» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நர்ஸ் வீட்டில் கொள்ளையடித்த வாலிபர் கைது : 12½ பவுன் நகைகள் மீட்பு!

புதன் 13, டிசம்பர் 2023 8:23:46 AM (IST)



தென்தாமரைகுளம் அருகே நர்ஸ் வீட்டில் கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 12½ பவுன் நகையை போலீசார் மீட்டனர்.

குமரி மாவட்டம், தென்தாமரைகுளம் அருகே உள்ள கீழமணக்குடி டாடா காலனியை சேர்ந்தவர் மரிய மெம்மிலுஸ். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஜஸ்டின் மேரி (52). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

ஜஸ்டின் மேரி நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சூப்பிரண்டு நர்சாக பணியாற்றி வருகிறார். கடந்த 2-ந்தேதி இரவு ஜஸ்டின் மேரி தனது 2 மகள்கள் மற்றும் மூத்த மகளின் 1½ வயது குழந்தையுடன் வீட்டின் முன்புறம் உள்ள படுக்கை அறை மற்றும் ஹாலில் படுத்து தூங்கினர். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது பின்பக்க கதவை தாழ்பாள் உடைக்கப்பட்டு இருந்தது.

இதைகண்டு அதிர்ச்சி அடைந்த ஜஸ்டின் மேரி பின்புறம் உள்ள படுகை அறைக்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு பீரோவில் வைத்திருந்த 8 பவுன் நகை மற்றும் செல்போன் ஆகியவை மாயமாகி இருந்தது. நள்ளிரவில் மர்மநபர் பின்பக்க கதவின் தாழ்பாளை உடைத்து உள்ளே புகுந்து நகையை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து ஜஸ்டின் மேரி தென்தாமரைகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ்குமார் மேற்பார்வையில் தென்தாமரைகுளம் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மர்ம நபரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலையில் கீழ மணக்குடி பகுதியில் தென்தாமரைகுளம் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான தனிப்படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பதிவெண் இல்லாத ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அவர் நிற்காமல் தப்பிச் செல்ல முயன்றார். உடனே உஷாரான போலீசார் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையத்து அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் கீழ முட்டம் பகுதியைச் சேர்ந்த சகாய ஜோஸ் ஆன்றனி (23), மீனவர் என்பதும், தற்போது அம்மாண்டிவிளை பகுதியில் உள்ள கட்டைகாட்டில் வசித்து வருவதும், கீழ மணக்குடியில் ஜஸ்டின் மேரி என்பவரது வீட்டில் 8 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்றதும் தெரிய வந்தது.

அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், கன்னியாகுமரி மகளிர் காவல் நிலையத்தில் ஒரு போக்சோ வழக்கும், கன்னியாகுமரி, தென்தாமரைகுளம், வெள்ளிச்சந்தை ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்த கொள்ளை சம்பவங்களில் தொடர்பு இருப்பதும் தெரிந்தது. 

இதையடுத்து அவரிடம் இருந்து கீழமணக்குடியில் ஜஸ்டின் மேரி வீட்டில் கொள்ளையடித்த 8 பவுன் நகை உள்பட மொத்தம் 12½ பவுன் நகைகளை போலீசார் மீட்டனர். மேலும், இதையடுத்து போலீசார் சகாய ஜோஸ் ஆன்றணியை கைது செய்து நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சகாய ஜோஸ் ஆன்றனி விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் வாங்கவும், ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்கும் ஆசைப்பட்டுள்ளார். இதற்காக குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு கொள்ளையனாக மாறி கன்னியாகுமரி, மகாதானபுரம், வெள்ளிச்சந்தை உள்ளிட்ட இடங்களில் வீடுகள், கடைகளில் கொள்ளையடித்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory