» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

குடியரசு தின அணிவகுப்பில் சாகசம்: தூத்துக்குடி, குமரியை சேர்ந்த பெண் கமாண்டோக்கள் தேர்வு

ஞாயிறு 21, ஜனவரி 2024 10:54:50 AM (IST)



குடியரசு தின அணிவகுப்பு பேரணியில் மோட்டார் சைக்கிள் சாகசம் செய்வதற்காக தூத்துக்குடி, குமரி மாவட்டங்களை சேர்ந்த சி.ஆர்.பி.எப். பெண் கமாண்டோக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் டெல்லியில் தினமும் தீவிர ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சி.ஆர்.பி.எப்.-ல்.) உள்ள பெண் கமாண்டோ படையினர் கன்னியாகுமரி முதல் குஜராத் வரை ‘பெண்கள், பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம்' என்ற பெயரில் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணியை நடத்தினர். கடந்த ஆண்டு அக்டோபர் 5-ந்தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பேரணி, சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளான அக்டோபர் 31-ந்தேதி குஜராத் மாநிலத்தை சென்றடைந்தது.

பேரணியில் சென்ற பெண் கமாண்டோ படையினர் பல்வேறு சாகசங்களை குஜராத்தில் செய்து காட்டினர். இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 பெண் கமாண்டோக்கள் சிறப்பாகவும், திறமையாகவும் சாகசங்களை செய்தனர். இதையடுத்து வருகிற 26-ந்தேதி டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பு பேரணியில் பங்கேற்கும் வாய்ப்பு இவர்களுக்கு கிடைத்துள்ளது. தேர்வான 9 பேரில் தூத்துக்குடி மாவட்டம், முடிவைத்தானேந்தல் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரது மனைவி ஜான்சி மனோகரன் என்பவரும் ஒருவர்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-தென்மண்டலத்துக்கான சி.ஆர்.பி.எப். கமாண்டோ படையில் பணியாற்றுகிறேன். பெண் கமாண்டோக்கள் மோட்டார் சைக்கிள் பேரணியில் திறமையாக சாகசங்களை செய்து காட்டியதால், குடியரசு தின அணிவகுப்பு பேரணியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளோம். மொத்தம் 60 பெண் கமாண்டோக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளோம். அதில், நான் உள்பட 9 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். 

நாங்கள் ஒவ்வொரு குழுவாக சேர்ந்து குடியரசு அணிவகுப்பில் சாகசம் செய்ய உள்ளோம். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த விஜிலா, கலைவாணி ஆகியோருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிள் சாகசங்களை செய்துக்காட்ட உள்ளேன். இதற்காக நாங்கள் 3 பேரும் தினமும் கடுமையான ஒத்திகையில் ஈடுபட்டுள்ளோம். வருகிற 26-ந்தேதி ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சர்வதேச தலைவர்கள் முன்பு எங்களது சாகசங்களை செய்து காட்டி பாராட்டுகளை பெற உள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் முன்கூட்டியே தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் நம்பிக்கையுடன் பதில் அளித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory