» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது : அமைச்சர் மனோ தங்கராஜ்

செவ்வாய் 12, டிசம்பர் 2023 4:24:34 PM (IST)



இந்திய அளவில் கல்வியில் சிறந்த மாநிலங்களில் ஒன்றாக நமது தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேசினார். 

கன்னியாகுமரி மாவட்ட பள்ளிக்கல்வி துறையின் சார்பில் 2023-2024 ஆம் ஆண்டிற்கான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம் தலைமையில் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தக்கலை, அமலா கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் இன்று (12.12.2023) நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் கலந்து கொண்டு மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கி பேசுகையில்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்கள். குறிப்பாக விலையில்லா நோட்டு புத்தகம், விலையில்லா வண்ண சீருடை, விலையில்லா பேருந்து அட்டை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள். 

மேலும் பள்ளி மாணவ மாணவிகள் தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வி பயில வேண்டும் என்ற நோக்கில் இல்லம் தேடி கல்வி திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், காலை உணவுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மாணவ மாணவிகள் வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும் என்ற நோக்கில் பணியாற்றி வருகிறார்கள். அந்தவகையில் நகர்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மாணவ மாணவியர்கள் பேருந்துக்காக காத்து நிற்கமால், குறிப்பிட்ட நேரத்துக்கு பள்ளிகளுக்கு சென்று பாடங்களை நல்ல முறையில் படிக்க வேண்டும் என்ற நோக்கில், உடல் ஆரோக்கியத்தை பேணிக்காத்திடவும், விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.

இந்திய அளவில் கல்வியில் சிறந்த மாநிலங்களில் ஒன்றாக நமது தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. கல்வியானது எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு தான் இருக்கிறது. இன்னும் பல்வேறு மாநிலங்களில் பெண்கல்வி என்பது ஒரு சவாலான விசயமாக உள்ளது. பெண்களுக்கான கல்வி, பெண்களுக்கான முன்னேற்றம், பெண்களுக்கான உரிமைகள் ஆகியவற்றிற்காக குரல் கொடுத்து அதை நிறைவேற்றுக்கின்ற மாநிலம் தமிழ்நாடு ஆகும். 

இப்போது கூட கலைஞர் உரிமைத்தொகை என்ற திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இதன்மூலம் அத்தியாவசிய செலவுகளுக்கு உதவும் என்ற வகையில் தான் அறிவிக்கப்பட்டது. விலையில்லா மிதிவண்டிகள் வழங்குதன் மூலம் உடல் ஆரோக்கியமாகவும், பள்ளிக்கு சீக்கிரம் வரவும், சுற்றுசூழல் மாசுபடுத்தலை குறைக்கவும் உதவும். கல்வி தான் மிகப்பெரிய சொத்து. ஆகவே மாணவர்களாகிய நீங்கள் நன்றாக படிக்க வேண்டும். உங்கள் இலக்கினை நோக்கியதான கல்வி அமைய வேண்டும்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 2023-2024 ஆம் ஆண்டிற்கான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கி திட்ட பணிகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி வைத்துள்ளார்கள். அதனை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட பள்ளி கல்வித்துறையின் சார்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது

நமது முதலமைச்சர் அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களை எந்த எந்த வகைகளில் ஊக்கப்படுத்த முடியுமோ, அந்த வகையில் மாணவ மாணவியர்களின் கல்வி தரத்தை உயர்த்த வேண்டும் என்ற உயர் நோக்கில் செயல்பட்டு வருகிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் 2023-2024 ஆம் கல்வியாண்டில் 6 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 140 பள்ளிகளில் பயிலும் 7132 மாணவர்களுக்கும், 7988 மாணவிகளுக்கும் என மொத்தம் 15120 மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளன.

அவற்றில் பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 13 பள்ளிகளில் பயிலும் 975 மாணவர்கள் 1179 மாணவியர்களுக்கும், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 25 பள்ளிகளில் பயிலும் 1379 மாணவர்கள் 2003 மாணவியர்களுக்கும் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 25 பள்ளிகளில் 1100 மாணவர்கள் 1125 மாணவியர்களுக்கும், குளச்சல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 29 பள்ளிகளில் 1186 மாணவர்கள் 1294 மாணவியர்களுக்கும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 26 பள்ளிகளில் 1200 மாணவர்கள் 1361 மாணவியர்களுக்கும், கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 22 பள்ளிகளில் 1292 மாணவர்கள் 1026 மாணவியர்களுக்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளன. 

இன்று மிதிவண்டிகள் பெற்ற மாணவ மாணவியர்கள் இவற்றை நல்ல முறையில் பாரம்மரித்து உடல் ஆரோக்கியத்துடன் கல்வி பயின்று வாழ்வில் ஏற்றம் பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், தெரிவித்தார்கள்.

அதனைத்தொடர்ந்து இந்திய அளவில் நடைபெற்ற இளம் எழுத்தாளர்கள் இடையே நடைபெற்ற போட்டியில் தக்கலை அமலா கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 ம் வகுப்பு பயிலும் மாணவி அர்ஷியா பெனாசிர் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் பெற்றத்தோடு போட்டி நடத்திய அமைப்பு ரூ.1.50 இலட்சம் மதிப்பிலான காசோலையினை வழங்கி கௌரவித்ததை தொடர்ந்து இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், மாணவியின் படைப்பினை பாராட்டி வாழ்த்து தெரிவித்ததோடு உலக அளவில் பல்வேறு சாதனைகள் படைத்து தமிழ்நாட்டிற்கும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, பத்மநாபபுரம் நகராட்சி நகர்மன்ற தலைவர் ஞா.அருள் சோபன், மாவட்டக்கல்வி அலுவலர்(மார்த்தாண்டம்) எஸ்.மாரிமுத்து, ஆசிரியர்கள் முருகன், சுரேஷ் பாபு, தலைமையாசிரியை அருட்சகோதரி லீமா ரோஸ்லி, தாளார் அருட்சகோதரி சௌமியா, கல்குளம் வட்டாசியர் கண்ணன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் பொறி. வீர வர்க்கீஸ், நகர்மன்ற உறுப்பினர் சுகந்தி, அருனாந் ஜார்ஜ் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory