» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மும்பையில் ரூ.18 ஆயிரம் கோடியில் மிக நீளமான கடல் பாலம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

சனி 13, ஜனவரி 2024 8:33:37 AM (IST)

மும்பையில் ரூ.18 ஆயிரம் கோடியில் அமைக்கப்பட்ட நாட்டிலேயே மிக நீளமான கடல் பாலத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.

நாட்டின் நிதி தலைநகராக விளங்கும் மும்பை மற்றும் அதன் அருகே உள்ள நவிமும்பை நகரங்களை இணைக்கும் வகையில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பிரமாண்ட பாலம் மும்பை-நவிமும்பை இடையே கடல் வழியாக 22 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில் 16.5 கி.மீ. கடல் மீதும், 5.5 கி.மீ. தரையிலும் கட்டப்பட்டு உள்ளது.

இந்த கடல் பாலத்துக்கு கடந்த 2016-ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 2018-ம் ஆண்டு கட்டுமான பணி தொடங்கியது. சுமார் 5 ஆண்டுகளாக நடந்து வந்த பணி கடந்த மாதம் முடிந்தது. சுமார் ரூ.18 ஆயிரம் கோடியில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த பாலம் நாட்டிலேயே நீளமான பாலம் ஆகும்.

மும்பை சிவ்ரி பகுதியில் தொடங்கும் கடல்பாலம் நவிமும்பையின் சிர்லேவில் முடிகிறது. கடல் பாலத்துக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது. அதன்படி ‘ஸ்ரீ அடல்பிகாரி வாஜ்பாய் டிரான்ஸ் ஹார்பர் லிங்க்' என பெயரிடப்பட்டு இருக்கிறது.

கடல்பாலத்தில் 6 வழிப்பாதைகள் உள்ளன. கூடுதலாக 2 அவசரகால பாதைகளும் உள்ளன. இந்த பாலத்தில் ஒரு நாளில் 70 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் செல்ல முடியும். தற்போது மும்பையில் இருந்து நவிமும்பை செல்ல 1½ முதல் 2 மணி நேரம் வரை ஆகியது. ஆனால் கடல்பாலம் மூலம் மும்பையில் இருந்து நவிமும்பைக்கு வெறும் 20 நிமிடங்களில் செல்ல முடியும்.

கடல்பாலத்தில் கார், பஸ், லாரி, ராட்சத வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள், ஆட்டோ செல்ல அனுமதி கிடையாது. இதில் காருக்கு ஒருமுறை செல்ல ரூ.250-ம், இருவழி பயணத்துக்கு ரூ.375-ம் சுங்க கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல ஒருமுறை செல்ல மினி பஸ்சுக்கு ரூ.400, பஸ், 2 ஆக்சல் லாரிக்கு ரூ.830, 3 ஆக்சல் லாரிக்கு ரூ.905, 4-6 ஆக்சல் லாரிக்கு ரூ.1,300, அதை விட நீளமான லாரிகளுக்கு ரூ.1,580 சுங்க கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நாட்டின் மிக நீளமான கடல்பாலத்தை பிரதமர் மோடி நேற்று திறந்துவைத்தார். அவர் மாலை 4 மணியளவில் மும்பை சிவ்ரி முனையில் பாலத்தை திறந்து வைத்தார். பின்னர் அங்கு வைக்கப்பட்டு இருந்த கடல்பாலம் தொடர்பான புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். இதையடுத்து அவர் திறந்து வைத்த பாலம் வழியாகவே காரில் பயணித்து நவிமும்பைக்கு சென்றார். அங்கு பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது.

இதில் அவர் கடல்பாலம் உள்பட ரூ.30 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான முடிவுற்ற மற்றும் பணிகள் மேற்கொள்ள வேண்டிய திட்டங்களை தொடங்கிவைத்தார். குறிப்பாக மும்பையில் ஆரஞ்சு கேட்-மெரின் டிரைவ் இடையே ரூ.8 ஆயிரத்து 700 கோடியில் 9.2 கி.மீ.க்கு அமைய உள்ள சுரங்கப்பாதை திட்டமும் அடங்கும். விழாவில் மராட்டிய கவர்னர் ரமேஷ் பயஸ், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரிகள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித்பவார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிரதமர் மோடியால் திறந்துவைக்கப்பட்டு உள்ள கடல்பாலம் மும்பை துறைமுகம், நவிமும்பை துறைமுகத்தை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு உள்ளது. மேலும் மும்பையில் இருந்து நவிமும்பை, புனேக்கு பயண நேரத்தை கணிசமாக குறைத்து உள்ளது.

எனவே கடல் பாலம் மும்பையின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும். மும்பையில் புதிய அடையாளமாக மாறி உள்ள இந்த பாலம் கட்ட 1.2 லட்சம் டன் இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 4 ஹவுரா பாலத்தையும், 17 பாரீஸ் ஈபிள் கோபுரங்களையும் கட்ட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory