» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன்

திங்கள் 3, நவம்பர் 2025 8:50:21 AM (IST)



பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி, இந்திய அணி சாம்பியன் பட்டத்தை பெற்றது. முதல் முறையாக நடந்த இந்த சாதனையை இந்திய ரசிகர்கள் கொண்டாடினர்.

13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம், மும்பை புறநகரான நவிமும்பையில் உள்ள டி.எஸ். பட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இதில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. மழை காரணமாக 2 மணி நேரம் போட்டி தாமதம் ஆனது. ஆனாலும் ஓவர் ஏதும் குறைக்கப்படவில்லை. இரு அணியிலும் அரை இறுதியில் ஆடிய வீராங்கனைகள் மாற்றமின்றி அப்படியே இடம் பெற்றனர்.

‘டாஸ்’ வென்ற தென்ஆப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட் முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தார். இதையடுத்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் துணை கேப்டன் ஸ்மிர்தி மந்தனாவும், ஷபாலி வர்மாவும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர். முதல் ஓவரை மெய்டனாக்கிய இவர்கள் பேட்டிங்குக்கு உகந்த இந்த ஆடுகளத்தில் 2-வது ஓவரில் இருந்து தங்களது அதிரடி ஜாலத்தை ஆரம்பித்தனர். ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கு ஓடவிட்டு குழுமியிருந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களை குதூகலப்படுத்தினர். 6.3 ஓவர்களில் இந்தியா 50 ரன்களை தொட்டது. பவர்-பிளேவுக்கு பிறகு ரன்ரேட் சற்று தளர்ந்தாலும் 17.2 ஓவர்களில் இந்தியா 100 ரன்களை கடந்தது.

அணியின் ஸ்கோர் 104-ஐ எட்டிய போது மந்தனா (45 ரன், 58 பந்து, 8 பவுண்டரி) குளோயி டிரையோனின் சுழற்பந்தில் விக்கெட் கீப்பர் ஜாப்தாவிடம் சிக்கினார். 2-வது விக்கெட்டுக்கு ஜெமிமா ரோட்ரிக்ஸ் இறங்கினார். மறுமுனையில் 3 ஆண்டுக்கு பிறகு ஒரு நாள் போட்டியில் அரைசதம் அடித்த ஷபாலி 56 ரன்னில் கொடுத்த எளிய கேட்ச் வாய்ப்பை அன்னெகே பாஷ் தவற விட்டார். அந்த வாய்ப்பை ஓரளவு பயன்படுத்திக் கொண்ட ஷபாலி தொடர்ந்து முன்னேறினார். சதம் அடிப்பார் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில் ஷபாலி 87 ரன்களில் (78 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) ேகட்ச் ஆனார். ஒரு நாள் போட்டியில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த திருப்தியோடு நடையை கட்டினார். அவரைத் தொடர்ந்து கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் வந்தார்.

ஆனால் அரைஇறுதி ஆட்டத்தின் நாயகி ஜெமிமா ரோட்ரிக்ஸ் இந்த முறை ஜொலிக்கவில்லை. அவர் 24 ரன்களில் (37 பந்து, ஒரு பவுண்டரி) பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த தீப்தி ஷர்மா சூழ்நிலையை உணர்ந்து பொறுப்புடன் செயல்பட்டார். இன்னொரு பக்கம் ஹர்மன்பிரீத் கவுர் 20 ரன்னிலும், அவரைத் தொடர்ந்து வந்த அமன்ஜோத் கவுர் 12 ரன்னிலும் வீழ்ந்தனர்.

இறுதி கட்டத்தில் தீப்தி ஷர்மாவுடன், விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் கைகோர்த்தார். சிறிது நேரமே நின்றாலும் சரவெடியாய் வெடித்து ஸ்டேடியத்தை குலுங்க வைத்த ரிச்சா கோஷ் 34 ரன்களில் (24 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விக்கெட்டை இழந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் குவித்தது. இரண்டு முறை கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்த தீப்தி ஷர்மா 58 ரன்களுடனும் (58 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்), ராதா யாதவ் 3 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். தென்ஆப்பிரிக்கா தரப்பில் அயாபோங்கா காகா 3 விக்கெட் கைப்பற்றினார்.

பின்னர் இறுதிப்போட்டியில் இதுவரை யாரும் விரட்டிப்பிடிக்காத ஒரு இலக்கை நோக்கி தென்ஆப்பிரிக்க அணி ஆடியது. தஸ்மின் பிரிட்ஸ் (23 ரன்), அன்னெகே பாஷ் (0), சுனே லுஸ் (25 ரன்), மரிஜானே காப் (4 ரன்), விக்கெட் கீப்பர் சினலோ ஜாப்தா (16 ரன்) ஆகியோர் குறிப்பிட்ட இடைவெளியில் நடையை கட்டினர்.

ஆனால் தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான லாரா வோல்வார்ட் நங்கூரம் பாய்ச்சியது போல் நிலை கொண்டு மிரட்டினார். இந்தியாவின் சுழல் ஜாலத்தை திறம்பட சமாளித்த அவர் சதத்தை நோக்கி துரிதமாக பயணித்தார். இதனால் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பது மதில் மீது பூனையாக தெரிந்தது. 6-வது விக்கெட்டுக்கு அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த அன்னெரி டெர்க்சென்னை 35 ரன்னில் தீப்தி ஷர்மா வீழ்த்தினார்.

ஆனால் இந்திய பவுலர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த லாரா வோல்வார்ட் தனது 11-வது சதத்தை எட்டினார். அவர் அரைஇறுதியிலும் சதம் அடித்தது நினைவிருக்கலாம். சதம் அடித்த கையோடு வோல்வார்ட் 101 ரன்களில் (98 பந்து, 11 பவுண்டரி, ஒரு சிக்சர்) சிக்கினார். அவர் தூக்கியடித்த பந்தை அமன்ஜோத் கவுர் தட்டுத்தடுமாறி பிடித்தார். 

அவர் வீழ்ந்ததும் ஒட்டுமொத்த ஸ்டேடியமும் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பால் அதிர்ந்தது. அப்போதே உலகக் கோப்பை கைக்கு வந்தது போல் கொண்டாடினர். எஞ்சிய விக்கெட்டையும் நமது பவுலர்கள் கபளீகரம் செய்து தென்ஆப்பிரிக்காவை 45.3 ஓவர்களில் 246 ரன்களில் சுருட்டினர். இதன் மூலம் இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக உலகக் கோப்பையை தட்டித்தூக்கியது. இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் தீப்தி ஷர்மா 5 விக்கெட்டும், ஷபாலி வர்மா 2 விக்கெட்டும்அள்ளினர்.

52 ஆண்டு உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய பெண்கள் அணி உலகக் கோப்பையை உச்சிமுகர்வது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு இரண்டு முறை இறுதி ஆட்டத்தில் (2005 மற்றும் 2017) தோற்றிருந்த இந்திய அணி இந்த முறை அந்த ஏக்கத்தை தணித்து ரசிகர்களுக்கு தித்திப்பான பரிசை அளித்துள்ளது. மகுடம் சூடிய இந்திய அணிக்கு ரூ.39½ கோடியும், 2-வது இடத்தை பிடித்த தென்ஆப்பிரிக்காவுக்கு 19¾ கோடியும் பரிசாக வழங்கப்பட்டது.

வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். ஒட்டுமொத்த தேசத்தையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திய இந்திய பெண்கள் அணிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory