» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பாதிரியார் இல்லத்தில் கொலை: அரசியல் தலைவர்கள் மெளனம் ஏன்? சீமான் கேள்வி

சனி 27, ஜனவரி 2024 8:34:57 AM (IST)

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியாக இல்லை. பாதிரியார் இல்லத்தில் நடந்த கொலைக்கு தலைவர்கள் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? என நாகர்கோவிலில் சீமான் குற்றம்சாட்டினார்.

குமரி மாவட்டம் மைலோடு கிறிஸ்தவ ஆலய வளாகத்தில் உள்ள பாதிரியார் இல்லத்தில் அரசு போக்குவரத்துக்கழக ஊழியரும், நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றிய தலைவருமான சேவியர்குமார் என்பவர் கடந்த 20-ந் தேதி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும், ஆளும் தி.மு.க. அரசை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சேவியர்குமார் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை வழக்கில் தலைமறைவானவர்களை கைது செய்வதில் அரசு மெத்தனம் காட்டி வருகிறது. மாதா சிலையை எடுத்து சேவியர்குமாரை அடித்துக் கொன்றுள்ளனர். 

இந்த செயலில் ஈடுபட்டவர்களை எப்படி அருட்குருமார்களாக ஏற்றுக் கொள்வது?. உங்களை இறைவனின் தூதுவர் என்று நினைத்து வழிபட்டதெல்லாம் எவ்வளவு பெரிய ஏமாற்று. தமிழக அரசுக்கு எதிராக ஒரு முகநூல் பதிவு போட்டால் எங்களை விரட்டி, விரட்டி அரசு கைது செய்கிறது. பேசுவதற்கு எல்லாம் குண்டர் சட்டம் பாய்கிறது. அப்படி என்றால் கொலைக்கு என்ன தண்டனை?.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை. ஒழுங்காக இருந்தால் இப்படி கொலைச் சம்பவம் நடக்குமா?. அதிகாரத்தில் இருக்கிறவன் தனக்கு உதவுவான் என்ற அச்சமின்மை, நாங்கள் எளிய மக்கள், என்ன செய்து விடுவார்கள் என்ற திமிரு, அதுதான் இந்த கொலையில் தெரிகிறது.

கொலையில் சம்பந்தப்பட்டவர் தி.மு.க. ஒன்றிய செயலாளர். கூடுதலாக அரசு வக்கீலாக இருக்கிறார். அவரை கைது செய்தால் அரசுக்கு கெட்டபெயர் வரும். எத்தனை பேரை வெட்டிக் கொன்றாலும் அவரை காப்பாற்ற சட்டம் இருக்கிறது. இந்தநிலை ஒரு நாள் கைமாறும். இந்த கொலை சம்பவத்துக்கு பெரிய தலைவர்கள் வேறு யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை. எல்லோரும் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை கும்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

குடும்ப கல்லறைத் தோட்டத்தில் சேவியர்குமார் உடலை அடக்கம் செய்யவிடவில்லை. மறுபடியும் நான் கோர்ட்டுக்கு சென்று, சேவியர் குமாரின் உடலை எடுத்து வந்து எங்கள் இடத்தில் அடக்கம் செய்வோம். தமிழகத்தில் 3-வது பெரிய அரசியல் கட்சியை வைத்திருக்கிற எனது கட்சியைச் சேர்ந்தவரையே கொன்று விட்டு முச்சந்தியில் நிறுத்தியுள்ளது இந்த அரசு. எங்களுக்கு சட்ட அணி இருக்கிறது. அதை வைத்து நாங்கள் தொடர்ந்து போராடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

PoopathyJan 27, 2024 - 09:48:17 AM | Posted IP 172.7*****

சிறுபான்மை நலனுக்கா வாக்கு பெற அமைதி காக்கிறது விடியா ஆட்சி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory