» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

திரிணாமுல் காங். தலைவர் கைது: அமலாக்கத் துறையினர் மீது மீண்டும் தாக்குதல் முயற்சி!

ஞாயிறு 7, ஜனவரி 2024 12:00:16 PM (IST)

மேற்கு வங்கத்தில் ரேஷன் முறைகேடு வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஒருவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். அப்போது அவரது ஆதரவாளர்கள் அதிகாரிகளை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேற்கு வங்கத்தில் ரேஷன் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள், மாநில மந்திரி ஜோதிர்மோய் மல்லிக்கை கடந்த அக்டோபர் மாதம் கைது செய்தனர். இதன் தொடர்ச்சியாக அவரது ஆதரவாளர்கள் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் அடுத்தடுத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில் வடக்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தை சேர்ந்த ஒன்றிய தலைவர் ஷாஜகான் ஷேக் என்பவர் வீட்டில் சோதனை நடத்த நேற்று முன்தினம் அதிகாரிகள் சென்றனர். அப்போது அவரது ஆதரவாளர்களும், கட்சியின் தொண்டர்களும் அங்கே குவிந்து அமலாக்கத்துறை அதிகாரிகளை சரமாரியாக தாக்கினர். இதில் 3 அதிகாரிகள் பலத்த காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து சோதனை நடத்தாமல் அதிகாரிகள் திரும்பினர். 

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இதே வடக்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தின் பங்கான் நகராட்சியின் முன்னாள் தலைவரும், திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகருமான சங்கர் ஆத்யா மற்றும் அவரது உறவினர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்றுமுன்தினம் சோதனை நடத்தினர்.

ரேஷன் முறைகேடு வழக்கில் சுமார் 17 மணி நேரம் நடந்த இந்த சோதனைக்குப்பின் அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் அவரது பதில்கள் திருப்தி அளிக்காததால் நேற்று அவரை அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் அவரை தங்கள் காரில் ஏற்றி கொல்கத்தா கொண்டு செல்ல முயன்றனர்.

அதற்குள் சங்கர் ஆத்யாவின் கைது குறித்து தகவல் அறிந்ததும் அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் அங்கே கூடினர். அமலாக்கத்துறையினரின் காரை வழிமறித்த அவர்கள், அதிகாரிகளை தாக்க முயன்றனர். அத்துடன் அதிகாரிகளின் வாகனங்கள் மீதும் கற்களை வீசி தாக்கினர்.

அப்போது, அதிகாரிகளுக்கு பாதுகாப்புக்காக சென்றிருந்த மத்திய ரிசர்வ் படை (சி.ஆர்.பி.எப்.) வீரர்கள், கட்சியினர் மீது தடியடி நடத்தி கலைந்து போக செய்தனர்.பின்னர் கைது செய்யப்பட்ட சங்கர் ஆத்யாவுடன் அதிகாரிகள் கொல்கத்தாவுக்கு சென்றனர். முன்னதாக சங்கர் ஆத்யா மற்றும் அவரது உறவினர் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.8 லட்சம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இதற்கிடையே நேற்று முன்தினம் திரிணாமுல் காங்கிரசார் நடத்திய தாக்குதலில் காயமடைந்த அமலாக்கத்துறை அதிகாரிகளில் இருவர் ஆஸ்பத்திரியில் இருந்து நேற்று வீடு திரும்பினர். தலையில் காயமடைந்த மற்றொரு அதிகாரியின் உடல் நிலையும் சீராக இருப்பதாக கூறியுள்ள டாக்டர்கள், அவர் இன்று அல்லது நாளை வீடு திரும்புவார் எனவும் தெரிவித்தனர். அமலாக்கத் துறையினருக்கும், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே 2-வது நாளாக மோதல் நடந்துள்ள சம்பவம் மேற்கு வங்கத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory