» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஆளுநர் வரலாற்றை திரித்து பேசுகிறார்: சாமிதோப்பு தலைமை பதி கண்டனம்!

செவ்வாய் 5, மார்ச் 2024 12:39:29 PM (IST)

அய்யா வைகுண்டர் குறித்து ஆளுநர் வரலாற்றை திரித்து பேசியுள்ளதாக சாமிதோப்பு தலைமை பதி கண்டனம் தெரிவித்துள்ளார். 

அய்யா வைகுண்ட சாமியின் 192-வது அவதார தின விழா மற்றும் மகாவிஷ்ணுவின் அவதாரம் வைகுண்டசாமி அருளிய 'சனாதன வரலாறு' என்ற புத்தக வெளியீடு ஆகிய நிகழ்ச்சிகள், சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நேற்று நடைபெற்றது. அகில உலக அய்யா பதிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராமலிங்கம் எழுதிய அந்த புத்தகத்தை வெளியிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். அவர் கூறுகையில்,

அதர்மத்தை அகற்றுவதற்காக கடவுள் நாராயணன் மனித அவதாரம் எடுத்துள்ளார். அந்த வரிசையில்தான் 192 ஆண்டுகளுக்கு முன்பு அய்யா வைகுண்டசாமியாக நாராயணன் அவதாரம் எடுத்து வந்தார். அப்போதிருந்த சமுதாய ஏற்றத்தாழ்வுகளை அகற்றி சமத்துவத்தை கொண்டுவர முயற்சித்தார்.

சனாதன தர்மத்தை கற்றுக்கொடுத்தார். ஐரோப்பாவை கிறிஸ்தவம் அடையும் முன்பே இந்தியாவுக்குள் நுழைந்துவிட்டது. 1600-ம் ஆண்டுகளில் கிழக்கு இந்திய கம்பெனி இங்கு வந்தது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் ஆட்சியை ஏற்படுத்தியதுபோல இந்தியாவில் ஆட்சி அமைக்க முடியாது என்பதை அறிந்தனர். அதனால் சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டனர் என்று கூறி இருந்தார்.

இந்நிலையில் அய்யா வைகுண்டர் குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சுக்கு, சாமிதோப்பு தலைமை பதி அடிகளார் பாலபிரஜாபதி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: அய்யா வைகுண்டர் குறித்து புத்தகம் வெளியிடுவதுபோல் வரலாற்றை திரித்து ஆளுநர் பேசி உள்ளார். ஆரிய கோட்பாட்டிற்கு அணி சேர்ப்பது போல் ஆளுநர் பேசி உள்ளது வருந்தத்தக்கது.

அய்யா வைகுண்டர் குறித்து ஆளுநர் புரிந்து பேச வேண்டும். உருவ வழிபாடு, மொழி, பேதம், ஆண், பெண் பேதம், சாதிகள் இல்லை என பல கோட்பாடுகளை கூறியவர் அய்யா வைகுண்டர். அய்யா வைகுண்டர் சனாதனத்தை ஆதரித்தவர் என்று கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாது. அய்யா வைகுண்டரை தனதாக்கி கொண்டு பட்டா போடுவதற்காக அவர்கள் பேசுவதை கண்டிக்கிறோம். ஆளுநர் வரலாற்றை தெரியாமல் பேசவில்லை, திரித்து பேசுகிறார் என்று கூறி உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory