» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

காதலிக்க மறுத்ததால் ஐ.டி. பெண் ஊழியருக்கு கத்திக்குத்து: வாலிபர் வெறிச்செயல்!

வியாழன் 7, டிசம்பர் 2023 8:36:09 PM (IST)

தக்கலையில் காதலிக்க மறுத்ததால் ஐ.டி. நிறுவன பெண் ஊழியரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

குமரி மாவட்டம் தக்கலை அன்புநகர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் ஜெபின் (26). இவர் என்ஜினீயரிங் படித்து விட்டு வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அவர் சொந்த ஊருக்கு திரும்பினார். அதன்பிறகு வெளிநாட்டுக்கு செல்லவில்லை. இதற்கிடையே தக்கலையை சேர்ந்த இளம்பெண்ணை அவர் ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 

அந்த இளம்பெண் நாகர்கோவில் வடசேரியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஒரு கட்டத்தில் இளம்பெண்ணிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் அவர் ஏற்க மறுத்து விட்டார். எனினும் ஜெபின் அவரை விடவில்லை. தொடர்ந்து பின்தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் சமீபத்தில் இளம்பெண் வடசேரி பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த போது காதலிக்க வற்புறுத்தி மிரட்டியதாக தெரிகிறது. பின்னர் இந்த பிரச்சினை போலீஸ் நிலையம் வரை சென்றது. அதன்பிறகும் ஜெபின் திருந்தவில்லை. இளம்பெண்ணின் மனதை தொடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்கு இளம்பெண் இடம் கொடுக்கவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் இளம்பெண் வழக்கம் போல் ஐ.டி. நிறுவனத்தில் வேலை முடிந்ததும் நாகர்கோவிலில் இருந்து பஸ்சில் ஊருக்கு திரும்பினார். பின்னர் அவர் தக்கலை பஸ் நிலையத்தில் இருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை ஜெபின் வழிமறித்து தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தினார். 

ஆனால் அவரிடம் இருந்து இளம்பெண் விலகி சென்றார். உடனே ஆத்திரமடைந்த ஜெபின், கையில் வைத்திருந்த கத்தியால் திடீரென குத்தியுள்ளார். இதனால் அந்த பெண் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என அலறினார். சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர். உடனே ஜெபின் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். 

கத்திக்குத்தில் காயமடைந்த இளம்பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அவர் கொடுத்த புகாரின்பேரில் ஜெபின் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory