» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இன்சாட் 3-டி.எஸ்.’ செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

ஞாயிறு 18, பிப்ரவரி 2024 8:40:36 AM (IST)

வானிலை தகவல்களை அறிந்து கொள்வதற்காக இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட ‘இன்சாட் 3-டி.எஸ்.’ செயற்கைகோளை சுமந்து கொண்டு ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் நேற்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

இந்தியாவுக்கான காலநிலை தகவல்களை அறிந்துகொள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தயாரித்த ‘இன்சாட் 3-டி மற்றும் 3 டி.ஆர் ஆகிய 2 செயற்கைகோள்கள் புவி வட்ட சுற்றுப்பாதையில் இருந்து காலநிலை தொடர்பான தரவுகளை அளித்து வருகிறது.

‘இன்சாட்’ அமைப்பின் திறன்களை கணிசமாக மேம்படுத்துவதற்காக முதன்மை நோக்கமாக கொண்டு இஸ்ரோவால் தற்போது அதிநவீன கருவிகளுடன் பிரத்யேகமாக வானிலை தகவல்களை முன்கூட்டியே தெரிந்து கொள்வதற்காக ‘இன்சாட் 3-டி.எஸ்' என்ற செயற்கைகோள் பெங்களூருவில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்கைகோள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா கொண்டுவரப்பட்டு பல்வேறு கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது. இது அதிக எடை கொண்ட செயற்கைகோள் என்பதால் விண்ணில் ஏவுவதற்காக இஸ்ரோ 3 நிலைகளுடன் 51.7 மீட்டர் உயரமும், 420 டன் எடையும் கொண்ட ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-14’ என்ற ராக்கெட்டை வடிவமைத்தனர்.

இதனை விண்ணில் ஏவுவதற்காக இறுதி கட்டபணியான 27½ மணி நேர கவுண்ட்டவுன் நேற்று முன்தினம் தொடங்கியது. தொடர்ந்து ராக்கெட்டையும், செயற்கைகோளையும் விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை 5.30 மணிக்கு கவுண்ட்டவுனை முடித்துக்கொண்டு, ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-14’ ராக்கெட் ‘இன்சாட் 3-டி.எஸ்' செயற்கைகோளை சுமந்து கொண்டு 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது.

இதனை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணித்துக் கொண்டிருந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் என்ஜினீயர்களுக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் கைகுலுக்கி வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார். அதேபோல் விண்ணில் ஏவப்படும் நிகழ்ச்சியை பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 10 ஆயிரம் பேர் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

விஞ்ஞானிகள் குடியிருப்பு மாடிகளில் இருந்து பொதுமக்களும் பார்வையிட்டனர். வானம் மேகமூட்டம் இல்லாமல் தெளிவாக இருந்ததால் ராக்கெட்டின் முதல் பகுதி பிரிந்து செல்வதைக் கூட பார்வையாளர்களால் நன்கு காண முடிந்தது.

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது: இந்தியாவுக்கான வானிலை தகவல்களை தெரிந்து கொள்வதற்காக ஏற்கனவே 2 செயற்கைகோள்கள் விண்ணில் செயல்பட்டு வருகின்றன. தொடர்ந்து தற்போது வானிலை தகவல்களை துல்லியமாக தெரிந்து கொள்வதற்காக 6 நவீன கருவிகளுடன் அடங்கிய ‘இன்சாட் 3-டி.எஸ்' என்ற செயற்கைகோள் ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட்டில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு உள்ளது.

ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் இது 16-வது ராக்கெட் ஆகும். அதேபோல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் மூலம் செயல்படும் 10-வது ராக்கெட் மற்றும் உள்நாட்டில் செயல்பாட்டில் உள்ள கிரையோ நிலையை சேர்ந்த 7-வது ராக்கெட் என்ற பெருமையே இந்த ராக்கெட் பெறுகிறது.

இதில் 6 சேனல் இமேஜர் மற்றும் 19 சேனல் சவுண்டர் கருவிகள் வானிலை ஆய்வுகளுக்காகவும், உயர்தர தரவுகளை சேகரிப்பதற்காகவும், செயற்கைகோள் உதவி, தேடல் மற்றும் மீட்பு டிரான்ஸ்பாண்டர் அனுப்பப்பட்டு உள்ளது. அத்துடன் இந்த செயற்கைகோளில் ‘டேட்டா ரிலே டிரான்ஸ்பாண்டர் (டி.ஆர்.பி.)’ போன்ற வித்தியாச தகவல் தரும் கருவிகளும் அதில் இடம்பெற்றுள்ளன.

இந்த கருவி தானியங்கி தகவல் சேகரிப்பு தளங்கள் மற்றும் தானியங்கி வானிலை நிலையங்களில் இருந்து தகவல்களை அளிக்கும். அத்துடன் நிலம் மற்றும் கடல் பரப்புகளை கண்காணிக்கும் வகையில் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இது தவிர பேரழிவு எச்சரிக்கை அமைப்புகளுக்கான தகவல்களை வழங்குவதுடன், முன்கூட்டியே எச்சரிக்கை அளிக்கும் திறன்களையும் கொண்டுள்ளது. இதன் மூலம் வானிலை மற்றும் பேரிடர் தொடர்பான தகவல்களை துல்லியமாக நாம் பெற முடியும். இந்த கருவிகள் ஓரிரு நாளில் செயல்பட தொடங்கும். இந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவியதில் பெருமிதம் கொள்கிறோம். இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory