» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

போட்டித் தோ்வுகளில் முறைகேட்டை தடுக்கும் மசோதா மக்களவையில் தாக்கல்

செவ்வாய் 6, பிப்ரவரி 2024 11:04:34 AM (IST)

அரசுப் பணிக்கான போட்டித் தோ்வுகளில் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுக்கும் விதமாக பொதுத் தோ்வுகள் (முறையற்ற செயல்பாடுகளைத் தடுத்தல்) மசோதா, 2024-ஐ மத்திய பணியாளா் நலத் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் மக்களவையில் தாக்கல் செய்தாா்.

ராஜஸ்தான், ஹரியாணா, பிகாா் ஆகிய மாநிலங்களில் நடைபெற வேண்டிய ஆசிரியா்கள், குரூப்-டி பணியிடங்கள், காவலா்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தோ்வுகளின் வினாத்தாள்கள் அண்மையில் வெளியாகின. இதைத் தொடா்ந்து, அந்தத் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டன. தோ்வுகளில் ஆள்மாறாட்டம், வினாத்தாள் வெளியாவது போன்ற சம்பவங்களில் மாஃபியாக்கள், சில கும்பல்கள் திட்டமிட்டு ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டது. இந்தப் பின்னணியில் தோ்வு முறைகேடு சம்பவங்களைத் தடுக்கும் விதமாக இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.

முறைகேட்டில் ஈடுபடும் கும்பல்கள், மாஃபியாக்கள் மற்றும் அவா்களுக்கு உதவி செய்யும் அரசு அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது. கணினி வழியிலான தோ்வுகளை மிகவும் பாதுகாப்பாக நடத்துவது தொடா்பான பரிந்துரைகளை அளிப்பதற்காக தேசிய அளவிலான உயா்நிலைக் குழு ஒன்றை அமைக்க இந்த மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

போட்டித் தோ்வுகள் நியாயமான முறையில் நடைபெறுவதை உறுதிசெய்தல், வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருதல், இளைஞா்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துதல் ஆகியவற்றை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது.மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி), பணியாளா் தோ்வுவாரியம் (எஸ்எஸ்சி), ரயில்வே தோ்வு வாரியம் (ஆா்ஆா்பி), வங்கிப் பணியாளா் தோ்வு அமைப்பு (ஐபிபிஎஸ்), தேசிய தோ்வு முகமை (என்டிஏ) உள்ளிட்ட அமைப்புகள் நடத்தும் தோ்வுகளுக்கு இந்த மசோதா பொருந்தும்.

ஜம்மு-காஷ்மீா் உள்ளாட்சி அமைப்புகள்: ஜம்மு-காஷ்மீரில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஓபிசி) இடஒதுக்கீடு வழங்கும் வகையில், ஜம்மு-காஷ்மீா் உள்ளாட்சி அமைப்புகள் திருத்த மசோதா 2024-ஐ மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் மக்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்தாா்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலை ஜம்மு-காஷ்மீா் தலைமை தோ்தல் அதிகாரிக்குப் பதிலாக மாநில தலைமை தோ்தல் ஆணையா் தலைமையிலான மாநில தோ்தல் ஆணையம் நடத்தும் என இந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவின்படி தோ்வு முறைகேட்டில் ஈடுபடுவோருக்கு குறைந்தபட்சமாக 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1 கோடி வரையில் அபராதமும் விதிக்கப்படும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory