» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரும் சிறை செல்ல வேண்டும்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

திங்கள் 8, ஜனவரி 2024 3:37:38 PM (IST)

பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை பெற்ற 11 குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்து குஜராத் அரசு பிறப்பித்த உத்தரவை சுப்ரீம் கோர்ட் இன்று ரத்து செய்துள்ளது. குஜராத் அரசின் முடிவை எதிர்த்து, பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பு விவரம் வருமாறு: குற்றவாளிகளை விசாரித்து தண்டனை விதிக்கும் மாநிலம்தான் குற்றவாளிகளின் மன்னிப்பு தொடர்பான மனுவை விசாரிப்பதற்கு தகுதியுடையது. இந்த வழக்கை மராட்டிய மாநிலம் விசாரித்தது. மற்ற பிரச்சினைகளுக்குள் நாம் செல்ல வேண்டியதில்லை. ஆனால், குஜராத் அரசு தனக்கு வழங்கப்படாத அதிகாரத்தை பயன்படுத்தியிருப்பதால், சட்டத்தின் ஆட்சி மீறப்பட்டிருக்கிறது. அந்த அடிப்படையில், குஜராத் அரசின் உத்தரவு ரத்து செய்யப்படவேண்டிய உத்தரவு ஆகும்.

குற்றவாளிகளின் கருணை மனுவை பரிசீலனை செய்யும்படி 2022-ம் ஆண்டு மே 13-ம் தேதி நீதிமன்றத்தின் மற்றொரு அமர்வு பிறப்பித்த உத்தரவும் செல்லாது. அதாவது, அந்த உத்தரவு, அதிகாரங்களை அபகரிப்பதற்கும் சட்டத்தின் ஆட்சியை மீறுவதற்கும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே, குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்து நிவாரணம் அளிப்பதற்கான குஜராத் அரசின் உத்தரவுகளை ரத்து செய்கிறோம். குற்றவாளிகள் அனைவரும் இரண்டு வாரங்களுக்குள் சிறைக்கு செல்ல வேண்டும். சிறை அதிகாரிகளிடம் சரண் அடையவேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்தின்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானுவை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. அவரது குடும்பத்தினர், உறவினர்கள் 14 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். பில்கிஸ் பானு, ஒரு ஆண் நபர், ஒரு குழந்தை என 3 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர்.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக 11 பேர் குற்றவாளிகள் என 2008-ம் ஆண்டு மும்பை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது. குற்றவாளிகள் 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளிகள் 11 பேரும், கருணை அடிப்படையில் குஜராத் அரசாங்கத்தால் கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory