» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அனுமதி பெறாத வாகனங்களைப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தக் கூடாது : ஆட்சியர் அறிவுறுத்தல்!

வெள்ளி 20, மார்ச் 2026 4:27:46 PM (IST)



அனுமதி பெறாத வாகனங்களைப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தக் கூடாது என்று திருநெல்வேலி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் அறிவுறுத்தினார். 

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் பணிகள் மற்றும் செலவினங்களைக் கண்காணிக்க வருகை தந்துள்ள பொதுப் பார்வையாளர்கள் மற்றும் செலவினப் பார்வையாளர்கள் பங்கேற்ற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான இரா.சுகுமார்,  தலைமை தாங்கினார். மாநகரக் காவல்துறை ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய், மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் பொதுப் பார்வையாளர்கள் ரிஷிகேஷ் பாஸ்கர் யசோத்,  மற்றும் அனுபா ஸ்ரீவஸ்தவா,  ஆகியோரும், தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் நரேந்திர ஏசரி, தீரஜ் குமார் ஜெய்ஸ்வால், மற்றும் வி.வினோத் குமார், ஆகியோரும் கலந்துகொண்டு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

முக்கிய அறிவுறுத்தல்கள்: இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குப்பதிவும், மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் தனித்தனி குழுக்கள் மூலம் விரைவாக நடைபெற்று வருகின்றன.

அரசியல் கட்சிகள் தேர்தல் செலவினங்களைக் கணக்கிடுவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சந்தேகங்கள் ஏதேனும் இருந்தால் பொதுப் பார்வையாளர்கள் மற்றும் செலவினப் பார்வையாளர்களைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு நிவர்த்தி செய்யலாம்.

பிரச்சாரக் கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் வாகனங்களுக்கு அனுமதி பெற 48 மணி நேரத்திற்கு முன்பே Suvidha இணையதளம் (https://suvidha.eci.gov.in) வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து பெறப்பட்ட அனுமதி ஆணையை வாகனத்தின் முன்புறத்தில் கட்டாயம் ஒட்டியிருக்க வேண்டும். அனுமதி பெறாத வாகனங்களைப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தக் கூடாது. தேர்தலைச் சுமூகமாகவும், அமைதியாகவும் நடத்துவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.துரை, மாநகராட்சி ஆணையர் மோனிகா ராணா,  சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆயுஷ் குப்தா,  மற்றும் தேர்தல் வட்டாட்சியர் முருகன் உள்ளிட்ட பல துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory