» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

துணை ஜனாதிபதி பதவிக்கு சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டி: ஆட்சிமன்றக்குழு கூட்டத்தில் முடிவு!

திங்கள் 18, ஆகஸ்ட் 2025 8:59:34 AM (IST)



துணை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் மாதம் 9-ந்தேதி நடைபெறும் நிலையில், பா.ஜனதா கூட்டணி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டு உள்ளார். பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற ஆட்சிமன்றக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்திய துணை ஜனாதிபதியாக இருந்தவர், ஜெகதீப் தன்கர். நாட்டின் 16-வது துணை ஜனாதிபதியாக கடந்த 2022-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், கடந்த மாதம் 21-ந் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு பதவி விலகுவதாக ஜனாதிபதிக்கு அவர் கடிதம் அனுப்பினார். அவரது ராஜினாமாவை ஜனாதிபதி திரவுபதி முர்முவும் ஏற்றுக்கொண்டார்.

இன்னும் 2 ஆண்டுகள் பதவிக்காலம் இருந்த நிலையில் திடீரென ஜெகதீப் தன்கர் பதவி விலகியது மத்திய அரசு வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. இவ்வாறு தன்கர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, துணை ஜனாதிபதி பதவி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான ஆயத்தப்பணிகளை தேர்தல் கமிஷன் தொடங்கியது. இந்திய அரசியலமைப்பு சட்டப்படி, துணை ஜனாதிபதி பதவி காலியாக இருந்தால் அதற்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி தேர்தல் கமிஷன் பணிகளை முடுக்கி விட்டது.

குறிப்பாக துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய தகுதி வாய்ந்த ‘எலக்ட்டேரல் காலேஜ்’ எனப்படும் வாக்காளர்களின் தொகுப்பை தேர்தல் கமிஷன் உருவாக்கியது. அதன்படி நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்களும், மாநிலங்களவையின் நியமன உறுப்பினர்களும் துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டது.

அதாவது மாநிலங்களவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் 233 பேர் (தற்போது 5 இடங்கள் காலி), நியமன உறுப்பினர்கள் 12 பேர், மக்களவையின் 543 உறுப்பினர்கள் (தற்போது ஒரு இடம் காலி) ஆகியோர் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள் என தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதைத்தொடர்ந்து புதிய துணை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 9-ந் தேதி நடைபெறும் என கடந்த 1-ந் தேதி தேர்தல் கமிஷன் அறிவித்தது.

அதன்படி இந்த தேர்தலுக்கான அறிவிக்கை கடந்த 7-ந் தேதி வெளியிடப்பட்டு, அன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. வேட்புமனு தாக்கலுக்கான கடைசி தேதி வருகிற 21-ந் தேதி ஆகும். மறுநாள் (22-ந் தேதி) வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன. தாக்கல் செய்த வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான இறுதி நாள் 25-ந் தேதி ஆகும்.

துணை ஜனாதிபதி தேர்தலில் ஒன்றுக்கு மேற்பட்டோர் களத்தில் இருந்தால், அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்றத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும், அதைத்தொடர்ந்து உடனே வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்படும்.

இவ்வாறு துணை ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனே அடுத்த துணை ஜனாதிபதி யார்? மேலும், ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் யார்? என்ற எதிர்பார்ப்புகள் நாடு முழுவதும் நிலவி வந்தன. இந்த தேர்தலுக்கு வேட்புமனு தாக்கலுக்கான இறுதி நாள் நெருங்கி வரும் நிலையில் இந்த எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தது.

அதன்படியே ஆளும் கூட்டணியின் வேட்பாளரை தேர்வு செய்ய பா.ஜனதாவின் ஆட்சிமன்றக்குழு நேற்று டெல்லியில் கூடியது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் கட்சியின் தேசியத்தலைவரும், மத்திய மந்திரியுமான ஜே.பி.நட்டா மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த பா.ஜனதா மூத்த தலைவரும், மராட்டிய கவர்னருமான சி.பி.ராதாகிருஷ்ணனை (வயது 67) தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த ஜே.பி.நட்டா, இதை அறிவித்தார். கூட்டணி கட்சிகளை ஆலோசித்து சி.பி.ராதாகிருஷ்ணனை தேர்வு செய்ததாகவும் அவர் கூறினார்.

துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணனை ஒருமனதாக தேர்வு செய்ய வேண்டும் என கூறிய ஜே.பி.நட்டா, இது தொடர்பாக எதிர்க்கட்சிகளிடம் கடந்த வாரமே பேசியதாகவும், தொடர்ந்து அவர்களது ஆதரவை கோர உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆளும் கூட்டணியின் வேட்பாளர் யார் என்பதை அறிவித்த பிறகே அது குறித்து முடிவு எடுக்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறியதாகவும், தற்போது வேட்பாளரை அறிவித்துள்ள நிலையில், மீண்டும் அவர்களைத் தொடர்பு கொள்வோம் என்றும் அவர் கூறினார்.

சி.பி.ராதாகிருஷ்ணன் தனது 40 ஆண்டு பொதுவாழ்வில் அனைத்துக்கட்சிகள் மற்றும் பிரிவினருடனும் சிறந்த உறவுகளை பேணி வருவதாகவும், இதன் மூலம் அவரை போட்டியின்றி தேர்வு செய்ய எதிர்க்கட்சிகளும் ஒத்துழைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் விரைவில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்வார் என பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

இதில் பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள், பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகளின் முதல்-மந்திரிகள், துணை முதல்-மந்திரிகள் என ஏராளமானோர் பங்கேற்பார்கள் என கூறப்பட்டு உள்ளது.

எதிர்க்கட்சிகள் இன்று ஆலோசனை

முன்னதாக துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என இந்தியா கூட்டணியை சேர்ந்த சில கட்சிகள் கூறியிருந்தன. இது குறித்து இன்று (திங்கட்கிழமை) இந்தியா கூட்டணி சார்பில் மாநிலங்களவை எதிர்க்கட்சித்தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் அலுவலகத்தில் ஆலோசனை நடைபெறும் என தெரிகிறது.

ஆனால் நாடாளுமன்ற இரு அவைகளிலும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் அதிகமாக இருப்பதால் சி.பி.ராதாகிருஷ்ணன் எளிதில் வெற்றி பெறுவார் என அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

இரு அவைகளின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 782 ஆக (மொத்த எண்ணிக்கை 788-ல் 6 இடங்கள் காலி) இருக்கும் நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களின் எண்ணிக்கை 450-க்கு மேல் இருப்பதால் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி உறுதி என கூறப்படுகிறது.

இதற்கிடையே துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வாகி இருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். மேலும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory