» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சபரிமலை கோவில் நடை மண்டல பூஜைக்காக திறப்பு : தினமும் 90 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி!

திங்கள் 17, நவம்பர் 2025 8:50:45 AM (IST)



நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. இன்று முதல் தினமும் 90 ஆயிரம் பக்தர்கள் அய்யப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசன் மிகவும் பிரசித்தி பெற்றது. கார்த்திகை மாதம் 1-ந் தேதி இந்த சீசன் தொடங்கி 60 நாட்கள் நடைபெறும். அந்த சீசனில் கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சபரிமலை அய்யப்பனை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதும். விரதமிருந்து இருமுடி கட்டியபடி பயபக்தியுடன் வருவார்கள். சபரிமலையில் எங்கு பார்த்தாலும் சரணகோஷம் எதிரொலிக்கும்.

அத்தகைய சிறப்புமிக்க நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனுக்காக நேற்று மாலை 5 மணிக்கு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார்.

இதனை தொடர்ந்து 18-ம் படிக்கு கீழ் உள்ள கற்பூர ஆழியில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி சன்னிதானத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட விளக்கு தீபத்தை வைத்து தீ மூட்டினார். பின்னர் 18-ம் படிக்கு கீழ் இரு முடி கட்டுகளுடன் காத்திருந்த சபரிமலை புதிய மேல்சாந்தி பிரசாத், மாளிகப்புரம் மேல் சாந்தி மனு ஆகியோரை 18-ம் படி வழியாக அருண்குமார் நம்பூதிரி சன்னிதானத்திற்கு அழைத்து வந்தார்.

புதிய மேல் சாந்திகள் பிரசாத் நம்பூதிரி, மனு நம்பூதிரி ஆகியோருக்கு மூலம் மந்திரம் சொல்லி கொடுத்து தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடத்தினார். இந்த நடைமுறையை தொடர்ந்து 18-ம் படிக்கு கீழ் பகுதியில் இருமுடி கட்டுகளுடன் காத்திருந்த பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நேற்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

கார்த்திகை 1-ந் தேதியான இன்று (திங்கட்கிழமை) முதல் தினமும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜை, வழிபாடு தொடர்ந்து நடைபெறும். கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் புதிய மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி இந்த பூஜைகளை மேற்கொள்வார். அந்த வகையில் நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், 11 மணி வரை நெய் அபிஷேகம், உச்ச பூஜைக்கு பிறகு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும்.

மீண்டும் மதியம் 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு மாலை 6 மணிக்கு சிறப்பு தீபாராதனையும், இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜைக்கு பிறகு இரவு 11 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும். சிகர நிகழ்ச்சியாக அடுத்த மாதம் 27-ந் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14-ந் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறும்.

சபரிமலை தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு மூலம் 70 ஆயிரம் பேரும், உடனடி தரிசனம் மூலம் 20 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்பட உள்ளனர். அந்த வகையில் தினமும் 90 ஆயிரம் பேர் அய்யப்பனை தரிசிக்க உள்ளனர். இதில் 1 மாத காலத்துக்கான முன்பதிவு இப்போதே முடிவடைந்து விட்டது. இதனால் உடனடி தரிசன முன்பதிவு மூலம் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்கள் 18-ம் படிக்கு மேல், அதாவது சன்னிதானம் பகுதியில் செல்போன் பயன்படுத்தவும், புகைப்படம், வீடியோ எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனையொட்டி நிலக்கல், எருமேலியில் ஒரே நேரத்தில் 14 ஆயிரம் வாகனங்கள் நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் பக்தர்களுக்காக இதுவரை 60 லட்சம் டின் அரவணை பிரசாதம் இருப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. மரக்கூட்டம் முதல் வலியநடை பந்தல் வரை பக்தர்கள் வரிசையாக நிற்கும் இடங்களில் தடுப்பு கம்பிகள் வழியாக குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளது. குடிநீர் தேவைப்படும் பக்தர்கள் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல் சரம் குத்தி முதல் சன்னிதானம் வரை 60 இடங்களில் சுக்குநீர் வினியோகம் 24 மணி நேரமும் நடைபெறும். இதுதவிர நிலக்கல் முதல் சன்னிதானம் வரை 3 ஆயிரம் தற்காலிக கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory