» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மலைவாழ் கிராமங்களில் சோலார் மின் இணைப்பு திட்டம்: ஆட்சியர் துவக்கி வைத்தார்!

வியாழன் 14, டிசம்பர் 2023 4:18:52 PM (IST)



பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட மாறாமலை உள்ளிட்ட 6 காணி மலைவாழ் கிராமங்களை சேர்ந்த 79 வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்கும் திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், துவக்கி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் வட்டம் பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட 6 காணி மலைவாழ் குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சியானது மணலோடை மலைவாழ் கிராமத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பி.என். ஸ்ரீதர், தலைமையில், மாவட்ட வன அலுவலர் இளையராஜா, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் எச்.ஆர்.கௌசிக், ஆகியோர் முன்னிலையில் இன்று (14.12.2023) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் காணி மலைவாழ் குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்து தெரிவிக்கையில்: தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சித்திட்ட பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. 

குறிப்பாக நமது மாவட்டத்தில் வசிக்கும் காணி பழங்குடியின மலைவாழ் மக்களுக்கு மாவட்ட வன அலுவலர் மற்றும் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் ஆகியோரின் பரிந்துரையின்படி விலையில்லா வீட்டுமனைப்பட்டா அதிக அளவில் வழங்கப்பட்டதோடு, மலைவாழ் மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.

வனஉரிமை சட்டத்தின் கீழ் இலவச வீட்டுமனை பட்டா வழங்குதல், புதிய பள்ளி கட்டிடங்கள், சுகாதாரம், குடிநீர், வாகன வசதி உள்ளிட்ட மலைவாழ் மக்களின் தேவைகளை அறிந்தும், அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துதல் குறித்தும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விவாதிக்கப்பட்டு வருகிறது. 

பழங்குடியின பிரதிநிதிகளின் கோரிக்கை என்னவென்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருவதோடு, வனப்பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு என்னென்ன ஆக்கப்பூர்வமான பணிகள் மேற்கொள்ளலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. மேலும், இப்பணிகளை மேற்கொள்ள மலைவாழ் மக்களாகிய உங்கள் அனைவரின் ஒத்துழைப்பு இன்றியமையாதது ஆகும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலைவாழ் பகுதியில் மின் இணைப்பு வழங்கும் நோக்கத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் திட்டமிடப்பட்டதன் அடிப்படையில் கடந்த முறை ஜீலை மாதத்தில் 2 குடியிருப்பு பகுதிகளான சிலாங்குன்று, கடுவாவெட்டி ஆகிய பகுதிகளில் செல்போன் நிறுவனத்தின் உதவியுடன் 2 வீடுகளில் வசிக்கும் 9 குடும்பங்களுக்கு சோலார் மூலம் மின் இணைப்பு வழங்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இத்திட்டத்தினை அனைத்து மலைவாழ் கிராமங்களுக்கும் கொண்டு செல்லும் நோக்கத்தில் மாவட்ட நிர்வாகம், மற்றும் செல்கோ சோலார் லைட் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் உதவியுடன் படிப்படியாக ஒவ்வொரு கிராமங்களிலும் உள்ள மின்இணைப்பு இல்லாத வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கில் திட்டமிடப்பட்டுள்ளது. 

அதன் அடிப்படையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டு, வனத்துறை மற்றும் மின்சாரத்துறையின் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தொடர்ச்சியான மின்இணைப்பு வழங்க முடியாத பகுதிகளை அடையாளம் கண்டு, அவற்றில் மாறாமலை, முகலியடிமலை, புதுப்பாறை, வேட்டாவிளை, களப்பாறை, புன்னமூட்டுதேரி ஆகிய 6 கிராமங்களை சார்ந்த 78 குடும்பங்களுக்கு இன்று பேச்சிப்பாறை ஜீரோ பாயிண்டிலிருந்து படகு மூலமாக சுமார் 35 நிமிடம் பயணம் மேற்கொண்டு, மாறாமலை கிராமத்தில் இதுநாள் வரை மின்சாரம் இன்றி வசிக்கும் ராதிகா (28) என்பவரின் வீட்டிற்கு நேரடியாக சென்று சோலார் மின்இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி இன்று துவக்கி வைக்கப்பட்டது. 

இத்திட்டத்திற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக ரூ.10 இலட்சமும், செல்கோ சோலார் லைட் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் சார்பில் ரூ.3.53 இலட்சம் என மொத்தம் ரூ.13.53 இலட்சம் மதிப்பில் 78 மலைவாழ் வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த சோலார் மின் இணைப்பு தொடர்ந்து 6 மணி நேரம் செயல்படக்கூடியதாக உள்ளது. இந்ந சோலார் மின் இணைப்பு பொருத்தப்பட்டதினால் மலைவாழ் காணி இன மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்ததோடு, இனிவரும் காலங்களில் குழந்தைகள் சிரமமின்றி கல்வி பயில்வதற்கும், பயமின்றி வெளியே நடமாடுவதற்கும் பேருதவியாக இருக்கும் என்று தங்களது நன்றியினை தெரிவித்தார்கள்.

மேலும் காணி மலைப்பகுதியியை சேர்ந்த 50 வீடுகளுக்கு இதுநாள் வரை மின் இணைப்புகள் வழங்கப்படவில்லை. இதுகுறித்து காணி மலைவாழ் பிரதிநிதிகள் வனத்துறை, மின்சாரத்துறையின் கவனத்திற்கு கொண்டு சென்றும், மலைவாழ் மக்களின் கிராமசபையினை கூட்டியும் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் இந்த 50 வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கும் பட்சத்தில் குமரி மாவட்டம் முழு மின்சார வசதி உள்ள வீடுகளாக மாறும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

சிலாங்குன்று மலைப்பகுதியில் வசித்து வரும் காணி பழங்குடியின மக்கள் தாங்கள் தங்குவதற்கு புதிய வீடு மற்றும் அடிப்படை தேவையான தண்ணீர் வசதி, சாலை வசதி உள்ளிட்டவைகளை நிறைவேற்றி தருமாறு என்னிடம் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், மாவட்ட வனத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் எயிட் இந்தியா (AID INDIA) சார்பில் சிலாங்குன்று மலைப்பகுதியில் வசிக்கும் உஷா ராணி, செல்லம்மா ஆகிய இரண்டு பயனாளிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2.30 இலட்சம் மதிப்பில் புதிய வீடு கட்டுவதற்கான பணிகள் கடந்த 27.07.2023 அன்று துவக்கி வைக்கப்பட்டு, தற்போது பணிகள் நிறைவுற்றுள்ளது. 

விரைவில் இரண்டு வீடுகளின் பணிகள் முடிந்து பயனாளிடம் வழங்கப்படும் தெரிவித்துக் கொள்வதோடு, மலை வாழ் பழங்குடியின மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் விரைந்து நிறைவேற்றப்படுமென தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். 

முன்னதாக மாவட்ட வனத்துறையின் அகஸ்திய மலை உயிர்கூடி காப்பான் திட்டத்தின்கீழ் ரூ.1 இலட்சம் மதிப்பில் மணலோடை அரசு பழங்குடியின உண்டு, உறைவிட உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களின் வசதிக்காக எழுதுபலகை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

நிகழ்ச்சிகளில் தனி மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ரேவதி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கனகராஜ், தனி வட்டாட்சியர் (ஆதி திராவிடர் நலத்துறை) கோலப்பன், திருவட்டார் வட்டாட்சியர் புரந்தரதாஸ் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory