» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காசிரங்கா தேசிய பூங்காவை பிரதமர் மோடி பார்வையிட்டார்: யானை மீது சவாரி செய்தார்!

ஞாயிறு 10, மார்ச் 2024 9:18:59 AM (IST)



அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவை பிரதமர் மோடி ஜீப்பில் சென்று சுற்றிப்பார்த்தார். அப்போது யானை மீது சவாரி செய்தும் மகிழ்ந்தார்.

அசாமின் காசிரங்கா தேசிய பூங்கா உலகப்புகழ்பெற்ற உயிரியல் பூங்காவாக உள்ளது. ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களுக்கு பெயர்பெற்ற இந்த பூங்காவை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோவும் அறிவித்து இருக்கிறது. இந்த புகழ்பெற்ற பூங்கா மற்றும் புலிகள் சரணாலயத்தை பிரதமர் மோடி நேற்று சுற்றிப்பார்த்தார். பிரதமராக முதல் முறையாக அங்கு சென்ற மோடி சுமார் 2 மணி நேரம் அங்கே செலவிட்டார்.

இதில் முதலில் அவர் பூங்காவில் யானை சவாரி செய்தார். பிரத்யேக ஜாக்கெட் மற்றும் தொப்பி அணிந்து கொண்டு பிரதியும்னா என்ற யானை மீது ஏறி அவர் பூங்காவை சுற்றி வந்தார்.அவரது யானைக்குப் பின்னால் 16 யானைகள் அணிவகுத்து சென்றன. இந்த பயணத்தின்போது 3 யானைகளுக்கு உணவாக கரும்புகளை பிரதமர் மோடி வழங்கினார்.

பின்னர் அவர் ஜீப்பில் சென்று பூங்கா முழுவதையும் சுற்றிப்பார்த்தார். இடையில் டப்லாங் பகுதியில் உள்ள பார்வையாளர் கோபுரத்தில் ஏறி நின்று பூங்காவின் மொத்த அழகையும் கண்டு ரசித்தார்.பிரதமர் செல்லும் வழியில் ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள், காட்டெருமைகள், மான்கள் மற்றும் ஏராளமான பறவைகளை கண்டுகளித்தார். குறிப்பாக அவர் செல்லும்போது புலி ஒன்று அவரது பாதையை கடந்து சென்றது.

அவற்றை பிரதமர் மோடி தனது கேமராவில் படம் பிடித்தார். மேலும் ஆங்காங்கே நின்று கொண்டு பூங்காவின் அழகை புகைப்படம் எடுத்துக்கொண்டார்.முன்னதாக பூங்காவின் பாதுகாப்பு பணியில் முன்னணியில் இருக்கும் வனதுர்கா எனப்படும் பெண் வன ஊழியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

பிரதமரின் இந்த பயணத்தின்போது பூங்கா இயக்குனர் சோனாலி கோஷ் மற்றும் பிற மூத்த வன அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் உடனிருந்தனர்.காசிரங்கா பூங்காவுக்கு சென்றது குறித்து பிரதமர் மோடி பெரும் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘இன்று (நேற்று) காலையில் காசிரங்கா பூங்காவுக்கு சென்றிருந்தேன். இந்த பூங்கா காண்டாமிருகங்கள், யானைகள் மற்றும் ஏராளமான உயிரினங்களுக்கு பெயர்பெற்றது. 

நமது காடுகள் மற்றும் வன உயிர்களை துணிச்சலுடன் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வனதுர்கா குழுவினருடன் உரையாடினேன். நமது தேசிய பாரம்பரிய சின்னத்தை பாதுகாப்பதில் அவர்கள் காட்டும் அர்ப்பணிப்பு மற்றும் துணிச்சல் உண்மையிலேயே உத்வேகம் அளிப்பதாக உள்ளது’ என குறிப்பிட்டு இருந்தார். மேலும் இந்த பூங்காவின் அழகை கண்டு ரசிக்க செல்லுமாறு நாட்டு மக்களுக்கு அவர் அழைப்பும் விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory