புதிய ரயில் இயக்க முன்வந்தால் முடிந்த அளவுக்கு  அனுமதி கொடுக்காமல் இழுத்தடிப்பார்கள் அல்லது வேண்டும் என்று முட்டுக்கட்டை போட்டு போதிய ஒத்துழைப்பு கொடுக்காமல் அவர்களை ரயில்கள் இயக்க அனுமதி அளிக்காது.

கோடைகால விடுமுறையாக இருந்தால் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் 15 சேவைகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த ரயிலுக்கான முன்பதிவு கடந்தவாரம் ஜெபால்பூரிலிருந்து கன்னியாகுமரி மார்க்கம் தொடங்கப்பட்டது.  ஆனால் இந்த முன்பதிவில் நாகர்கோவில், மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர்,மதுரை, திண்டுக்கல், விருத்தாசலம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய நிறுத்தங்களில் கொடுக்கப்படவில்லை.  இதைப்போல் மறுமார்க்கமாக கன்னியாகுமரி - ஜெபல்பூர் மார்க்கம் முன்பதிவும் துவங்கப்படவில்லை. இதனால் பயணிகள் மிகவும்  சிரமத்திற்கு உள்ளானார்கள். 

இது மட்டுமில்லாமல் இந்த ரயில் வார விடுமுறையையொட்டி சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படுவதால் இந்த ரயில் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இந்த சிறப்பு ரயில் அறிவித்தும் தேர்தல் நேரத்தில் ஊருக்கு வந்து வாக்களிப்பதற்கு வேண்டி ஒரு சில பயணிகள் முன்பதிவு செய்தும் விட்டாகிவிட்டது. ஆனால் புதிய நிறுத்தங்கள் கொடுக்கப்படவில்லை மற்றும் மறுமார்க்கமாக முன்பதிவும் துவங்கப்படவில்லை. 

இந்த நிலையில் திடீரென இந்த ஜெபல்பூர் -கன்னியாகுமரி சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டு ஜெபல்பூர் - மதுரை வரை இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பை பார்த்து தென்மாவட்ட குறிப்பாக கன்னியாகுமரி மற்றும்  திருநெல்வேலி மாவட்ட பயணிகள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானார்கள். ஏன் இந்த சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டது என்று விசாரித்ததில் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நிலவும் இடநெருக்கடி மற்றும் பராமரிப்பு பணிகள் செய்ய முடியாது என்று இந்த ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெரியவருகிறது. 

ஆனால் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் கேரளா வழியாக இயக்கப்படும் சிறப்பு ரயிலாக இருந்தால் இது போன்ற பிரச்சினைகள் ஏதும் இன்றி தொடர்ந்து இயக்கப்படும். கடந்த  சில வாரங்களாக நாகர்கோவிலிலிருந்து திருவனந்தபுரம், எர்ணாகுளம், பாலக்காடு, சேலம், காட்பாடி வழியாக சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டு நாகர்கோவிலில் பராமரிக்கப்பட்டது. 

இது மட்டுமல்லாமல் நாகர்கோவிலிருந்து கேரளா மார்க்கமாக பயணம் செய்து மீண்டும் தமிழ்நாட்டுக்கு வந்து அஸ்ஸாம் செல்லும் திப்ருகர் சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்றால் நாகர்கோவிலில் பராமரிப்பு இடம் உள்ளது.  நாகர்கோவில் இடம் இல்லை என்றால் கடந்த மாதம் தான் கொச்சுவேலி – நீலாம்பூர் ரயில் பராமரிப்புக்காக நாகர்கோவில் கொண்டு வரப்பட்டு வாரத்துக்கு நான்கு நாட்கள் பராமரிக்கப்படுகிறது. 

இது போன்று கேரளா மார்க்கம் செல்லும் ரயில்கள் பராமரிப்பதற்கு நாகர்கோவில் ரயில் நிலையத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் கன்னியாகுமரி மாவட்டம் சார்ந்து உள்ள தமிழ்நாடு மாநிலம் மார்க்கம் ரயில்கள் இயக்க வேண்டும் என்றால் பராமரிப்பு பிரச்சனை, நடைமேடை பிரச்சனை என அனைத்து விதமான பிரச்சனைகள் வந்துவிடும். இது தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு எதிராக எப்போதும் செயல்படுகிறார்கள். 

இதுகுறித்து பலமுறை கடிதங்கள் வாயிலாக தெரியப்படுத்தியும் தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள் கண்டு கொள்வது கிடையாது. கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பிரதிநிதிகள்   இது போன்ற அதிகாரிகளுக்கு ஆமாம் சாமி போடாமல் இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரளா வழியாக செல்லும் ரயில்களை திருவனந்தபுரம் அல்லது கொச்சுவேலி உடன் நிறுத்தி விட்டு மதுரை – ஜெபல்பூர் ரயிலை கன்னியாகுமரியிலிருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது மட்டுமல்லாமல் பராமரிப்புக்காக கொண்டுவரப்படும் கொச்சுவேலி -நிலாம்பூர் ரயிலை கொச்சுவேலி யில் வைத்து பராமரித்து கொள்ள வேண்டும் அதற்கு பதிலாக மங்களுர் - திருவனந்தபுரம் 16347-16348 ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டித்து இயக்க வேண்டும்என்று  பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory